சுவீட் காரம் காபி (தமிழ் வெப் சீரிஸ்) – அமேசான் ப்ரைம்
பெண்களின் சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சுவீட் காரம் காபி வெப் சீரிஸ் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
பிஜோய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில், லட்சுமி, மதுபாலா, சாந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார், மருமகள், பேத்தி ஆகிய 3 பெண்கள், ஆண்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு தங்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.. இதிலிருந்து விடுபட கோவாவுக்கு தனியாக ஒரு ட்ரிப் போக திட்டமிடுகிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை இந்த தொடர் சுவையாக சொல்கிறது. ஜீன்ஸ் படத்தில் நடித்த பாட்டி கதாபாத்திரத்தை மீண்டும் அதே சுவையுடன் ஏற்று நடித்திருக்கிறார் லட்சுமி.
வெப் சீரிஸ் என்ற பெயரில் ஆபாச காட்சிகள் நிறைந்துள்ள தொடர்களுக்கு மத்தியில், ஆபாசம் துளியும் இல்லாத, குடும்பத்துடன் கண்டுகளிக்க்க் கூடிய தொடராக இது அமைந்துள்ளது.
குட்நைட் (தமிழ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
குறட்டையால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நகைச்சுவையும், செண்டிமெண்டும் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் குட்நைட். திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய இப்படம், இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.
ஐடி துறையில் பணியாற்றும் நாயகனுக்கு குறட்டை ஒரு தீராத பிரச்சினையாக இருக்கிறது. திருமணத்துக்கு பின் அவனது குறட்டை பிரச்சினையால், நாயகிக்கு தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் வருகிறது. இதனால் குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் நாயகன், தனி அறையில் படுத்து தூங்குகிறார். இதனால் அவர்களின் வாழ்க்கையில் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கின்றன. இந்த சிக்கல்கள் எப்படி தீர்கின்றன என்பதுதான் பட்த்தின் கதை.
ஹீரோ, ஹீரோயினைத் தவிர, நாயகனின் அக்கா, அவரது கணவர், நாயகியின் வீட்டு உரிமையாளர்களான வயதான தம்பதி என்று சுவாரஸ்யமான பல கதாபாத்திரங்கள் இப்படத்தில் நம்மை ஈர்க்கின்றன.
திரிசங்கு (மலையாளம்) – நெட்பிளிக்ஸ்
அர்ஜுன் அசோகன், அன்னா பென் நடித்துள்ள திரிசங்கு திரைப்படம் இப்போது நெபிளிக்ஸில் வெளியாகி உள்ளது.
நாயகனும், நாயகியும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறார்கள். இதற்காக நாயகி வீட்டை விட்டு ஓடிவந்து பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக, அதே நேரத்தில் நாயகனின் தங்கை தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார், தங்கையை தேடும் பொறுப்பு நாயகனுக்கு வருகிறது. தன் மாமன்களுடன் தங்கையைத் தேடி நாயகன் செல்ல, வீட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாத நாயகியும் அவர்களை பின்தொடர்கிறார். . அவர்கள் காதல் என்ன ஆனது? நாயகனின் தங்கையை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதுதான் கதை.
சீரியஸான இந்த கதை படு காமெடியாக சொல்லப்பட்டு இருக்கிறது. சிவாரஸ்யமான காதல் பிளஸ் காமெடி கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
விமானம் (தமிழ்) – ஜீ5
சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின் நடித்துள்ள விமானம் திரைப்படம் தற்போது ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.
கழிப்பறையை சுத்தம் செய்யும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனி. இவரது ஒரே மகனுக்கு விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்று ஆசை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகனின் ஆசையை நிறைவேற்ற அப்பா சமுத்திரக்கனி படும் கஷ்டங்கள்தான் கதை.