தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாய் தமிழ்நாட்டு பாஜக கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறது. இது தமிழ்நாட்டு காட்சி.
நேற்று மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பங்கள் நடந்திருக்கின்றன. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உடைந்திருக்கிறது. சரத் பவாரின் சகோதரர் மகனும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான அஜித் பவார் கட்சியை உடைத்திருக்கிறார். பாஜக – சிவசேனை கூட்டணியில் நடந்து வரும் ஆட்சியில் இணைந்திருக்கிறார். துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இது போன்ற ஒரு முயற்சியை 2019ல் எடுத்தார். அந்த முயற்சி 60 மணி நேரத்தில் தோற்று சிவசேனை – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உருவானது. இப்போது அதே போன்ற ஒரு திருப்பம். இந்த முறை கூடுதல் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 53 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 30 பேர் அஜித் பவாருடன் இருக்கிறார்கள் என்று அஜித்தின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். சரி பாதி உறுப்பினர்களுக்கு மேல் இருப்பதால் அஜித் பவார் குழு மீது கட்சித் தாவல் சட்டம் பாயாது. தேசியவாத காங்கிரசே நான் தான் என்கிறார் அஜித் பவார்.
எங்கெல்லாம் தனக்கு ஆதரவு இல்லையோ அங்கெல்லாம் செல்வாக்கு மிக்க கட்சிகளை உடைத்தும் பிளந்தும் தனது அரசியலை பாஜக நிலை நிறுத்தி வருகிறது என்பதற்கு மகாராஷ்டிராவில் நடந்த இந்த திருப்பம் உதாரணம். சில மாதங்களுக்கு முன்பு உதவ் தாக்கரே தலைமையில் இருந்த சிவ சேனை கட்சி உடைந்து ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவில் மகாராஷ்டிரா முதல்வரானார். தாக்கரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சிவசேனை கட்சி இப்போது ஏக்நாத் ஷிண்டேயிடம் இருக்கிறது. உதவ் தாக்கரே தனித்து விடப்பட்டிருக்கிறார். இப்போது சரத் பவார் தனித்துவிடப்பட்டிருக்கிறார்.
அஜித் பவார் துணை முதல்வராக அவருடன் எட்டு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.
இங்கேதான் நம்முடைய செந்தில் பாலாஜி வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான, அமலாக்கத் துறை விசாரணையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கக் கூடாது என்று பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்கள்.
இது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான், மகாராஷ்டிராவுக்கு அல்ல.
நேற்று அமைச்சர்களாக பொறுப்பேற்ற 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஐந்து பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.
துணை முதல்வராக பதவி ஏற்றிருக்கும் அஜித் பவார் மீது கூட்டுறவுத் துறை வங்கி ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.
ஹாசன் முஷ்ரிஃப் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற ஊழல் வழக்கு இருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டையும் அமலாக்கத் துறைதான் விசாரித்து வருகிறது.
சாஹன் புஜ்பால் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. விசாரணைகள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
பிரஃபுல் பட்டேல் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு இருக்கிறது. அவரது பல சொத்துக்கள் அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
அதிதி தாக்கரே மீது அணை கட்டுமானம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.
இத்தனைப் பேரையும் அமைச்சரவையில் இணைத்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உடைக்கப்பட்டிருக்கிறது.