“பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் மிடிப் பயம் கொல்லுவார்…” என்று புன்னகை தவழ பாடியவாறு வரவேற்றால், ‘பயம் கொல்லுவாரா… பயம் கொள்ளுவாரா’ என்று கேட்டு அமர்ந்தார் இலக்கியவாதி. நாட்டில் ஒருவித பயம் நிலவுகிறதாகக் கருதுபவர் அவர்.
“அரசியல் சட்டத்தைக் கொடுத்தவர்கள் தீர்க்கதரிசிகள்… இந்தியா என்கிற பாரத் என்று முன்பே எழுதி வைத்துவிட்டார்கள்” என்றார் இடதுசாரி முதிய தலைவர்.
“பின்னால் இருந்த ‘பாரத்’ முன்னுக்கு வருகிறது! சமூகத்தில் பின்னால் தள்ளப்பட்டவர்களை முன்னுக்குக் கொண்டுவருவதைச் சகிக்காதவர்கள் இன்னமும் இருக்கிறார்களே” என்றார் இலக்கியவாதி.
முட்டிக்கொண்டு நிற்கும் சனாதன விவகாரப் பாதிப்பு.
“இளம் அமைச்சர் எதிர்த்துப் பேசியது மூடநம்பிக்கைகளை வளர்த்த சனாதன கட்டமைப்புகளை. சமஸ்கிருதத்தில் ‘பசு’ என்றால் எல்லா மிருகங்களுக்கான பொதுப் பெயர். தர்மம் என்பது மதம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே, சனாதன தர்மத்தை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது என்று கருதுகிறார்கள். வேண்டுமென்றே கூட அப்படி அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்” என்றார் இடதுசாரி தலைவர். “கூட்டணி தர்மம் என்று அரசியல் அடிபடுகிறது. கூட்டணி மதம் என்று உண்டா?” என்றார்.
“உண்மையோ இல்லையோ பாஜகவின் பின்னணியில் சனாதன தர்மத்தின் பெயரால் காணப்பட்ட மூடநம்பிக்கைகள் மீண்டும் தலைதூக்குகிறதோ என்ற பயம் தமிழ்நாட்டில் இருக்கிறது” என்றார் இலக்கியவாதி.
சனாதனத்தின் சட்ட திட்டங்களைச் சொல்லி வளர்ந்த மூடநம்பிக்கைகள் எத்தனை எத்தனை! உடன்கட்டை ஏறும் கொடுமை! இந்தியாவில் மதங்கள் விஷயத்தில் தலையிடாத வெள்ளைக்கார அரசே திகைத்து அதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் மதத்தின் பெயரை சொல்லி வளர்ந்த மூடநம்பிக்கைகளை ஞானிகள், சித்தர்கள் எதிர்த்தார்கள். சிவவாக்கியர் பாடல்களை எண்ணிப் பாருங்கள்.
இலக்கியவாதி சில தகவல்களைக் கூறினார்.
“அப்பர் பெருமானுடைய தந்தையார் புகழனார் மரணமடைந்தபோது, அவருடைய மனைவி மாதினியார் உடன்கட்டை ஏறியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. அப்பருடைய தமக்கை திலகவதியார் பற்றி நாம் அறிவோம் அல்லவா? பல்லவர்களிடம் சேனாதிபதியாக இருந்த கலிப்பகையாருக்கும் திலகவதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், யுத்தத்தில் கலிப்பகையார் இறந்துபோனார். திருமணத்திற்கு முன்புதான். ‘அவர்தானே என் கணவர்’ என்று திலகவதியார் உடன்கட்டை ஏற முயல்கிறார். அப்பர் அவரை உடன்கட்டை ஏறவிடவில்லை. நானும் உயிர் துறப்பேன் என்று கூறி பலவிதங்களில் தடுக்கிறார். திலகவதியார் உடன்கட்டை ஏறவில்லை. மகாபாரதத்தில் பாண்டுவின் மனைவி குந்திதேவி உடன்கட்டை ஏறுவதைப் பெரியவர்கள் தடுத்து ‘5 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கு’ என்கிறார்கள்.”
இடதுசாரி தலைவர், “ஒரு கட்டம் வரை சனாதனம் எளிமையையும் ஒழுங்குமுறையை வற்புறுத்தி மக்களை வழிநடத்தி இருக்கிறது. உதாரணமாக பிராமணர்கள் ஆற்றங்கரை ஓரம் வசிக்க வேண்டும் என்று விதி இருந்தது. அங்கே வளரும் கீரைகளைப் பறித்து சமைக்க வேண்டும்… அவர்கள் கடன் வாங்கவே கூடாது. இப்படியெல்லாம் அவர்களுக்குக் கடுமையான விதிமுறைகள்! அவர்கள் தினசரி கடமைகளை முடித்து சாப்பிடப் பகல் 2 மணி ஆகும். இவையெல்லாம் அந்த சனாதனத்தை அவர்கள் பின்பற்றிய காலத்தில். எளிமை… எளிமை… எளிமை… எல்லா மக்களுக்கும் சனாதானம் இதையே வற்புறுத்தியது ஒரு காலம்! எல்லாமே காலப்போக்கில் ஊழல் மலிந்துவிடுகிறதே! சனாதனம் மட்டும் தப்புமா!” என்றார்.
“சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. காலத்தின் கட்டாயத்தினால் – சீர்திருத்தங்களில் கடுமை காட்டியவர்தான் பெரியார். தொண்டில் பழுத்த பழமாக, தூய தாடி மார்பில் விழ, சுத்தமான வாழ்க்கை பின்னணியால் அவரது மண்டை சுரப்பியைத் தமிழர்கள் ஏற்றார்கள்” என்றும் அவர் கூறினார். அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்துக்கு மாறியதைப் பெரியார் எதிர்த்தார். இந்து மதத்திலிருந்து கொண்டுதான் மாற்றங்களுக்குப் போராட வேண்டும் என்று பெரியார் வற்புறுத்தினார். இதை இடதுசாரி தலைவர் நினைவுபடுத்தினார்.
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் பெரியார் இயக்கத்தினரும் நாட்டு நலனுக்காக சமூக சீர்திருத்தங்களைச் செய்தார்கள். பல நல்ல சமூக சீர்திருத்தங்களைச் செய்த ஜஸ்டிஸ் ஆட்சி வழிநடத்தியவர்கள் இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள். நெற்றியில் மதச்சின்னம் அணிந்தவர்கள். கோயில் கும்பாபிஷேகங்களை நடத்தினார்கள். அதுவேறு… சமுதாயத்தில் தீண்டாமை போன்ற அருவருக்கத்தக்கவை அகற்றப்படத் துடித்தார்கள். நியாயம்தானே!
காஞ்சி மகான் ஒரு சமயம் கூறினார். “சனாதன தர்மத்தைக் கைவிட்டு உணவு, உடை, உருவத்தை மாற்றிக்கொண்டு வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறவர்கள்… மற்ற சமூகத்தவர் மட்டும் அன்றைய சனாதன விதிப்படி வாழ வேண்டும் என்பது எப்படி சரியாகும்?” என்றார். “அவர்களும் போட்டிக்கு வருவதைத் தடுக்க நினைப்பது எப்படி சரியாகும்?” என்றும் கூறினார்.
“கடிகாரத்தைப் பின்னோக்கி தள்ள முடியாது. இளம் அமைச்சரின் பேச்சு சரியாக புரிந்துகொள்ள முடியாமல் போகாது. மூடநம்பிக்கைகளின் ஆதிக்கம் இனி சாத்தியமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் இளம் குழந்தைகள் கல்வி தேர்வுகளில் முதலிடம் பெறுகிறார்களே! அவர்களது ‘ஜீன்’ வர்ணாஸ்ரம மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட்டாயிற்று என்பதற்கு இதுதான் அடையாளம்.”
“அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்படுகிறது. ‘ராமராஜ்யம் என்பது என்ன?’ என்று காந்தியடிகளின் கருத்துகளை பார்த்து இன்றைய ராமதாஸர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆயுதம் எடுப்பதல்ல. ராமராஜ்யத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களே இல்லை. ஒருவர் கருத்தானாலும் தள்ளிவிடக்கூடாது என்பதுதான் ராமர் கூறியது. கோயில் பிரம்மாண்டமாகக் கட்டலாம்! ராமர் இருக்கவேண்டும்.”
இடதுசாரி தலைவர் நிறுத்தினார். இலக்கியவாதி அவருக்கே சொந்தமான பெருமூச்சோடு எழுந்தார்.
ஒரே ஒரு ராமாயண காட்சியைத் தெரிவித்தவாறு நகர்ந்தார்.