வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 2-வது டி20 போட்டியிலும் தோற்றுவிட்டது இந்தியா. இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் தொடரையே இழக்கும் நிலையில் இருக்கிறது. இந்த தொடர் தோல்விகள் மூலம் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீர்ர்களையே மீண்டும் நம்பவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
இளம் வீர்ர்கள் கையில் இந்திய கிரிக்கெட் பாதுகாப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் நம்பியிருந்த நிலையில், இந்த தோல்விகள் அவர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. இந்தியாவின் இந்த தோல்விகளுக்கு யாரெல்லாம் காரணம் என்று பார்ப்போம்.
ஹர்த்திக் பாண்டியா:
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்புவரை, தோனிக்கு பிறகு இந்தியாவின் சிறந்த கேப்டனாக யாரைக் கருதுகிறீர்கள் என்று கேட்டால், பெருவாரியான ரசிகர்கள் பாண்டியாவைத்தான் கைகாட்டுவார்கள். கடந்த ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த பாண்டியா, இந்த ஆண்டில் அந்த அணியை இறுதிப் போட்டிவரை கொண்டு சென்றது இதற்கு முக்கிய காரணம்.
ஆனால் ஐபிஎல் மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் பார்த்த பாண்டியாவை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பார்க்க முடியவில்லை. சோதனை முயற்சி என்ற பெயரில் பல தவறுகளைச் செய்தார் பாண்டியா. மிக முக்கிய தவறாக 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்க வேண்டிய சஞ்சு சாம்சனை 5-வது மற்றும் 6-வது பேட்ஸ்மேனாகவும், பினிஷராக பிரகாசித்து வந்த சூர்யகுமார் யாதவை 3-வது பேட்ஸ்மேனாகவும் களம் இறக்கினார். இருவரின் பேட்டிங்கையும் இது பாதிக்க, ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது இந்தியா.
முதல் போட்டியில் இந்தியா தோற்க, அதன் நீண்ட வால் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கடைசி 4 வீர்ர்களுக்கு பேட் பிடிக்கவே தெரியாதது முதல் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த தோல்விக்கு பிறகு 2-வது போட்டியில் கொஞ்சம் உஷாராகி இருக்கலாம். டெஸ் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வாலை சேர்த்திருக்கலாம். ஆனால் பாண்டியா அதைச் செய்யாததால் இந்திய பேட்டிங் மீண்டும் தடுமாறியது. அதேபோல் 2-வது டி20யில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி கொடுத்த சாஹலுக்கு அதற்கு அடுத்த ஓவரை கொடுக்காததும் அவரது திறமை மீது சந்தேக நிழலை ஏற்படுத்தி இருக்கிறது.
சுப்மான் கில்:
விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாத நிலையில், தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில்லிடம் இருந்து அட்டகாசமான பேட்டிங்கை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் சுப்மான் கில் அடித்த சதம் அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தி இருந்தது. . ஆனால் முதல் 2 டி20 போட்டிகளிலும் அந்த நம்பிக்கையை காப்பாற்றத் தவறினார் சுப்மான் கில். பவுண்டரியும் சிக்சரும்தான் கிரிக்கெட் என்ற நினைப்பில் நிதானமான பேட்டிங்கை அவர் மறந்தார். ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி அணியை சேற்றில் தள்ளினார். பவர் ப்ளேவுக்கு முன்பே இவர் ஆட்டம் இழக்க, அதிலிருந்து அணியை மீட்க மற்ற வீர்ர்களால் முடியவில்லை.
முகேஷ் குமார்
இந்திய அணியில் இப்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமே இல்லை. பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், நடராஜன் என்று மிக நீண்ட பட்டியலே இருக்க, அவர்கள் எல்லோரையும் விட்டு முகேஷ் குமாருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தில் முதல் 2 டி20 போட்டிகளில் 59 ரன்களை விட்டுக்கொடுத்து அவரால் 1 விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்த்து. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலவீனத்தையும், கேப்டன் பாண்டியாவுக்கு கூடுதல் சுமையையும் ஏற்படுத்தியது.
சஞ்சு சாம்சன்
ஐபிஎல், ரஞ்சி போன்ற உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடுவதும், இதை நம்பி இந்திய அணியில் இடம் கொடுத்தால் சொதப்புவதும் சஞ்சு சாம்சனுக்கு வழக்கமாகிவிட்ட்து. முதல் 2 டி20 தொடர்களிலும் அதுதான் நடந்தது. முதல் டி20 போட்டியில் இந்தியா ஜெயிக்க 30 பந்துகளில் 37 ரன்களை எடுக்க வேண்டிய நிலை. சாம்சன் பொறுமையாக ஆடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும்., ஆனா அவர் அவசரப்பட்டு ரன் அவுட் ஆக, இந்தியா ஆட்டம் கண்ட்து. 2-வது டி20-யில் பாண்டியாவுக்கு முன்பே அவரை நம்பிக்கையுடன் களம் இறக்கினர். ஆனால் அவர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தால், இது இப்படியே தொடர்ந்தால் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களம் இறக்கப்பட வாய்ப்பு அதிகம்.