நிலவில் வெற்றிகரமாக இறங்கி அத்தனை இந்தியர்களின் மனதையும் மகிழ்ச்சியாலும் பெருமிதத்தாலும் பொங்க வைத்து விட்டது சந்திராயன் – 3ன் வெற்றி. குறிப்பாக சந்திராயன் வெற்றியில் தமிழர்கள் அதிகம் பங்கு பெற்றதால் தமிழர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.
அறிவியல் ரீதியான நிலவு பயணங்கள் தேவையா என்ற கேள்வி கடந்த பல வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது. நிலவின் மீது ஆர்வம் காட்டிய அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளே அதற்கு ஆகும் செலவைப் பார்த்து சற்று ஒதுங்கி நிற்கும் வேளையில் இந்தியா மிக குறைவான செலவில் நிறைவாக சாதனை நடத்தியிருக்கிறது.
சந்திராயன் 3க்கு ஆன மொத்த செலவு 615 கோடி ரூபாய். சில நாட்களுக்கு முன் நிலவுக்கு சென்ற ரஷ்ய விண்வெளிக் கலம் பழுதடைந்து நொறுங்கியது. அதற்கு ஆன செலவு 1600 கோடி ரூபாய். சீனாவுக்கு இதைவிட செலவு அதிகம். சீனாவின் நிலவுப் பயணம் 1752 கோடி ரூபாயில் முடிந்தது. இது மட்டுமல்ல, கிறிஸ்டோபர் நோலன் எடுத்த விண்வெளிப் படமான இண்டர்செல்லரின் தயாரிப்பு செலவு 1368 கோடி ரூபாய்.
மிகக் குறைந்த செலவில் இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. ஆனாலும் இந்த செலவு தேவையா? நிலவுக்கு சென்று என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விகளும் எழுந்துக் கொண்டு இருக்கிறது.
ஆனால் இந்தியாவில் செலவிடப்படும் பல செலவுகளுடன் ஒப்பிடும்போது நிலவு பயணத்தின் செலவு குறைவுதான்.
உதாரணமாய் பீகாரில் கங்கை நதியின் மீது பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 1717 கோடி ரூபாய். கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாலம் இரண்டு முறை இடிந்து விழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி வசிக்கும் மும்பை வீடு 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
சமீபத்தில் இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ விமானங்கள் வாங்குவதற்காக போயிங் நிறுவனத்துடம் ஒப்பந்தம் செய்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்.