No menu items!

அனில் அம்பானி – 34 லட்சம் கோடி to பூஜ்யம்

அனில் அம்பானி – 34 லட்சம் கோடி to பூஜ்யம்

அனில் அம்பானிக்கு இன்னொரு அடி. இந்தியாவில் அதிக சர்ச்சையான ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் தசால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனம் விமான தயாரிப்புக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது. 2017ல் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தபோது இந்த ஒப்பந்தம் முடிவானது. 6 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை தசால்ட் நிறுவனம் ரத்து செய்யப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. அனில் அம்பானியின் நிறுவனத்தால் போதிய நிதியை கொண்டு வர முடியவில்லை என்பதால் ஒப்பந்தம் ரத்தாகிறது என்று தசால்ட் நிறுவன தரப்பிலிருந்து செய்திகள் வந்திருக்கின்றன.

ஏற்கனவே கடும் நிதி சிக்கலில் இருக்கும் அனில் அம்பானிக்கு இது மிகப் பெரிய இழப்பு. அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக திவாலாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் புதிதாய் உருவாக்கப்பட்ட ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனமும் சேரப் போகிறது.

ஒரு காலத்தில் அண்ணன் முகேஷ் அம்பானியைவிட அதிக சொத்து மதிப்புடையவராக உலகின் எட்டாவது பெரிய பணக்காரராக இருந்தார். இன்று திவால் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

என்ன நடந்தது?

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த திருபாய் அம்பானிக்கு இரண்டு ஆண் வாரிசுகள். மூத்தவர் முகேஷ். அடுத்தவர் அனில்.

2002ல் திருபாய் அம்பானி இறந்தபோது உயில் எதுவும் எழுதவில்லை. இது சகோதரர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தியது. சில வருடப் போராட்டங்களுக்குப் பிறகு 2005ல் அம்மா கோகிலா பென் முன்னிலையில் சகோதரர்களுக்கிடைய ஒப்பந்தம் ஏற்பட்டது. குடும்பத்தின் நீண்டகால தொழில்கள் முகேஷ் அம்பானியிடமும் இண்டர்நெட், தகவல் தொழில் நுட்பம், மொபைல் தொழில் போன்ற வளர்ந்து வரும் தொழில்கள் அனில் அம்பானியிடமும் வந்தன. எதிர்காலத் தொழில்கள் அனில் வசம் வந்ததால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று நம்பப்பட்டது.

அதற்கேற்றாற்போல் அனில் அம்பானி வேகமாக வளர்ந்தார். அவரது ஆர்காம் நிறுவனம் செல்போல் தொழில் நுட்பத் தொழிலில் பிரமாண்டமாய் இறங்கி சந்தையைப் பிடித்தது.

2008ல் அனில் அம்பானி சொத்து மதிப்பு 34 லட்சம் கோடி ரூபாய். உலகின் ஆறாவது பெரும் பணக்காரர்.

சரியாக 12 வருடங்கள் கழித்து 2020ல் லண்டன் நீதிமன்றம் ஒன்றில் தன்னுடைய சொத்து மதிப்பு பூஜ்யம் என்றார் அனில் அம்பானி. என்னுடைய அனைத்து தொழில்களும் திவாலாகிவிட்டன என்று கூறினார். 12 வருடங்களில் 34 லட்சம் கோடி ரூபாய் காலி.

2019ல் அனில் அம்பானிக்கு பணச் சிக்கல் வந்தது. எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் 450 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பணத்தைக் கொடுக்காவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல். அந்த சமயத்தில் அண்ணன் முகேஷ் அம்பானி அந்தப் பணத்தை கொடுத்தார். தம்பிக்கு உதவிய அண்ணன் என்று தலைப்பு செய்திகளாக வந்தன. ஆனால் அவர் சும்மா கொடுக்கவில்லை அனிலின் ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கிக் கொண்டுதான் பணத்தைக் கொடுத்தார் என்பது பிறகு தெரிந்தது.

பாகப் பிரிவினைக்குப் பிறகு அண்ணன் தம்பி உறவு நேசமாக இல்லை. ஒருவருக்கொருவர் பேசாத நிலைதான் இருந்தது. ஆனால் சமீபத்தில் முகேஷ் வீட்டுத் திருமணங்களில் அனிலும் அவரது மனைவி டினா முனிமும் கலந்துக் கொண்டார்கள். விழாக்களில் பேசிக் கொண்டாலும் நெருக்கமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானிக்கும் அனில் அம்பானிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. முகேஷ் கூச்ச சுபாவமுடையவர், தொழிலுக்குதான் முதல் முக்கியத்துவத்தை கொடுப்பவர். ஆனால் அனில் அப்படியல்ல. கலகலப்பான மனிதர். தொழிலும் கொண்டாட்டங்களும் கலந்துதான் வாழ்க்கை என்று வாழ்பவர்.

நடிகை டினா முனிமை காதலித்தது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. நடிகையை மருமகளாய் ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அனிலின் மனைவியானார் டினா முனிம்.

அனில் அம்பானியின் தொழில் சம்ராஜ்யம் வீழ்ந்தற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவரது மிகப் பெரிய கனவான ரிலையன்ஸ் டெலிகம்யூனிகேஷன்ஸ் தவறான தொழில்நுட்பங்கள், ஒப்பந்தங்களால் வீழ்ந்தது.

2ஜி வழக்கில் அனில் அம்பானி நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகள் சிக்கினார்கள். இது அனில் அம்பானி பங்குகளை வீழ்த்தியது.

சரியான திட்டமிடல் இல்லாமல் பல தொழில்களை தொடங்கியது. திட்டமிடல் இல்லாததால் அவற்றை நடத்த முடியாமல் சிக்கியது.

அதிக பணத் தேவைக்காக சீன நிதி நிறுவனங்களிலிருந்து 120 கோடி டாலர்களுக்கு மேல் கடன் வாங்கி கட்டமுடியாமல் வழக்குகளில் சிக்கியது.

2016ல் அண்ணன் முகேஷ் அம்பானியும் தொலை தொடர்பு தொழில் இறங்கியது. இது அனில் அம்பானியின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை பாதித்தது. பாகப் பிரிவினையின் போது சகோதரர்கள் இருவரும் ஒரே தொழிலை நடத்தக் கூடாது என்ற விதி இருந்தது. ஆனால் அந்த விதியை இருவருமே கையெழுத்திட்டு விலக்கிக் கொண்டார்கள்.

இப்படி பல சிக்கல்கள் அனில் அம்பானிக்கு.

அனில் அம்பானி குடும்பத்துக்கு இப்போது 250 கோடி ரூபாய் அளவில் சொத்துக்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. குடும்ப நகைகளையெல்லாம் விற்று வருகிறார். சமீபத்தில் சில நகைகளை விற்று 9 கோடி ரூபாய் பெற்றிருக்கிறார்.

இன்று அனில் அம்பானியின் நிலை பணக்கார ஏழை என்பதுதான். அனில் அம்பானிக்கு இரண்டு மகன்கள். அவர்கள்தான் அனில் அம்பானி நிறுவனங்களை லாபகரமாக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...