நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. மூன்று மாதங்களாக நடக்கும் மணிப்பூர் கலவரங்கள், மரணங்கள் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விவாதம் நடக்கிறது.
விவாதத்தை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ராகுல் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய் விவாதத்தை துவக்கி வைத்து பேசினார்.
ராகுல் காந்தி ஏன் முதலில் பேசவில்லை என்ற கேள்வியை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுப்பினார்.
அதற்கு கோகாய், ‘பிரதமர் ஏன் மணிப்பூருக்கு போகவில்லை?’ என்று பதில் கேள்வி கேட்டார்.
தொடர்ந்தும் சூடான கேள்விகளை எழுப்பினார்.
அவர் கேட்ட கேள்விகளில் மூன்று முக்கியமான கேள்விகள் இவைதான்:
இத்தனை கலவரங்கள் நடந்து உயிர் சேதங்கள் ஏற்பட்ட பிறகும் பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை?
மணிப்பூர் கலவரங்கள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு 80 நாட்கள் ஆனது ஏன்? அதுவும் 30 விநாடிகள் மட்டுமே பேசியது ஏன்?
இந்தக் கலவரங்களை அடக்கத் தவறிய முதல்வரை இன்னும் டிஸ்மிஸ் பண்ணாமலிருப்பது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கு தொடர்ந்து நடந்து வரும் விவாதத்தில் பாஜகவினர் பதில் அளிப்பார்கள்.
இந்த ஆட்சியின் மீது கொண்டு வரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை அசைத்துப் பார்க்குமா? ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால் இல்லை என்பதுதான் அழுத்தம் திருத்தமான பதில். மத்திய அரசின் தவறுகளையும் பலவீனங்களையும் வெளிக் கொண்டு வரும் என்ற அளவில் மட்டும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் விவாதமும் உதவும்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இதுவரை 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த பாஜக அரசு சந்திப்பது 28வது நம்பிக்கையில்லா தீர்மானம்.
1952, 1957 ஆகிய இரண்டு நாடாளுமன்றங்களில் ஒரு முறை கூட நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பி கோரிக்கை வைத்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துவிடலாம். இப்போது ஐம்பது எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
1963ல் முதல் நேரு ஆட்சிக்கு எதிராக முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆச்சார்யா கிருபளானி தீர்மானத்தை கொண்டு வந்தார். நான்கு நாட்கள் விவாதம் தொடர்ந்தது. மொத்த விவாத நேரம் சுமார் 21 மணி நேரம். நேரு ஆட்சி சேதாரங்கள் இல்லாமல் தப்பியது.
அதிக நம்பிக்கையில்லா தீர்மானங்களை சந்தித்த பிரதமர் இந்திரா காந்தி. அவருடைய ஆட்சிக் காலத்தில் 15 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களை சந்தித்திருக்கிறார். அனைத்து முறையும் நம்பிக்கையில்லா தீர்மானங்களை வென்றிருக்கிறார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தால் மத்தியில் ஒரே ஒரு முறை ஆட்சி கவிழ்ந்திருக்கிறது. ஆனால் நம்பிக்கைத் தீர்மானங்களால் மூன்று முறை கவிழ்ந்திருக்கிறது.
முதல் முறை 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ஆட்சியிலிருக்கும் பிரதமர் தன் ஆட்சியின் மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை நிருபிக்க நம்பிக்கை தீர்மானங்கள் கொண்டு வருவார்கள். அது போன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் மூன்று முறை ஆட்சிகள் கவிழ்ந்திருக்கின்றன.
1990ல் பிரதமராய் இருந்த வி.பி.சிங் தனது ஆட்சியின் மீது நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆனால் பெரும்ப்பான்மை வாக்குகள் அவருக்கு கிடைக்காததால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.
1997ல் தேவ கவுடாவும் தனது பத்து மாத ஆட்சியின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அவரது ஆட்சியும் வாக்கெடுப்பில் தோற்றது.
1999ல் பிரதமராய் இருந்த வாஜ்பாயும் தனது ஆட்சியின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அதிமுகவின் ஒரு வாக்கு மாறி விழுந்ததால் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக 2018ல் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. 12 மணி நேரம் நடந்த விவாதத்துக்குப் பிறகு தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரிக்க, 325 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க மோடி ஆட்சி தொடர்ந்தது.
இப்போதும் அப்படிதான் நடக்கப் போகிறது.
இன்றைய நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு 301 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கூட்டணிக்கு 31 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எதிரணியில் 143 உறுப்பினர்கள்தாம் இருக்கிறார்கள். அதனால் மோடி அரசுக்கு எளிதில் வெற்றி கிடைத்துவிடும்.