மனிதர்களைப் போலவே விலங்குகளையும் அதிகம் நேசித்தவர் கலைஞர் கருணாநிதி. தன் வீட்டில் வளர்த்துவந்த செல்ல நாய்க்குட்டியான பிளாக்கி மீது அவர் உயிரையே வைத்திருந்தார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறார் தமிழகத்தின் முன்னணி புகைப்பட கலைஞர்களில் ஒருவரான சிவபெருமாள்.
நான் ஆனந்த விகடன் வார இதழில் பணியாற்றிக்கொண்டு இருந்த சமயத்தில், தலைவர்களிடம் கேமராவைக் கொடுத்து, அவர்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பொருளையோ, அல்லது நபரையோ படம் எடுக்கச் சொல்லி அந்த அனுபவத்தை போட்டோ ஸ்டோரியாக போட்டால் என்ன என்று கேட்டேன். அதற்கு மதனும் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி கலைஞர் கருணாநிதி, ஜி.கே.மூப்பனார், அப்போது தமிழக அமைச்சராக இருந்த இந்திராகுமாரி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோரிடம் கேமராவைக் கொடுத்து அவர்கள் யாரை க்ளிக் செய்கிறார்கள் என்று பார்க்க நினைத்தோம். சுப்பிரமணிய சுவாமி சந்திரலேகாவை படம் எடுத்தார். மூப்பனார் தனது ஆபீசில் இருந்த இருவரை படம் எடுத்தார். இந்திராகுமாரி தன் வீட்டில் இருந்த மேரி மாதாவின் சிலையை படம் எடுத்தார்.
இந்த வரிசையில் கலைஞரை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது அவர் ஆட்சியில் இல்லாத நேரம். இந்த சந்திப்பின்போது 2 கேமராக்களை எடுத்துச் சென்றேன். ஒரு கேமராவை கலைஞரிம் கொடுத்து, மற்றொரு கேமராவை நான் வைத்துக் கொண்டேன்.
“போட்டோகிராபி பற்றி எனக்கு ஏதும் தெரியாது. நான் எப்படி படம் எடுப்பது?” என்று கலைஞர் என்னிடம் கேட்டார்.
”நான் கேமராவில் எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். நீங்கள் க்ளிக் செய்தால் மட்டும் போதும். இப்போது நீங்கள்தான் கேமராமேன். நீங்கள் படம் எடுத்தால் யாரை முதலில் எடுப்பீர்கள். யாரை படம் எடுக்க நீங்கள் விரும்புவீர்களோ, அவரை படம் எடுங்கள்” என்று சொன்னேன்.
அதற்கு கலைஞர், “நான் என்னுடைய பிளாக்கியை படம் எடுக்கிறேன்” என்று சொல்லி தனது செல்ல நாய்க்குட்டியை அழைத்தார். தனது நாற்காலியில் இருந்து எழுந்து, அந்த நாய்க்குட்டியை அதில் அமரவைத்தார்.
”நான் இப்போது என்ன செய்யணும்?” என்று கலைஞர் கேட்க, “கேமராவின் பெல்ட்டை கழுத்தில் அணிந்து, நாயை ஃபோக்கஸ் செய்து கேமராவில் உள்ள க்ளிக் பட்டனை அழுத்த வேண்டும்” என்று சொன்னேன். அதன்படி கலைஞர் கேமராவை எடுத்து கழுத்தில் மாட்டினார்.
கேமராவை க்ளிக் செய்யும் முன் கலைஞர், ‘பிளாக்கி ஸ்மைல்” என்றார்.
இதைக் கேட்டு நான் சிரித்துவிட்டேன். எதற்காக சிரிக்கிறாய் என்று கலைஞர் கேட்க, ‘ஸ்மைல் என்று சொன்னால் நாய்க்குட்டிக்கு தெரியுமா? அது எப்படி சிரிக்கும்?” என்று கேட்டேன்.
அதற்கு கலைஞர், “நீ படத்தை பிரிண்ட் போட்டுப் பார், நிச்சயமாக அது சிரித்திருக்கும்” என்றார். அவர் சொன்னபடி அந்த படத்தை பிரிண்ட் போட்டுப் பார்த்த நான் அசந்துபோனேன். அந்த நாய்க்குட்டி அவர் சொன்னபடியே சிரிப்பதுபோல் தனது வாயைத் திறந்து வைத்திருந்தது.
அந்த நாயின் மீது கலைஞர் மிகுந்த பாசம் வைத்திருந்தார். பிற்காலத்தில் அந்த நாய் இறந்தபோது கலைஞர் மிகவும் உடைந்துவிட்டார். அந்த நாய் மீது அவர் வைத்த பாசத்தைப் பார்த்து வியந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங், பின்னாளில் அதன் படத்தை ஓவியமாக தீட்டி கலைஞருக்கு பரிசளித்தார்.