No menu items!

The Beginning of Bikini – கவர்ச்சி கட்டுரை!

The Beginning of Bikini – கவர்ச்சி கட்டுரை!

’பிகினி’

இந்த ஒற்றை வார்த்தை வெறும் வார்த்தை அல்ல.

இதற்கென்று ஒரு கவர்ச்சி இருந்தது. இனம்புரியாத கிளுகிளுப்பு இருந்தது. ஆண்களின் கற்பனைத் திறனை கட்டவிழ்த்து விடும் சக்தி இருந்தது.

1980 மற்றும் 1990-களின் இளைஞர்களிடையே பிகினி, கவர்ச்சியின் உச்ச அடையாளமாக ரசிக்க வைத்தது.

பிகினியின் அளவு குறைய குறைய, நடிகைகளின் சம்பளம் தக்காளி விலையைப் போல் அதிகரித்து கொண்டே போனது.

இந்திய சினிமாவில் இப்பேர்பட்ட பிகினியின் வரலாறு ஆச்சர்யப்பட வைக்கிறது.

கட்டுரைக்குள் போகும் முன்பாக ஒரேயொரு கேள்வி. பிகினி பற்றிய உங்களது பொது அறிவை சோதிக்கும் ஒரு கேள்வி.

இந்தியாவில் முதல் முறையாக திரைப்படத்தில் பிகினியில் வந்து அதிரவைத்த நடிகை யார்?

  1. நூதன்
  2. நர்கீஸ்
  3. ஷர்மிளா தாகூர்
  4. ஸீனத் அமன்
  5. ஸ்ரீதேவி
  6. மீனாட்சி ஷிரோத்கர்
    உங்களது பதில் நூதன் அல்லது நர்கீஸ் என்றால் சதாபிஷேகம் கொண்டாடும் வயதில் இருப்பீர்கள்.

ஷர்மிளா தாகூர் என்றோ அல்லது ஸீனத் அமன் என்றோ புன்னகைத்தால் நிச்சயமாக உங்களுக்கு 50 வயதிற்கும் மேல் இருக்கும்.

ஸ்ரீதேவி என்று கண் சிமிட்டினால் உங்களுக்கு நாற்பதுகளில் வயது இருக்கலாம்.

மீனாட்சி சிரோத்கர் என்றால் நிச்சயம், எண்பது வயதிற்கும் மேல் இருக்கும் கரைக்கண்ட சினிமா ப்ரியராக இருப்பீர்கள்.

இந்திய சினிமாவில் முதல் முறையாக பிகினியில் தோன்றிய நடிகை என்று சிலர் ஷர்மிளா தாகூரைக் கை காட்டுவார்கள். இன்னும் சிலர் ஸீனத் அமன் என்று சத்தியம் செய்வார்கள்.

அதெல்லாம் சரிதான். இந்த ஆறு பேரில் யார் மிக தைரியமாக பிகினியில் நடித்தது? எந்த வருடம் முதல்முறையாக ஒரு பெண்ணை நீச்சல் உடையில் இந்திய சினிமா ரசிகர்கள் பார்த்து கலவரமானார்கள்? என்று நீங்கள் அமலாக்கத்துறைக்குப் போட்டியாக கேள்வி கேட்டீர்கள் என்றால், இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலைத் தேடிப்பிடிக்க நீங்கள் டைம் மிஷினின் உதவியோடு 1938-ம் ஆண்டுக்கு திரும்பிப் போக வேண்டியிருக்கும்.

உண்மையில் இந்திய சினிமாவில் The Beginning of Bikini -யை தொடங்கி வைத்தவர், 1990-களில் கமர்ஷியல் ஹீரோயின்களாக நடித்த நட்சத்திர சகோதரிகளின் பாட்டி என்றால் நம்ப முடிகிறதா??

அந்தப் புரட்சியை 1938-ம் ஆண்டிலிலேயே செய்தவர் மீனாட்சி ஷிரோத்கர். இந்தியாவில் இப்பேர்பட்ட கலாச்சார அதிர்ச்சியை திரையில் காட்டியப்படத்தின் பெயர் ‘பிரம்மசாரி’ நீங்கள் நினைப்பது போல் ‘பிரம்மசாரி’ ஹிந்தியில் வெளியான படம் அல்ல.

அதுவொரு மராத்தி படம்.

மாஸ்டர் விநாயக் இயக்கிய ‘பிரம்மசாரி’ படத்தின் அந்த காட்சியைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததாக பிரபல சினிமா இதழ் ‘ஃப்லிம்ஃபேர்’ குறிப்பிட்டிருந்ததாக கூறுகிறார்கள்.

யார் இந்த மீனாட்சி ஷிரோத்கர்?

80 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய சினிமாவில் நீச்சல் உடையில் கதாநாயகிகள் கவர்ச்சியாக தோன்றும் ட்ரெண்ட்டை தொடங்கி வைத்த மீனாட்சி ஷிரோத்கருக்கு, அப்போது வயது 20 இருக்கலாம்.

1916-ல் பிறந்த இவருடைய இயற்பெயர் ரத்தன் பெட்னேகர். தன்னுடைய 19-வது வயதில் டாக்டர். ஷிரோத்கரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும், இவருக்கு மராத்தி சினிமா மீது மோகம் பற்றிக்கொண்டது.

இதைப் புரிந்து கொண்ட டாக்டர். ஷிரோத்கர், ரத்தனின் விருப்பத்திற்கு தடையாக இருக்க விரும்பவில்லை.

ஷிரோத்கரை இறுக்கமாக அணைத்து கொண்டு, ’ஐ லவ் யூ’ என்றார் ரத்தன். அதற்கு பிறகு அவரை மராத்தி திரைப்படங்கள் எடுக்கப்படும் ஸ்டூடியோவில்தான் பார்க்க முடிந்தது.

ஸ்டூடியோவில் நட்சத்திரமாக அவதாரமெடுத்து இருந்த ரத்தன், நடிகை மீனாட்சியாக மாறி இருந்தார்.

அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மாஸ்டர் விநாயக்குடன் நெருக்கமாக இருக்கும் ‘யமுனா ஜாலி கேலு கேல்’ பாடலை எடுத்தார்கள். இந்தப் பாடலில்தான் மீனாட்சி நீச்சல் உடையில் நடித்தார்.

பற்றிக்கொண்டது மராத்தி சினிமா.

இதைப்பார்த்து அந்த மராத்திப் பாடலை ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட்டார்கள். ஹிந்தி சினிமாவிலும் மீனாட்சி ஷிரோத்கர் பிரபலமானார்.

மீனாட்சி ஷிரோத்கரும், மாஸ்டர் விநாயக்கும் அடுத்தடுத்து தொடர்ந்து Brandichi Batli (1939), Ardhangi / Ghar Ki Rani (1940), Amrut (1941), Mazhe Bal (1943) ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்கள்.
மீனாட்சியின் தைரியம் ஹிந்தி நடிகையான நளினி ஜெய்வந்திற்கு உற்சாகத்தைக் கொடுத்தது. 1950-ல் வெளியான. ‘சங்க்ராம்’ படத்தில் அசோக் குமாருக்கு ஜோடியாக நளினி ஜெய்வந்த் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நளினியும் பிகினியில் வந்து ஹிந்தி சினிமாவை சூடேற்றினார்.

இவருக்கு அடுத்தே 1951-ல் நர்கீஸ் ‘ஆவாரா’ என்கிற ஹிந்திப் பட த்தில் பிகினியில் நடித்ததாக ப்லிம்ஃபேர் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்திய சினிமாவில் பிகினி அணிந்து கொண்டு நடித்த முதல் நடிகை யார் என்பதில் இருந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

1960-களில் ஷர்மிளா தாகூர் பல படங்களில் நீச்சல் உடையில் வந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். An Evening in Paris மற்றும் Aamne Saamne என்ற இந்த இரு திரைப்படங்களும், முன்னணி ஹீரோயின்கள் உடைகளை களைந்து கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள் என்ற கருத்தை உடைத்தெறிந்தன.

1958-ல் வெளியான காமெடி படமான ‘Dilli Ka Thug’-ல் அப்போதைய முன்னணி நடிகையாக திகழ்ந்த நூதனும் பிகினி புரட்சியில் இணைந்தார். இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நூதனா இது.. என்று ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு போனார்கள்.

முன்பு கலாச்சார அதிர்ச்சியாக இருந்த பிகினி, இன்று கலாச்சார முதிர்ச்சியாக மாறி இருக்கிறது.

’பிகினியா…?’ என்று சொன்ன தலைமுறை மாறி இன்று ’பிகினிதானே…’ என்று சொல்லுமளவிற்கு சமூக ஊடகங்களில் தங்களது கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள் இன்றைய தலைமுறை நடிகைகள்.

’If people view wearing bikini as a problem, then dirt is in their mind and not in mine’ என்று கமெண்ட் அடித்திருக்கும் அதிதி ராவ் ஹயாத்ரியின் வார்த்தைகளில் இருந்து பிகினிக்கு இன்றைக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இப்படியாக ஆரம்பித்த பிகினி புரட்சியின் கவர்ச்சிகரமான விதையாக இருந்த அந்த மீனாட்சி ஷிரோத்கர், வேறு யாருமல்ல.

இன்று தெலுங்கு சினிமாவில் ‘ப்ரின்ஸ்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவியான நம்ரதா ஷிரோத்கரின் பாட்டி என்பதுதான் ஹைலைட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...