இயக்குநர் இமயம் பாரதிராஜா பிறந்த நாள் இன்று. ‘புது நெல்லு புது நாத்து’ தொடங்கி ‘கருத்தம்மா’ வரை ஐந்து படங்களில் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் வி. ஜெயப்பிரகாஷ், பாரதிராஜாவுடனான தனது அனுபவங்களை ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். அது இங்கே…
பாரதிராஜாவிடம் நீங்கள் பார்த்து பிரமித்த விஷயங்கள் என்ன?
தமிழ் சினிமா சரித்திரத்தில் பாரதிராஜா ஒரு சகாப்தம். இயக்குநர் இமயம் என்ற அடைமொழிக்கு மிகப் பொறுத்தமானவர். புதிய நடிகர்களை, மணல் போல் இருப்பவர்களை, மிகச் சிறந்த நடிகர்களாக, சிற்பமாக மாற்றும் மாயக்காரர். நெப்போலியன், சுகன்யா, ரஞ்சிதா என நான் அவருடன் இருந்த காலத்தில் புதியவர்களாக வந்து அவரால் சிறந்த நடிகர்களாக ஆனவர்களை பக்கத்தில் இருந்து பார்த்து பிரமித்திருக்கிறேன். பாரதிராஜாவே நடிப்பதற்காக வந்தவர்தான். எனவே, படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிப்பு சொல்லிக் கொடுப்பதை சரியாக உள்வாங்கிக் கொண்டாலே யாரும் நடிகராகிவிட முடியும்.
தமிழ் திரையுலகில் இளையராஜா – பாரதிராஜா நட்பு மிகப் பிரபலமானது. இதில் இடையில் ஒரு விரிசல் ஏற்பட்டது. ‘நாடோடி தென்றல்’ படத்துக்கு பிறகு இளையராஜாவிடம் இருந்து பாரதிராஜா விலகியதற்கு என்ன காரணம்?
பொதுவாகவே கலைஞர்கள் உணர்ச்சி வசமானவர்கள் தான். அதுவும் பாரதிராஜா, இளையராஜா பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இருவருமே வெரி சென்சிட்டி மனிதர்கள். எதற்கு கோபப்படுவார்கள் என்றே தெரியாது. அவ்வளவு கோபம் மேலோங்கி இருக்கும் மனிதர்களும்கூட. இருவருக்கும் இடையே அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் நடப்பது இயல்புதான். அது விரைவிலேயே சரியாகிவிடும். ஆனால், ‘நாடோடித் தென்றல்’ படத்துக்கு பிறகு அது நடக்கவில்லை. சிறு மனஸ்தாபத்தில் பிரிந்தவர்கள்… ‘நாடோடி தென்றல்’ படத்துக்கு அடுத்து வந்த, குஷ்பு நடித்த ‘கேப்டன் மகள்’ படத்திற்கு அம்சலேகா, அதையடுத்து வந்த ’கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’ படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் என நீண்டுவிட்டது. ஆனால், அந்த பிரிவு தற்காலிகமானதுதான். அதன்பின்னர் இருவரும் இணைந்து, இன்று வரை இணை பிரியாத நண்பர்களாக இருப்பது காலம் அறிந்த உண்மை.
‘கிழக்கு சீமையிலே’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் எப்படி இணைந்தார்?
பாரதிராஜாவுடன் நான் பணியாற்றிக் கொண்டு இருந்த காலம். ஏ.ஆர். ரஹ்மான் அப்போது படங்களுக்கு இசையமைக்க தொடங்கியிருக்கவில்லை. அப்போது அவர் திலீப்… சிறு சிறு விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில் அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், 1992இல் மணிரத்னத்தின் ‘ரோஜா’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கத் தொடங்கியது.
இதனிடையேதான் ‘நாடோடி தென்றல்’ படத்துக்கு பின்னர் பாரதிராஜா – இளையராஜா நட்பில் விரிசல் ஏற்பட்டது. ‘நாடோடி தென்றல்’ படத்துக்கு அடுத்து ‘கேப்டன் மகள்’, அம்சலேகா இசையமைத்தார். அடுத்த படம் ‘கிழக்கு சீமையிலே’. அப்போது ஏ.ஆர். ரஹ்மான் பிரபலமாகி இருந்தார். எனவே, அவரை ஒப்பந்தம் செய்யலாம் என்று பேச்சு வந்தது. ஆனால், ‘கிழக்கு சீமையிலே’ கிராமிய கதை. கிராமத்து இசை ஏ.ஆர். ரஹ்மானுக்கு வருமா என்பது அப்போது மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்வியை ‘கிழக்கு சீமையிலே’ படத்தில்தான் முதன் முதலில் அவர் உடைத்தார். அடுத்து ‘கருத்தம்மா’ செய்தார். அதில் அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவருடனும் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். இருவருக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவரது வேலை செய்யும் முறை முழுக்க வேறானது. இளையராஜா காலையில் ஏழு மணிக்கு வேலையைத் தொடங்குவார். ஏ.ஆர். ரஹ்மான் இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு அப்போதுதான் தூங்க செல்வார்.