அமீர் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இறைவன் மிகப்பெரியவன்’ படம், ஹிஜாப்பை மையப்படுத்திய கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமீர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ஆதி பகவன்’. ஜெயம் ரவி நாயகனாக நடித்த இப்படம், 2013-ல் வெளியானது. இப்படம் தோல்வியடைந்ததால், அமீர் வேறு படங்களை இயக்காமல் இருந்தார். அதேநேரத்தில் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இக்கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அமீர் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் தயாரிக்கும் இப்படத்துக்கு, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
‘இறைவன் மிகப்பெரியவன்’ என படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தைக் குறிக்கும் வகையில் வேல், இஸ்லாமிய மதத்தைக் குறிக்கும் வகையில் பிறை, கிறிஸ்தவ மதத்தைக் குறிக்கும் வகையில் சிலுவை என இந்தியாவிலுள்ள மூன்று பெரும்பான்மை மதங்களின் குறியீடுகளும் படத்தின் தலைப்பில் இருக்கும்படி வடிவமைத்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஹிஜாப்பை மையப்படுத்தி இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹிஜாப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் நாடு முழுவதும் குரல்கள் ஒலித்துவரும் நிலையில், அதுகுறித்த புரிதலை உருவாக்கும் வகையில் இப்படத்தின் கதையை வெற்றிமாறன், தங்கம் இருவரும் இணைந்து எழுதியுள்ளதாக கோலிவுட் பட்சிகள் கூறுகின்றன.
ஒரு மதத்தை மையப்படுத்திய கதை என்பது தெரியவந்தால், அதற்கு எதிர்ப்புகள் நிறைய வரும் என்பதாலேயே படத்தின் தலைப்பில் மூன்று மதங்களின் குறியீடுகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.