மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மணிசித்ரதாழு’. இந்தப் படத்தை கொஞ்சம் மாற்றி கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் இயக்கினார் பி.வாசு. கன்னடத்திலும் பெரும் வெற்றி. இதனால் பி.வாசுவை வைத்து சிவாஜி ப்லிம்ஸ் தமிழில் ‘சந்திரமுகி’யை எடுத்தது. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, விஜய குமார் என பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடன் வெளிவந்தது. ஒரு சாதாரண படத்திற்கான பட்ஜெட்டில் உருவான சந்திரமுகி, பெரும் வசூலை ஈட்டி லாபம் கொடுத்தப்படம். இதனால் ரஜினியின் சினிமா பயணத்தில் சந்திரமுகிக்கும் ஒரு தனி இடமுண்டு.
இப்படியொரு பின்னணியில் 2005-ல் வெளியான சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை இப்போது பி. வாசு இயக்கி வருகிறார். இதில் முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்களில் ரஜினி, நயன்தாரா இல்லை. இவர்களுக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ், பாலிவுட்டின் சர்ச்சை நாயகி கங்கனா ரனவத் ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர்த்து, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார், மஞ்சிமா மோகன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் என அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் முதலில் கங்கனா ரனவத்தை நடிக்க வைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லையாம். இந்த கதாபாத்திரத்திற்கு காஜல் அகர்வாலைதான் முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் காஜலுக்கும் முன்னால் ’சந்திரமுகி’ குழு கதாநாயகி கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவியை அணுகியது பலருக்கும் தெரியாது.
பி.வாசு சொன்ன கதை முழுவதும் கேட்ட சாய் பல்லவி உடனடியாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் க்ளைமாக்ஸில் ஒரு சிறிய மாற்றம் பண்ணினால் நன்றாக இருக்கும். அந்த மாற்றத்தை செய்தால் நான் நடிக்க இப்பொழுதே தயார் என்று சொல்லிவிட்டாராம். ஆனால் க்ளைமாக்ஸில் மாற்றம் எல்லாம் செய்ய முடியாது என பி.வாசு தீர்மானமாக மறுத்துவிட்டாராம். இதனால் சாய் பல்லவி ’சந்திரமுகி 2’-ல் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
தனுஷூடன் கைக்கோர்க்கும் நாகார்ஜூனா?
அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் தமிழ் நடிகர்களில் கார்த்திக்கு அடுத்து தனுஷ் இருக்கிறார்.
2017-ல் இயக்குநராக அறிமுகமான தனுஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து இயக்கவிருக்கும் டி50 படத்திற்குப் பிறகு, பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ராஷ்மிகாவின் கால்ஷீட் தயாராக இருந்த போதிலும் இப்பட வேலைகள் ஆரம்பிக்கவில்லை.
இந்தப் படத்தின் ஷூட்டின் ஆரம்பிக்க தாமதமானது. இதற்கு காரணம் தனுஷூடன் பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவரை நடிக்க வைக்கும் திட்டமிருந்ததாம். இயக்குநரும் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர். மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளையும் குறிவைத்து எடுக்கவிருக்கும் படம். இதனால் யாரை நடிக்க வைப்பது என்பது குழப்பமாக இருந்ததாம்.
இப்பொழுது இந்தப் படத்தில் நாகார்ஜூனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் சேகர் கமுலா சொன்ன கதையை முழுவதுமாக கேட்டப்பிறகே நாகார்ஜூனா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இதையடுத்து ஏறக்குறைய இருபது வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனா தமிழில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகார்ஜூனா இப்பட த்தில் நடிக்க ஒப்புக்கொண்ட தற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது. இவரது மகன் நாக சைதன்யா நடித்த சமீபத்தியப் படங்கள் எதுவும் ஓடவில்லை. ஆனால் நாக சைதன்யாவுக்கு மிகப்பெரும் ஹிட் படமாக அமைந்த ‘லவ் ஸ்டோரி’ படத்தை இயக்கியது இதே சேகர் கமுலாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஃபியா மற்றும் அரசியலை பின்னணியாக கொண்ட இப்படம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.