ஃபகத் பாசிலின் நடிப்புத் திறமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். லோகேஷ் கனகராஜ் – கமலின் விக்ரம் படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தவராக மாறினார். மாரி செல்வராஜின் மாமன்னன் படத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொண்டாடும் நடிகராக மாறியிருக்கிறார்.
மாமன்னன் படத்தில் ஜாதித் திமிர் பிடித்த வில்லன் ரத்னவேலுவாக வாழ்ந்திருக்கும் ஃபகத் ஃபாசில் இப்போது மீண்டும் சோஷியம் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறார். காரணம் ஜாதி வெறியராக அவர் நடித்த தத்ரூபமான நடிப்பு.
இந்த நடிப்பை பார்த்து ஜாதியை தூக்கிப் பிடிக்கும் சிலர், மாமன்னன் படத்தில் அவர் நடித்த காட்சிகளின் பின்னணியில் அவரரவர் ஜாதியை தூக்கிப் பிடிக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவு ஜாதி வெறியராய் ஃபகத் பாசிலின் நடிப்பு இருக்கிறது.
நடிப்பு அசுரனாக இருக்கும் ஃபகத் ஃபாசில் யார்? அவரது பிண்ணனி என்ன?
தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக மாறிக் கொண்டிருக்கும் விஜய்க்கும், பகத் பாசிலுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் போராடி முன்னுக்கு வந்தவர்கள். இருவரின் அப்பாவும் பெரிய இயக்குநர்கள். தமிழகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்ததைப் போல் பகத் பாசிலின் அப்பா ஃபாசில், மலையாளத்தில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.. இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கே ஒரு திருப்புமுனையைக் கொடுத்த படமான ‘காதலுக்கு மரியாதை’ படத்தை இயக்கியவர் ஃபகத்தின் அப்பா ஃபாசில்.
19-வது வயதில் அப்பா பாசிலின் இயக்கத்தில் ‘கையெத்தும் தூரத்து’ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார் பகத். அதில் நடிக்கும்போது அவரது பெயர் ஷானு. ‘கையெத்தும் தூரத்து’ படம் ஹிட் இல்லை. அந்தத் தோல்வியினால் சினிமா செட் ஆகாது என்று முடிவெடுத்த பகத் பாசில், படிப்பில் கவனத்தை திருப்பினார். அமெரிக்கா சென்ற பகத், மியாமி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பிலாசபி படித்தார்.
ஆனாலும் நடிப்பின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. 7 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தவர், ‘கஃபே’ என்ற ஆந்தாலஜி படம் மூலம் மீண்டும் திரையுலகுக்கு வந்தார். இதில் தன் பெயரை பகத் பாசில் என்று மாற்றிக்கொண்டார். இந்த படம் 2009-ம் ஆண்டில் வெளியானது.
விஜயகாந்த்துடன் ‘செந்தூரபாண்டி படத்தில் நடித்த பிறகுதான் விஜய்யின் கிராப் ஏற ஆரம்பித்த்து. அதே பாணியில் மம்முடியுடன் ‘பிரமாணி’ என்ற படத்தில் நடித்த பிறகுதான் பகத் பாசிலின் கிராப் மலையாளத்தில் ஏற ஆரம்பித்தது. இந்தப் படம் 2009-ம் ஆண்டில் வெளியானது.
தமிழில் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நஸ்ரியாவை 2014-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் பகத். திருமணத்தின்போது பகத் பாசிலுக்கு 30 வயது. நஸ்ரியாவுக்கு 19 வயது. இருவருக்கும் இடையே 11 வயது வித்தியாசம். இந்த திருமணத்தைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பகத் பாசில், “என்னை திருமணம் செய்துகொள்வது எந்த பெண்ணுக்கும் சவாலான விஷயம். இந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு பெண் முன்வந்திருக்கிறாள். நஸ்ரியாதான் அந்தப் பெண். இன்று எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இது பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நஸ்ரியாவை திருமணம் செய்துகொள்வதற்கு முன் நடிகை ஆண்ட்ரியாவை பகத் பாசில் காதலித்துள்ளார். ஆனால் அவரது காதலை ஆண்ட்ரியா ஏற்கவில்லை. 2013-ம் ஆண்டில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதைப்பற்றி பகத் பாசில் கூறியிருக்கிறார். ஆண்ட்ரியாவின் அழகும், அவரது இசை ஆற்றலும், புத்திசாலித்தனமும் தன்னை அவர் பக்கம் ஈர்த்த்தாக அந்த பேட்டியில் சொல்லியிருக்கும் பகத் பாசில், ஆண்டிரியா தன் காதலை நிராகரித்த பிறகு, அதிலிருந்து மீண்டுவர தனக்கு பல நாட்கள் ஆனதாக குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் 2, புஷ்பா, மாமன்னன், வேலைக்காரன் ஆகிய படங்களில் ஆக்ஷன் வேடங்களில் பார்த்த ஆக்ரோஷமான நடிகரான பகத் பாசிலுக்கு காதல் படங்களில் நடிப்பதும் ஈஸியான விஷயம். மலையாள திரையுலகில் மிக நீண்ட முத்தக் காட்சியில் நடித்த நடிகர் என்ற பெருமை பகத் பாசிலுக்கு இருக்கிறது. ‘சாப்ப குரிசு’ என்ற படத்தில் நாயகி ரம்யா நம்பீசனுடன் அந்த மிக நீண்ட லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் பகத்.
ஹோமோசெக்ஸ் எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் ஆதரவாளர் பகத் பாசில். இதுபற்றி ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள பகத் பாசில், “காதல் விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான விருப்பம் இருக்கிறது. அதில் நாம் தலையிடக் கூடாது. அவர்கள் உணர்வை நாம் மதிக்க வேண்டும். நாளை என் மகன், தான் இன்னொரு ஆணைக் காதலிப்பதாக கூறினால் நான் அதை எதிர்க்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.