நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Hunt for Veerappan’ சீரியஸைத் தொடர்ந்து வீரப்பன் வேட்டை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்காக விஜயகுமார் ஐபிஎஸ்ஸை சந்தித்தோம்.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ்ல இருந்த நீங்கள் அன்றைய முதல்வர் ஜெயலலலிதா முயற்சியால் தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள். சென்னை போலீஸ் கமிஷனராக 2001ல் பொறுப்பேற்கிறீர்கள். அங்கிருந்து வீரப்பனைப் பிடிக்க 2003 எஸ்.டி.எஃப்.க்கு தலைமையேற்கிறீர்கள். நீங்கள் வீரப்பன் வேட்டைக்கு தலைமையேற்று ஒரே வருடத்தில் அதாவது 2004ல் வீரப்பனை சுட்டுப் பிடித்து விடுகிறீர்கள். இத்தனை வேகமாக உங்களால் வீரப்பனை பிடிக்க முடிந்ததற்கு என்ன காரணம்?
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்னால், விரப்பனோடு எனக்கு என்ன தொடர்பு, நான் ஏன் இந்த ஆபரேசனுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றியும் சொல்ல வேண்டும். முதல் காரணம், நான் இருந்த சேலம் ஜில்லாவில் இருந்து வளர்ந்த ஆள் வீரப்பன். அந்த ஜில்லாவில் இருந்து 1989இல் நான் வெளியே போகும்போது, நான் கேள்விப்பட்ட ஆள் சேவி கவுண்டர் என்ற ஒருத்தர்தான். மேட்டூர் பக்கத்தைச் சேர்ந்தவர். காட்டுக்குள்ளேயே போகாமல் சந்தனம், யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர். வீரப்பன் பெயர் அப்போது நான் கேள்விப்படாதது.
சேவி கவுண்டர் குழுவில்தான் வீரப்பன் இருந்துள்ளான். ஆனால், அப்போது வீரப்பன் பெயர் வெளியே வரவில்லை. அதன்பின்னர் தன் சொந்த திறமையால், சீனியர்களை எல்லாம் தாண்டி மேலே வந்துவிட்டான். ஒரு வேலையை கொடுத்தால் அதை சரியாக முடிப்பான் என்பதால் வீரப்பனுக்கு அதிக முக்கியத்துவத்தை சேவி கவுண்டர் கொடுத்து வந்தார். சேவி கவுண்டருக்கு பின்னர் தனக்கு எதிராக இருந்தவர்களை எல்லாம் வீரப்பன் காலி செய்துவிடுகிறான். மற்றவர்கள், வீரப்பனைவிட வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் அவனது பயங்கரமான நடவடிக்கைகள் காரணமாக பயந்து அவனுக்கு கட்டுப்படுகிறார்கள். வீரப்பன் கேங்க் லீடர் ஆகிவிடுகிறான்.
சேலம் ஜில்லாவில் இருந்து எஸ்.பி.ஜி. எனப்படும், அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி பாதுகாப்பு குழுவுக்கு நான் போனேன். அங்கே இருக்கும்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வீரப்பன் பற்றிய தகவல்கள் வெளியே வர தொடங்கியது.
வீரப்பனின் சந்தனம் மரக் கடத்தலுக்கு பலரும் பணிந்துவிட்ட நிலையில், அவனுக்கு எதிராக உறுதியாக இருந்த ஒரு வனத்துறை அதிகாரியை வெட்டி கொன்று காவிரி ஆற்றில் போட்டுவிட்டான். இதெல்லாம் எனக்கு தகவலாக வந்தது. வீரப்பனை பிடிக்க என்ன திட்டங்கள், வியூகங்கள் அமைக்கப்பட்டது? ஏன் அவையெல்லாம் தோல்வியடைந்தது? என்பதையெல்லாம் நான் கெட்டு தெரிந்துகொள்வேன்.
அப்போது காவல்துறையில் ராம்போ கோபால கிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். ராம்போ மாதிரியே இருப்பதால் அவருக்கு ராம்போ கோபாலகிருஷ்ணன் என்று பெயர். அவரது கை, கால் தொடை மாதிரி பெரியதாக இருக்கும். நான் சேலம் எஸ்.பி.யாக இருக்கும்போது என்னை வந்து சந்தித்துள்ளார். “உங்க உடல் பிரமாதமாக இருக்கிறது. இந்த உடலையும் மூளையும் இணைத்து பணியாற்றினீர்கள் என்றால் பிரமாதமாக இருக்கும்” என்று நான் அவருக்கு வாழ்த்துகள் சொன்னேன். அவ்வளவு பெரிய உருவத்தை வைத்துக்கொண்டு கூட பயங்கரமான மலைகள் எல்லாம் ஏறிவிடுவார். வீரப்பனுக்கு பெரும் சவாலாக ராம்போ கோபால கிருஷ்ணன் இருந்தார்.
ராம்போ கோபாலகிருஷ்ணனும் வீரப்பனின் படையாச்சி சமூகத்தை சேர்ந்தவர். எனவே, அப்பகுதியில் அவருக்கு இன்பார்மர்கள் அதிகமாகிவிட்டார்கள். வீரப்பன் குழுவில் இரண்டாம் இடத்தில் இருந்த சேத்துக்குழி கோவிந்தன் அண்ணன் குழந்தைப் பையன் என்பவரும் கோபால கிருஷ்ணனுடன் தான் இருந்தான். இதனால், சாதி ரீதியாகவும் அவரை வீரப்பனால் எதிர்க்க முடியவில்லை.
இந்நிலையில், வீரப்பன் ஒரு திட்டம் போட்டான். ராம்போ கோபாலகிருஷ்ணனை கண்டபடி திட்டி அப்பகுதி முழுக்க போஸ்டர் ஒட்டினான். இது பற்றி கேள்விப்பட்டதும், ‘நீயா நானா பார்த்துவிடலாம்’ என்று ராம்போ கோபாலகிருஷ்ணனும் காட்டுக்குள் நுழைந்துவிட்டார். கோபால கிருஷ்ணனின் முரட்டுக் குணம் வீரப்பனுக்கு தெரியும் என்பதால், இவர் வருவார் என்று திட்டம் போட்டுதான் போஸ்டர் ஒட்டியுள்ளான். அதைப் பார்த்து வெகுண்டு கோபால கிருஷ்ணன் காட்டுக்குள் நுழைந்தது தவறு. அடர்ந்த காட்டுக்குள் போய் வீரப்பனுடன் சண்டை போட முடியாது. அது தண்ணீரில் இருக்கும் முதலையுடன் சண்டை போடுவது மாதிரி. தண்ணீரில் இருந்து முதலை வெளியே வந்தபின்னர்தான் சண்டை போட வேண்டும். வீரப்பன் குழுவில் இருந்த சைமன் என்பவன் வைத்த கன்னிவெடியில் சிக்கி கோபால கிருஷ்ணனுடன் சென்ற 22 போலீஸ்காரர்கள் இறந்துவிட்டார்கள். இந்த தாக்குதலில் குழந்தை பையனும் இறந்துவிட்டான்.
இந்த செய்தி வந்த அன்று நான், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பாதுகாப்பு குழுவில் இருந்தேன். எனவே, இந்த சம்பவம் அவர் மேல் ஏற்படுத்திய தாக்கத்தை நான் அருகில் இருந்து பார்த்தேன். இதனையடுத்து, கர்நாடக முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இருவரும் சந்தித்து ஆலோசித்தார்கள். வால்டர் தேவாரம் ஐபிஎஸ் தலைமையில் இரு மாநில காவல்துறையும் இணைத்து சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. அப்போது எனக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. எஸ்.பி.ஜி.யில் இருந்த அனுபவம், பயிற்சி அடிப்படையில், முதலமைச்சர் பாதுகாப்பு குழுவில் இருந்தாலும், அந்த பணியையும் பார்த்துக்கொண்டு, வாலண்டியராக போய் வால்டர் தேவாரம் தேர்வு செய்த குழுவுக்கு நானே பயிற்சி அளித்தேன்.
தொடரும்