மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆன்மிக சுற்றுலா வந்திருந்த வட இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணம் என்ன? இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? இது தொடர்பாக, தமிழ்நாடு ரயில் பயணிகள் தீர்வகம் இணை ஒருங்கிணைப்பாளர், ஏ.வி.எஸ். மாரிமுத்து ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.
மதுரை ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்துக்கும் அதில் ஒன்பது பேர் உயிரைப் பறிகொடுத்ததற்கும் யார் காரணம் என்று சொல்வீர்கள்?
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், வெடி பொருட்கள் போன்ற எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் பயணம் செய்யும்போது எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்பது காலம்காலமாக இருக்கும் சட்ட விதி. ஆனாலும், இதுபோல் கும்பலாக ஆன்மிக சுற்றுலாவோ அல்லது பொழுதுபோக்கு சுற்றுலாவோ செல்பவர்கள் தங்கள் தேவைக்காக எடுத்துக்கொண்டு செல்வதை ரயில்வே நிர்வாகமும் ரயில்வே காவல்துறையும் கண்டும் காணாமல் இருந்து வந்தது. இப்படி அதிகாரிகள் சட்ட விதிகளை அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் இந்த ரயில் விபத்துக்கும் ஒன்பது பேர் உயிரிழப்புக்கும் காரணம்.
அதேநேரம், முன்பெல்லாம் இதுபோல் சுற்றுலா செல்பவர்கள் புக் செய்துள்ள பெட்டிகளை எதாவது ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தும்போது, பிளாட்பார்மில்தான் நிறுத்துவார்கள். அப்படி பிளாட்பார்மில் நிறுத்தியிருந்தால், சமையல் செய்வது போன்ற வேலைகளை ரயில் பெட்டிக்குள்ளேயே வைத்து செய்யாமல் பிளாட்பார்மில் வைத்து செய்வார்கள். இதுபோல் நடப்பதை பல்வேறு ரயில் நிலையங்களில் நீங்களும் பார்த்திருக்கலாம். இதுவும் சட்டப்படி தவறுதான் என்றாலும், இந்நிலையில் விபத்து நிகழ்ந்தாலும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
மதுரை சம்பவத்தில் என்ன நடந்துள்ளது என்றால், சுற்றுலா பயணிகள் இருந்த பெட்டியை, மதுரை ரயில் நிலையத்திலேயே காலியாக இருந்த பிளாட்பார்மில் நிறுத்தாமல், ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தள்ளி நிறுத்தி இருக்கிறார்கள். அந்த பயணிகளை மனிதர்களாக கருதியிருந்தால் அதிகாரிகள் இதுபோல் செய்திருக்கமாட்டார்கள். விலங்குகளை கையாள்வது போல் அந்த மனிதர்களை அதிகாரிகள் கையாண்டுள்ளார்கள். எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலை, பெட்டியில் இருந்து பயணிகள் கீழே இறங்க வேண்டுமென்றால்கூட தண்டவாளத்தில் இருந்து மூன்று அடி கீழே இறங்க வேண்டும். இளைஞர்களால் அது முடியும். வயதானவர்களால் சாத்தியமில்லை. இந்த விபத்தில்கூட அப்படித்தான் உடனே வெளியேற முடியாமல் வயதானவர்கள் மாட்டிக்கொண்டுள்ளார்கள். ஒருவேளை மதுரை ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் எதுவும் காலியாக இல்லையென்றால், பக்கத்திலேயே திருப்பரங்குன்றம் அல்லது கூடல் நகரில் காலியாக இருக்கும் ஒரு பிளாட்பார்மில் நிறுத்தியிருக்கலாம்.
இதுபோல் அறிவுபூர்வமாக யோசிக்காமல், அஜாக்கிரதையாகவும் முட்டாள்தனமாகவும் அதிகாரிகள் நடந்துகொண்டிருக்கிறார்கள். லக்னோவில் கேஸ் சிலிண்டரையும் விறகுக் கட்டைகளையும் அனுமதித்த அதிகாரிகள், இடையே கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், காவலர்கள் எல்லோருக்கும் இதில் பங்கு இருக்கிறது. இவர்களை எல்லாம் தண்டிக்காமல்.. இறந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் அறிவித்து ஒரு வழக்கமான சடங்காக்கிவிட்டார்கள். இது எந்தவகையிலும் பிரச்சினைகான தீர்வு இல்லை.
இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் வட இந்தியர்கள். இதனை ஒட்டி வட இந்தியர்களின் ரயில் பயண கலாச்சாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்குள்ளேயே ரயில் பயணங்களில் வட இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? இதற்கு தீர்வு என்ன?
டிக்கெட்டே எடுக்காமல் கும்பல் கும்பலாக பயணம் செய்வது, டிக்கெட் எடுத்தாலும் நிறைய லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு வருவது என்ற பழக்கம் அவர்களிடம் இருக்கிறது. ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே அவர்கள் வரமாட்டார்கள். ரயில்வே நிர்வாகத்தாலும் காவல்துறையாலும்கூட அவர்களை ஒன்றும் செய்யமுடியாமல் உள்ளது. நம்மிடம் இதை பார்க்க முடியாது. இதனால்தான் மோதல்கள் உருவாகிறது. ஆனால், அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்களில்தான் இது அதிகம் நடக்கும். இதுபோல் சம்பவங்களை தவிர்க்க மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் அனைத்து ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்த வேண்டும். ரயில் பெட்டி கதவுகள் ரயில் நிலையங்களில் மட்டும் ஆட்டோமெட்டிக்காக திறந்து மூடும்படி மாற்ற வேண்டும். அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்கள் டிக்கெட்டை குறிப்பிட்ட அளவுக்கு மேல் விற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியாது.