No menu items!

தமிழ்நாட்டிலேயே நாடற்றவர்களாய்  30000 தமிழ்நாட்டு தமிழர்கள் – எழுத்தாளர் பத்திநாதன் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டிலேயே நாடற்றவர்களாய்  30000 தமிழ்நாட்டு தமிழர்கள் – எழுத்தாளர் பத்திநாதன் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் குறித்து தொடர்ந்து எழுதி கவனம் ஈர்த்து வருபவர், தொ. பத்தினாதன். இலங்கை அகதியாக கடந்த ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர். நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படத்தின் கதை திருட்டு சர்ச்சையில் பேசும்பொருளாக இருந்தவர். ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்காக தொ. பத்தினாதனை சந்தித்தோம்.

முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்… இலங்கையில் நீங்கள் பிறந்து, வளர்ந்த ஊர் எது? அங்கே இருந்து அகதியாக எப்போது தமிழ்நாடு வந்தீர்கள்?

நான் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். மன்னார் மாவட்டத்தில் மீன் பிடித்தலும் விவசாயமும்தான் பிரதான தொழில். நாங்கள் விவசாய குடும்பம். யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் போர் நெருக்கடி காரணமாக 1990இல் என் பதினான்கு வயதில் அண்ணன், அக்காக்களோடு அகதியாக தமிழ்நாடு வந்தேன்.

என் வயதில் பெரும்பகுதியை அகதியாக கழித்துவிட்டேன். முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டது. இதில் முதல் எட்டு ஆண்டுகள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அகதி முகாமில் இருந்தேன்.  நெருக்கடியான சூழல், சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நிலை என அந்த எட்டு ஆண்டுகளும் என் வாழ்வில் வீணாப் போன நாட்கள்தான். எனவே, அங்கே இருந்து வெளியேறி அகதி என்பதை மறைத்துக்கொண்டு, சட்டவிரோதமாக சென்னையில் பல்வேறு பணிகள் செய்து வாழ்ந்து வந்தேன். அதை எல்லாம் ‘போரின் மறுபக்கம்’ என்ற என் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன். அதிலிருந்து பல பகுதிகளை திருடித்தான் விஜய் சேதுபதி நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தை எடுத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் மொத்தம் 106 அகதி முகாம்கள் உள்ளன. 1983, 1990 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட கலவரம், போர் உட்பட பல்வேறு சூழ்நிலைகளில் அங்கே இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் அகதியாக தமிழ்நாடு வந்துள்ளார்கள். இங்கிருந்து வெளிநாடு சென்றவர்கள், போர் முடிந்த பின்னர் நாடு திரும்பியவர்கள் போக இப்போது கிட்டதட்ட 60 ஆயிரம் பேர் அகதியாக உள்ளோம். இதில் சரி பாதியானவர்கள், அதாவது 30 ஆயிரம் பேர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

தமிழ்நாட்டின் ஒரு கிராமம் போல்தான் இன்று அகதி முகாம்களும் உள்ளன. கிராமத்தில் என்னென்ன இருக்குமோ அது எல்லாம் அகதி முகாம்களிலும் உள்ளது. அகதி முகாம்களுக்கு வெளியே பக்கத்து ஊர்களில், தமிழ்நாட்டு தமிழர்களுடன் திருமண உறவு போன்றவையும் இத்தனை ஆண்டுகளில் நடந்துள்ளன. சிலர் படித்து நல்ல வேலைகளுக்கு சென்று 40 – 60 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், இவையெல்லாம் கொஞ்ச பேருக்குதான். பெரும்பாலானவர்களுக்கு நெருக்கடியான வாழ்க்கைதான்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம், ஆட்சியாளர்கள் நிலைப்பாட்டுக்கு ஏற்ப, அகதி முகாம்கள் உள்ளேயும் மாற்றங்கள் இருக்கும். அதேநேரம் அகதிகள் என்பவர்கள் சட்ட விரோத குடியேறிகள் என்று பார்க்கப்படுவதால் பாதுகாப்பு, நலத் திட்டங்களை மட்டும்தான் தமிழ்நாடு அரசால் செய்ய முடியும். அகதிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குடியுரிமை ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகளில் 30 ஆயிரம் பேர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று சொல்கிறீர்கள். அதுவும் அவர்கள் நாட்டற்றவர்கள் என்னும் நிலையில் இருப்பதாக சொல்கிறீர்கள். எதனால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது?

தமிழ்நாட்டில் இருந்து இலங்கையில் மலையகத்துக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து சென்றவர்களின் வழி வந்தவர்கள் அவர்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு குடியுரிமை வழங்காமலே வருடங்களை கடத்தி வந்தது. இந்நிலையில் அவர்களில் பாதி பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதாகவும் பாதி பேர் இந்தியா திரும்பலாம் என்றும், அவர்கள் விருப்பத்துக்கு மாறாக, இலங்கை – இந்தியா இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. 1960 முதல் 1984 வரை பதினைந்து ஆண்டுகள் அந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. அப்போது ஒப்பந்தப்படி இந்தியா திரும்பிவிட்டவர்கள் இந்திய குடிமகன் ஆகிவிட்டார்கள். இதனிடையே, மலையகத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் வன்னி, மன்னார், முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் குடியேறினார்கள். பின்னர் 83 கலவரம் காரணமாக அங்கே இருந்து அகதியாக இந்தியாவுக்கு வந்தார்கள். ஒப்பந்தப்படி அவர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டியவர்கள். ஆனால், கலவரம் காரணமாக அலைகழிக்கப்பட்டதில், அதற்கான கால வரையறையை கடந்துவிட்டார்கள். எனவே, இலங்கை குடியுரிமையும் இல்லாத நிலையில் அகதியாக முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். இலங்கை குடியுரிமை இருப்பதால் நாங்கள் திரும்ப இலங்கை செல்ல முடியும். ஆனால், தமிழ்நாடு அகதி முகாம்களில் இருக்கும் இலங்கை குடியுரிமை இல்லாத மலையகத் இப்போது திரும்ப இலங்கை செல்ல முடியாது. இங்கே இந்திய குடியுரிமையும் இல்லாத நிலையில் நாடற்றவர்களாக அவர்கள் நிலை உள்ளது. எங்களை விட சொந்த நாட்டிலேயே நாடற்றவர்களாக வாழும் அவர்கள் நிலை மிக துயரமானது.

1 COMMENT

  1. Iam extremely sad to note the status of Sfilankan Tamils. I feel Govt of India must do something to accept them as our citizens. Atleast on humanitarian grounds our own freed must be accepted. If lakhs of muslims from Bangladesh can live and clandestinely get Indian citizenship why not Srilankan Tamils who have been officially living as refugees get citizenship. I strongly support their cause. Jayaram

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...