நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்தால் உடனே அனைவரும் செய்வது மெடிக்கல் ஷாப் சென்று ‘டைஜீன்’ ஜெல் வாங்கி சாப்பிடுவதுதான். மருத்துவர்களிடம் சென்றாலும் ‘டைஜீன்’ ஜெல்லை தான் பெரும்பாலும் பரிந்துரைப்பார்கள். ஆனால், இந்த டைஜின் ஜெல்லிலேயே இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக ஏகப்பட்ட புகார்கள். இதனால், விநியோகத்தில் இருக்கும் மருந்துகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது, அதன் தயாரிப்பு நிறுவனமான அப்போட் (Abbott).
ஏன், என்ன பிரச்சினை?
வழக்கமாக ‘டைஜீன் ஜெல்’ இனிப்பு சுவையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், ஆகஸ்ட் மாதம் வாங்கப்பட்ட இந்த மருந்து வெள்ளை நிறத்தில் மாறிவிட்டதாகவும் சுவை கசப்பாக இருப்பதாகவும் மிகக் கடுமையான மணம் வீசுவதாகவும் பொதுமக்களில் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆன்டாக்சிட் டைஜீன் ஜெல் மருந்தை அப்போட் நிறுவனம் தாமாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், இதனை நோயாளிகள் யாரேனும் எடுத்துக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 31ஆம் தேதியே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும் பொதுமக்களுக்கு நேற்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், இந்த மருந்து பாதுகாப்பற்றது மற்றும் எதிர்மறை சிக்கல் ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், யாராவது இந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால், அவர்கள் பயப்பட வேண்டாம்; மிக நீண்ட நாள்களுக்கு இந்த மருந்தை உட்கொண்டிருந்தால் மட்டும் அவர்கள் மருத்துவர்களை நாடலாம் என்றும் கூறியுள்ளது.
அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களின் மொத்த மருந்துப்பொருள் விற்பனையாளர்களுக்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், அப்போட் நிறுவனத்தின் கோவா தொழிற்சாலையில் உற்பத்தியான ‘டைஜின்’ ஜெல் மருந்தை விற்பனையிலிருந்து நீக்குமாறு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் தங்கள் நோயாளிகளுக்கு இந்த மருந்தை பரிந்துரைப்பதை நிறுத்தும்படியும் இந்த மருந்தை உட்கொண்டு, அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதுகுறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக ‘டைஜீன்’ ஜெல் குடித்து வரும் நபர்கள், தங்கள் பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் தயாரிப்பு மையம் விவரத்தைப் பார்க்கும் படியும் அதில் கோவாவில் உள்ள அப்போட் மருந்து தயாரிப்பு மையத்தில் தயாரானதாக இருந்தாலோ, ஜெல் நிறம், சுவை மாறியிருந்தாலோ அதைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என தெரிவித்துள்ளது.
மாற்று மருந்து என்ன?
“உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது. நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும்.
குறிப்பாக கேஸ்ட்ரிக் பாதிப்புக்கு காரணம் உடலில் இருக்கும் இரும்பு சத்துக்கள் குறைபாடு. இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது, கொழுப்புகள் தான் சேரும் மற்றும் உடல் மிகவும் சோர்வு தன்மையை கொடுக்கும்.
செரிமானத்துக்கு தேவையான என்சைம் குறைந்த அளவில் இருந்தால் நாம் எந்த உணவுகளை எடுத்து கொண்டாலும் ஒவ்வாமை ஏற்பட்டு சில கோளாறுகளை ஏற்படுத்தும். பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்துகொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும்.
மலச்சிக்கல், உடல்கனமாதல், தலைவலி, பசியின்மை, எந்த வேலையிலும் அக்கறையின்மை, உணவு வெகு நேரம் குடலில் தங்கி வாயு உருவாகுதல், வயிறு வீங்கி வலி ஏற்படுதல், சாப்பிட உடன் தூக்கம் வராமல் தவித்தல், சாப்பிட உடனே வயிற்றில் உப்புசம் காணப்படுதல், தொடர் எடை அதிகரிப்பு அல்லது குறைவு; வியர்வை, வாய், நாசித்துளை ஆகியவற்றில் வெளிப்படும் துர்நாற்றம், மலச்சிக்கல், சருமத்தில் திடீர் என்று ஏற்படும் பருக்கள், பசியின்மை, புளியேப்பம், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் செரிமான கோளாறுகள் இருக்கும் என்பதை குறிக்கும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே நாம் எடுப்பது, ஜெலுசில் அல்லது டைஜின் மாத்திரைகளைத் தான். இப்போது டைஜின் வேண்டாம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பே சொல்லிவிட்டது. என்ன செய்யலாம்?
“ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள்” என்கிறார் எம்.மூர்த்தி.
“நெஞ்செரிச்சலா ஒரு டம்ளர் வெந்நீரை, மெதுவாகப் பருகுகினால் போதும் கொஞ்ச நேரத்தில் நெஞ்செரிச்சல் போன இடம் தெரியாது. பொதுவாகவே சாப்பிட்ட பின் சுடச்சுட வெந்நீர் குடிக்கலாம்.
தினந்தோறும் குறைந்தபட்சம் 2 லிட்டர், அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று தண்ணீரின் மகத்துவம் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடம் இல்லை. அதற்கு இணையாக வெந்நீரும் உடல் நலத்திற்கு நல்லது.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் வெந்நீர் கைகண்ட மருந்து; உடனடி நிவாரணம் நிச்சயம்.
திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாமல், ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி ஏற்படலாம்” என்கிறார் டாக்டர் எம். மூர்த்தி.