No menu items!

மோடி Vs எதிர்க் கட்சிகள் – வெல்ல முடியுமா?

மோடி Vs எதிர்க் கட்சிகள் – வெல்ல முடியுமா?

2024க்கான நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூட்டணி இன்று பெங்களூருவில் கூடி தேர்தல் வியூகங்களை விவாதிக்க இருக்கின்றன. இரண்டு நாட்கள் இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.

நாளை டெல்லியில் ஆளும் பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துக் கொள்கிறார்கள். இந்தக் கூட்டமும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் பற்றியதுதான்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 11லிருந்து மே 19 வரை நாடாளுமன்றத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடந்தன. முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படன. பாஜக கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த விவரங்களின் அடிப்படையில் பார்த்தோமென்றால் 2024 ஏப்ரலில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பு 2024 மார்ச் மாதம் வர வேண்டும். அதாவது இன்னும் 8 மாதங்களில் தேர்தல் அறிவிப்பு.

பாஜக அணிக்கு எதிராக 26 கட்சிகள் அணி திரண்டிருக்கின்றன. கடந்த மாதம் பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் 16 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 15 கட்சிகள் கலந்துக் கொண்டன. இந்த முறை 26 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து மதிமுக. விசிக ஆகிய கட்சிகளும் அடங்கும். காங்கிரசுடன் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சியும் பெங்களுரூ கூட்டத்துக்கு வருகிறது. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பாக ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததை தொடர்ந்து இந்த நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தில் இவர்கள் தேர்தல் வியூகத்தை சிந்திக்க வேண்டும். கூட்டணிக் கணக்கை புரிந்துக் கொள்ள வேண்டும். கூட்டணிக்கான குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வரையறைக்க வேண்டும். அத்தனை கட்சிகளும் அதை ஏற்க வேண்டும். மிக முக்கியமாக, எல்லாவற்றையும் விரைந்து செய்ய வேண்டும்.

காங்கிரஸ் அத்தனை வலுவில்லாத சூழலில் மாநிலக் கட்சிகளைதான் அது நம்பியிருக்க வேண்டிய நிலை இருக்கிறது. திமுகவைப் போல் காங்கிரசுக்கு முழுமையான மனப்பூர்வமான ஆதரவை வழங்க முடியாத நிலை இந்தக் கூட்டணியில் உள்ள பல கட்சிகளுக்கு இருக்கிறது. காரணம் மாநிலங்களில் இருக்கும் அரசியல் சூழல்கள். தமிழ்நாட்டில் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் நேரடிப் போட்டி இல்லாததால் இங்கு அந்தப் பிரச்சினை இல்லை.

பிரதமர் வேட்பாளரை முன் கூட்டியே தீர்மானிப்பதா அல்லது தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்வதா என்பதும் எதிர்க் கட்சிகள் முடிவெடுக்க வேண்டும்.

சமீபத்திய தேர்தலில் கர்நாடகத்தில் வென்று ஆட்சியைப் பிடித்திருப்பது காங்கிரசுக்கு பலத்தை தந்திருந்தாலும் இதே வெற்றியை, ஆதரவை வட மாநிலங்களிலும் பெற முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.

இன்றைய நிலையில் பாஜக மிகப் பெரிய சக்தியாக இருக்கிறது. ஆட்சியிலிருப்பதால் அதிகாரம் சார்ந்த கூடுதல் பலங்களும் இருக்கின்றன. வருகின்ற தேர்தலில் அதனையும் எதிர்த்து செயல்பட வேண்டும்.

பாஜகவிடமிருந்து கட்சிகளைக் காப்பாற்றுவதே பெரும் சிக்கலாக கட்சிகளுக்கு இருக்கிறது. சிவ சேனா உடைக்கப்பட்டது. இப்போது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உடைக்கப்பட்டிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை கட்சிகளை உடைபடாமல் காப்பற்றுவதே கட்சிகளுக்கு சவாலாக இருக்கும்.

United Progressive Alliance – ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரையும் மாற்றிவிடலாம் என்று எதிர்க் கட்சிகள் சிந்திக்கின்றன.

2004 பொதுத் தேர்தலின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடங்கப்பட்டது. 2004, 2009 ஆகிய இரு தேர்தல்களில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. 2019, 2024 தேர்தல்களில் தோற்றிருக்கிறது. இப்போது புதிய கட்சிகளுடன் புதிய வியூகங்களுடன் கூட்டணி இருப்பதால் பெயர் மாற்றம் அவசியம் என்று சில கட்சிகள் நினைக்கின்றன. இவை மட்டும் காரணமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதே பெயரில் இருந்தால் நினைவுக்கு வரும் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

பாஜகவையும் மோடியையும் வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கோஷம்தான் பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் உரக்க ஒலிக்கும். அதற்காகதான் இந்தியாவிலுள்ள முக்கியமான கட்சிகள் அனைத்தும் கூடியிருக்கின்றன.

அந்த ஒற்றை நோக்கம் போதுமா கூட்டணி அமைக்க என்பது சந்தேகத்துடன் பலர் கேட்கும் கேள்வி.

ஆனால் அரசியல் வரலாறு அப்படிதான் இருந்திருக்கிறது.

இந்திரா காந்தியை வீழ்த்த 1977ல் பல கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன.

ராஜீவ் காந்தியை வீழ்த்த 1989ல் ஒரு மெகா கூட்டணி உருவாக்கப்பட்டது.

வாஜ்பாயை வீழ்த்த 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானது.

இப்போது மோடியையும் பாஜகவையும் வீழ்த்த ஒரு கூட்டணி.

இந்த எதிர் கூட்டணி வரலாற்றில் அனைத்து முறையும் எதிர்க் கட்சிகள்தாம் வெற்றிப் பெற்றிருக்கின்றன.

2024ல் வரலாறு திரும்புமா? மாற்றி எழுதப்படுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...