சினிமாவில் சில நட்சத்திரங்கள் உச்சத்தைத் தொடுவது கூட எளிதான விஷயம்தான். ஆனால் அந்த உச்சத்தைத் தொட்ட பிறகு, அடுத்து என்ன என்று எழும் கேள்விக்குதான் அவர்களிடம் பதில் இருக்காது.
அப்படியொரு சூழலில் இருக்கும் நட்சத்திரத்திற்கு பெரும் உதாரணம் ரஜினிகாந்த்.
அளவான பட்ஜெட், நல்ல கதை, தெளிவான திட்டமிடல் என தொடர்ந்து நடித்து வந்த ரஜினிகாந்த், ஏவிஎம்-மின் ’சிவாஜி’ படத்தில் நடித்தப்பிறகு, பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களில்தான் நடிக்க முடியும் என்ற கட்டாய சூழலுக்குள் தள்ளப்பட்டுவிட்டார். அடுத்தடுத்து வந்த ‘எந்திரன்’, ‘2.0’ போன்ற படங்களும் ரஜினியை பெரும் பட்ஜெட் நடிகராக்கிவிட்டன. இதனால் ரஜினிக்கு முன்பு போல் நினைத்த படங்களில் நடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதேபோல் இப்போது சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டம், 7 கோடி ரூபாய் சம்பளம் என தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறார் நயன்தாரா.
இப்பொழுது பாலிவுட்டிலும் ஷாரூக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்திருப்பதால், அடுத்து என்ன என தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக நயனுக்கு நெருங்கிய வட்டாரம் கிசுகிசுக்கிறது.
’ஜவான்’ படத்தின் வெற்றியைப் பொறுத்தே, பாலிவுட்டில் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது தெரியவரும். இதனால் தொடர்ந்து கைக்கொடுக்கும் தென்னிந்தியப் படங்களில் மட்டுமே நடிக்கலாம் என்று அவருக்கு நெருங்கிய தரப்பு அறிவுரைகளை அள்ளிவிடுகிறதாம்.