மோடி தலைமையிலான மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன என்ற கேள்வி நமக்கு வரலாம்.
அரசின் மீதோ அல்லது ஒரு நபரின் மீதோ குற்றசாட்டை முன் வைத்து அதன் மீதான வாக்கெடுப்பை நடத்தி முடிவு எட்டப்படுவது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகும். நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்பிக்களால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர, குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அப்போதுதான் அந்த தீர்மானம் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படும். மக்களவை விதிமுறை பிரிவு 198-ன்கீழ், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் அந்த தீர்மானம் மீது 10 நாட்களுக்குள் விவாதம் நடத்தப்பட வேண்டும். அந்த விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் பேச வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதன் பிறகு அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக அதிக வாக்குகள் கிடைத்தால், அரசு பதவி விலக வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாடாளுமன்றத்தில் 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திரா காந்தி ஆட்சியில் 15 முறையும், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சியில் தலா 3 முறையும், வாஜ்பாய் ஆட்சியில் ஒரு முறையும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் ஏப்ரல் 1999-ல் வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 269, 270 என ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி கவிழ்ந்தது. மோடி ஆட்சிக்கு ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இப்போதைய சூழலில் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை வெற்றிபெறவைக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகளிடம் பலம் இல்லை. இருப்பினும் மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமரை பதிலளிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன.