No menu items!

ஜி20 மாநாடு: என்னவெல்லாம் நடந்தது?

ஜி20 மாநாடு: என்னவெல்லாம் நடந்தது?

ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது இந்தியா. இந்த இரண்டு நாட்கள் மாநாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.

உலகளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் 20 நாடுகள் இணைந்து ஜி20 என்ற பெயரில் கூட்டமைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டமைப்பின் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான மாநாடு இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு நடைபெறுவது 18ஆவது மாநாடு. ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருளோடு டெல்லியில் செப்டம்பர் 9, 10ஆம் தேதிகளில் இம்மாநாடு நடைபெற்றது. உலக நாடுகள் அனைத்தும் பிரமாண்டமாக உற்றுநோக்கும் வகையில் சிறப்பாக இந்த மாநாட்டை நடத்தி முடித்துள்ளது, இந்தியா.

இரண்டு நாட்கள் மாநாடுதான் என்றாலும், இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிகுந்த முன் ஏற்பாடுகளுடன் புதுடெல்லியில் சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் தயாராகி சென்ற பிரமாண்டமான நடராஜர் சிலை பாரத் மண்டபத்தில் வைக்கப்பட்டது முதல் கோலாகலமான இரவு விருந்து வரை எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஜி மாநாட்டுக்காக உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்று பெயர் இடம்பெற்றிருந்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநாட்டிலும் பிரதமர் மோடிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்ற பெயரே இடம்பெற்றிருந்தது.

இந்த மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது. இதனால், ஜி20 கூட்டமைப்பு அடுத்த ஆண்டு முதல் ஜி21 கூட்டமைப்பாக மாறுகிறது.

இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் கையெழுத்தானது. இந்த பொருளாதார வழித்தடத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ரயில் மற்றும் கப்பல் வாயிலாக இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி20 மாநாட்டின் அமர்வு 1இல் ‘ஒரு பூமி’ என்ற தலைப்பில் பேசினார், பிரதமர் நரேந்திர மோடி. மனித மைய வளர்ச்சியின் அவசியத்தை எடுத்துரைத்த மோடி, இது இந்தியக் கலாச்சாரம் எப்போதும் வலியுறுத்தும் ஒன்றாகும் எனக் கூறினார்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்பட்டது. இதுபோல், இந்த மாநாட்டில் முக்கியமாகக் கவனிக்கப்பட்ட மற்றொரு விஷயம் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி. ‘உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் தொடக்கமானது நிலைத்தன்மை மற்றும் தூய்மையான ஆற்றலை நோக்கிய நமது தேடலில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. இந்த கூட்டணியில் இணைந்த உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று x தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்த மோடி.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்வது போல், உலகிற்கும் உலக மக்களுக்கும் தேவையானது உலக அமைதி தான். பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கருத்து அனைத்து தலைவர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்டது, இம்மாநாட்டின் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இதுபோல், இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுத் தீர்மானமும் அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 19ஆவது ஜி21 மாநாட்டை பிரேசில் நாடு நடத்த இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜி20 மாநாட்டின் இறுதியில், ஜி21 அமைப்பிற்கு தலைமை தாங்கி வழிநடத்தும் அதிகாரத்தை இந்திய பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் வழங்கினார். இதன் அடையாளமாக சம்பிரதாய வழக்கப்படி சுத்தியலை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் மோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...