ஐபிஎல் போட்டிக்குப் பிறகு காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட தோனி, இப்போது வீட்டில் ஓய்வு எடுக்கிறார் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அவரோ யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடி இருக்கிறார். டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
துபாயை அடிப்படையாகக் கொண்ட ஹிதேஷ் சங்வி என்ற பிஸினஸ்மேன், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் போட்டியின்போது இருந்ததுபோல் அல்லாமல் மிக நீண்ட கூந்தலுடன் இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார் தோனி. அவருடன் விளையாடும் டொனால்ட் ட்ரம்ப், தான் வழக்கமாக அணியும் தொப்பியை அணிந்திருக்கிறார். புகைப்படங்கள் மட்டுமின்றி தோனியும், ட்ரம்ப்பும் விளையாடும் ஒரு சிறு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஹிதேஷ் சங்வி.
முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா சென்றிருந்த தோனி, அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டிகளை கண்டு ரசித்துள்ளார். இதில் கார்லோஸ் அல்காரஸுக்கும், அலெக்சாண்டர் செரேவுக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டியை அவர் ரசித்த புகைப்படங்கள் சில பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன.
டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின்பேரில் அவரது இடத்துக்கு சென்று தோனி கோல்ஃப் விளையாடியதாக சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த முறை ஜோ பைடனிடம் போட்டியிட்டு தோல்வியடைந்த டொனால்ட் ட்ரம்ப், பின்னர் பல வழக்குகளில் சிக்கினார். கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் அடுத்த முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அங்குள்ள இந்திய வாக்காளர்களைக் கவர, அவர்களின் ஃபேவரைட் கிரிக்கெட் வீர்ரான தோனியை தன்னுடைய இடத்துக்கு அழைத்து அவர் கோல்ஃப் விளையாடி இருப்பதாக அமெரிக்காவில் பேசப்படுகிறது.