No menu items!

நிலவை தொடும் சந்திரயான்-3 – ஒரு இந்திய சாதனை!

நிலவை தொடும் சந்திரயான்-3 – ஒரு இந்திய சாதனை!

இன்னும் ஒரு வாரம்தான். சுமார் 40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை நிலவில் தரையிறங்கப் போகிறது சந்திரயான். இதற்காக அதன் சுற்றுப்பாதையின் உயரம் 4-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நாளை (17-ம் தேதி) விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட உள்ளது.

நிலவை ஆராயும் இந்தியாவின் மிக நீண்ட கனவின் 3-வது பாகம்தான் சந்திரயான் 3. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் சந்திரயான் 1-ஐ நிலவை நோக்கி ஏவியது இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு. வெற்றிகரமாக நிலவை வலம் வந்த நிலையில், விண்கலத்தில் இருந்து இம்பாக்டர் துருவி ஒன்று நிலாவில் தரையிறங்க அனுப்பப்பட்டது. நிலாவில் நீர் மூலக்கூறுகள், ஹைட்ரோக்சில் இருப்பதை அந்த இம்பாக்டர் துருவி உறுதிப்படுத்தியது. அந்த முயற்சியுடன் சந்திரயான் 1-ன் பணிகள் நிறைவுபெற்றன.

அடுத்தகட்டமாக 2019-ம் ஆண்டு ஜூலையில் சந்திரயான்-2 அனுப்பப்பட்டது. இம்முறை விக்ரம் என்கிற தரையிறங்கி லேண்டர் கருவி, விண்கலத்துடன் அனுப்பப்பட்டது. நிலவை 100 கி.மீ., தொலைவில் வெற்றிகரமாக விண்கலம் சுற்றிவந்த நிலையில் விக்ரம் தரையிறக்கப்பட்டது.

நிலாவில் பூமியைப் போல வாயுமண்டலம் இல்லை. அதனால், பாராசூட் மூலமாக பதமாக, மெதுவாக, பத்திரமாக ஒரு பொருளை தரையிறக்க முடியாது. நிலவின் தரையைத் தொட 2.1 கி.மீ. தூரம் இருந்தபோது விக்ரம் லேண்டரின் வேகக்குறைப்புக் கருவிகள் சரிவர வேலை செய்யவில்லை. விளைவு? விக்ரம் மோதி தரையிறங்கி செயலிழந்தது.

இந்த நிலையில், மூன்றாவது கட்டமாக நிலவில், ஓர் ஆய்வுக்கலத்தைத் தரையிறக்கியே தீருவது என்ற முடிவோடு களமிறங்கியது இஸ்ரோ. அதன் கடுமையான முயற்சியின் பலனாக 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி இது விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதையில் பயணித்து வருகிறது. வரும் 23-ம் தேதி சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட உள்ளது.

இதையடுத்து படிப்படியாக நிலவின் மேற்பரப்பில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் இருக்கும் உயரம் குறைக்கப்பட்டது. 6-ம் தேதி 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 4,313 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது. பின்னர் 9-ந்தேதி 1,433 கி.மீட்டராகவும், 14-ந்தேதி 177 கி.மீட்டராகவும் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் குறைக்கப்பட்டது. 3-வது கட்ட உயரம் குறைப்பின் போது விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 150×177 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.

நிலவின் மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் 30 கிலோ மீட்டராக வருகிற 20-ந்தேதி குறைக்கப்படும். சந்திரயான்-3 விண்கலம் பயணம் முக்கிய கட்டத்தில் இருக்கிறது. இந்த பயணத்தில் முக்கிய நிகழ்வான உந்து விசை கலனில் இருந்து லேண்டர் தனியாக பிரிப்பதை நாளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். உந்துவிசை கலனில் இருந்து லேண்டரை பிரிப்பதற்கான சாதகமான சூழல், செயல்பாடு உள்ளதா? என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்கிறார்கள்.

இன்னும் ஒரு வாரம்தான். சந்திரயானின் பயணம் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் நிலவை இந்திய விண்கலம் முத்தமிட்டுவிடும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்தியாவுக்கு இஸ்ரோ அமைப்பு தந்த மிகப் பெரிய பரிசாக இது இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...