‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய், அதன் பெயருக்கேற்ப, கடந்த சில நாட்களாக சென்னையில் மக்களிடையே பரவி வருகிறது. இது வேகமாக பரவக்கூடியது என்பதால் பாதிப்பு உள்ள மாணவர்கள் ஸ்கூலுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.மெட்ராஸ் ஐ பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்ன செய்ய வேண்டும்? விழி ஒளி பரிசோதகர் பிரேம்குமார் தரும் சிம்பிள் டிப்ஸ் இங்கே…
ஏன் வருகிறது?
“இது ஒரு சீசன் நோய். கண்ணில் கன்ஜங்டிவா (conjunctiva) என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் பாதிப்பால் வரும் நோயாகும் இது. அடினோ வைரஸ் என்ற கிருமியினால் இது வருகிறது. வெயில் காலத்தை தொடர்ந்து வரும் மழைக் காலங்களில் மண்ணில் உள்ள இந்த கிருமி காற்றில் பரவி, அதன் மூலம் கண் பாதிப்புக்கு உள்ளாகிறது. மழைக்காலம் முடிந்ததும் குறைந்துவிடும்.
சிலருக்கு ஒரு கண்ணிலும் சிலருக்கு இரண்டு கண்ணிலும் பாதிப்பு ஏற்படலாம். தமிழ்நாட்டில், முதன்முதலில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் இது கண்டறியப்பட்டதால் ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கிறார்கள்.
‘மெட்ராஸ் ஐ’ என்று பெயர் இருப்பதால் சென்னையில் உள்ளவர்களை மட்டும் இது பாதிக்கும் என கருத வேண்டாம். சேலம், தர்மபுரி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி என தமிழ்நாடு முழுவதும் இதன் பாதிப்பு இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டத்தில் கண் சிகப்பாக காட்சியளிக்கும். அடுத்து கண்ணில் எரிச்சல் இருக்கும்; கடைசியில் கூச்சம் இருக்கும். கடைசி வரைக்கும் போகாமல் முதல் கட்டத்திலேயே மருந்து எடுத்துக்கொண்டால் சுலபமாக சரிசெய்துவிடலாம். சிகிச்சை எடுத்துக்கொள்ள காலதாமதப்படுத்தினால், கண்ணில் கருவிழியில் சிறுசிறு தழும்புகளை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இதனுடன் சேர்ந்து பாக்டீரியா கிருமி பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
கண் சிவப்பாக இருந்தால் உடனே ‘மெட்ராஸ் ஐ’ என்று நினைத்துக்கொண்டு தாங்களாகவே மருந்துக் கடை சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கண் சிவப்பு அறிகுறி இருந்து ‘மெட்ராஸ் ஐ’ இல்லாமலும் இருக்கலாம். எனவே, மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனைபடியே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கண்ணை கழுவிவிட்டு மருந்து போட வேண்டும். மருந்து எடுத்துக்கொள்ள தொடங்கி சில நாட்களில் சரியாகிவிடும். அதுவரை போர்வை, தலையணை உறை, துண்டு, கைக்குட்டை போன்றவற்றைத் தினமும் சுத்தமாகத் துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
ஈரமான துண்டை வைத்துத் துடைத்து முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவி அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்ட கண்ணை கைகளால் தொடக் கூடாது. அப்படி கண்ணைத் தொட நினைத்தால் கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டுத் தொட வேண்டும். தொட்ட பிறகும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
அடிக்கடி செல்போன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் தனித்திருப்பதாலும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதாலும் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.
வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?
‘மெட்ராஸ் ஐ’ ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் ஒரு நோயாகும். எனவே, பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தால் அவர் உபயோகிக்கும் டவல், போர்வை, தலையணை போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
பாதிக்கப்பட்டவர் கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். இதன் மூலம் காற்றில் கலந்துள்ள அடினோ கிருமி பாதிப்பில் இருந்து கண்ணை தற்காத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால், அவர்கள் மூலம் பல மாணவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது.
‘மெட்ராஸ் ஐ’ வந்தவர்கள் கண்ணை நேருக்கு நேர் பார்த்தால் இந்த பாதிப்பு தொற்றிவிடும் என்று மக்களிடையே நம்பிக்கை உள்ளது. இது தவறானது” என்றார்.