நன்றாக செயல்பட்டும், உங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அழுது புலம்பி, அடுத்தவர் மீது புகார் கூறுவீர்களா… இல்லை இதுவும் ஒரு பாடம் என்று அதை அனுபவமாக ஏற்பீர்களா? நீங்கள் இதில் எந்த வழியை பின்பற்றுவீர்களோ தெரியாது. ஆனால் அஸ்வினைப் பொறுத்தவரை அவர் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
கடந்த உலகக் கோப்பை டெஸ்ட் சீசனில் 13 போட்டிகளில் அஸ்வின் எடுத்த விக்கெட்கள் 61. இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆல்ரவுண்டர் என்று காரணம் காட்டி அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா ஆட வைக்கப்பட்டார்.
இதுபற்றி அப்போது கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கவாஸ்கர், “இன்றைய சூழலில் இந்தியாவின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அஸ்வின், அவரைப் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு பிட்ச் ஒரு பொருட்டே அல்ல. எத்தகைய பிட்சிலும் (ஆடுகளம்) அவரால் விக்கெட்களை வீழ்த்த முடியும். அவரை ஆடவைக்காததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறை செய்துவிட்டது” என்றார். ஆட்டத்தின் இறுதியில் அவர் சொன்னதுதான் நடந்தது. ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று, இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த்து.
அஸ்வினை சேர்க்காதது பற்றி பலரும் புகார்களைத் தெரிவிக்க, எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருந்தார் அஸ்வின், தன் சோகங்களை மறைத்து சக வீர்ர்களுக்கு மைதானத்தில் தண்ணீர் கொண்டு சென்று கொடுத்தார். தனக்கான வாய்ப்புக்கு காத்திருந்தார்.
எல்லாம் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட, மைதானத்தில் மீண்டும் தனது சீற்றத்தை காட்டினார். 24.3 ஓவர்களில் 60 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் 33-வது முறை 5 விக்கெட்களைக் வீழ்த்தியவர் என்ற சாதனையுடன், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்தார். அஸ்வினின் சுழல் சீற்றத்தால், முதல் போட்டியில் இந்தியாவின் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது 150 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் சுருள, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை எடுத்து கம்பீரமாக நிற்கிறது.
நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இருந்து அஸ்வினை நீக்கியதைப் பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.
“வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்காத மனிதர்களோ, விளையாட்டு வீர்ர்களோ இல்லை. என்னைப் பொறுத்தவரை தாழ்வுகள் வரும்போது அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். எல்லாவற்றையும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்வேன். என் குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவேன். நன்றாக சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் மறந்து தூங்குவேன். இப்போதும் அதைத்தான் செய்தேன். வாழ்க்கையில் எனக்கு ஏற்படும் தாழ்வுகளுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன், ஏனென்றால் அந்த தாழ்ச்சிகள் வராவிட்டால் பின்னால் உயர்வுகள் வந்திருக்காது” என்று இதற்கு பதில் சொல்லி இருக்கிறார் அஸ்வின்.
It’s a good lesson to all to follow