1980 முதல் 1990-களில் சாதியை தூக்கி வைத்து கொண்டாடும் திரைப்படங்கள் அதிகளவில் வெளிவந்தன. அதிலும், ஆதிக்க சாதிகளாக கருதப்படும் சாதிகளைச் சேர்ந்த கதாபாத்திரங்களை கொண்டாடும் படங்கள் ரொம்பவே கல்லா கட்டின.
ஆனால் அடுத்தடுத்து வந்த இளம் படைப்பாளிகள், இந்தமாதிரியான சாதி சாயம் இல்லாத அருமையான படங்களின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். தமிழ் சினிமாவில் ரசனை சார்ந்த படைப்புகளுக்கும், வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் படைப்பாளிகளுக்கும் மரியாதை உருவானது.
இப்படி மீண்டு வந்த சினிமாவில் அடுத்து சாதியை வைத்து படமெடுப்பது என்பது இல்லாமலே போனது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சாதி என்ற ஒன்று இருக்கிறதா என்று யோசிக்கும் அளவிற்கு கதைகளிலும், படைப்புகளிலும் சாதியின் அடையாளம் இல்லாமலே போனது.
இப்படியொரு சூழலில்தான், சாதி, குறியீடு என பழைய பஞ்சாயத்தைப் பேசும் ஒரு சில படைப்புகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இதன் ஆரம்பப்புள்ளியாக கருதப்படுகிறவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவருக்கு அடுத்து இரண்டாமிடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ் என சினிமா விமர்சகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்திருக்கும் ‘மாமன்னன்’ படம் நாம் மறந்துப்போன சாதி வன்மத்தை மீண்டும் நினைவுப்படுத்தும் படமாகவே வந்திருக்கிறது இது தேவையா என சமூக ஊடங்கங்களில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அதேபோல் மிகச்சரியாக சில சமூகத்தின் வலியை, எதிர்ப்பார்பை பிரதிபலித்திருக்கிறது என்றும் இன்னொரு வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இப்படி பரபரப்பை கிளப்ப காரணம், ‘மாமன்னன்’ படவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசனை வைத்து கொண்டு, மேடையில் மாரி செல்வராஜ் பேசிய பேச்சுதான்.
கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாபாத்திரத்தில் என் அப்பா இருந்தால் எப்படியிருக்கும் என்பதே ‘மாமன்னன்’ என்று சொல்லவும், முன்பு மாரி செல்வராஜ் எழுதிய கடிதமும் இந்நிகழ்விற்கு பிறகு ஒன்று சேர தமிழ்நாட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மாரிக்கு வரிந்து கொண்டு சிலர். கமலுக்கு தோள் கொடுக்க சிலர். இந்த வார்த்தை சண்டையை வேடிக்கைப் பார்க்க பலர் என நிலவரம் கலவரமானது.
இந்த கருத்து கலவரம், மாமன்னன் படத்திற்கான செலவில்லாத விளம்பரமாகி இருப்பது என்பதுதான் உண்மை.
ஒரு படம் இந்தளவிற்கு மக்களிடம் போய் சேர குறைந்தப்பட்சம் 60 லட்சம் முதல் ஒரு சில கோடிகள் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் சல்லிப் பைசா செலவில்லாமல் இந்தப் படத்திற்கு பிரம்மாண்டமான விளம்பரம் கிடைத்திருக்கிறது.
மேலும் உதயநிதி இதுவரை நடித்தப்படங்களில், குறிப்பாக நல்ல கதையம்சம் உள்ள கடைசி இரண்டுப் படங்களுக்கு பெரிய வரவேற்பும் இல்லை. வசூலும் இல்லை. இது சினிமா வியாபாரிகளுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
இந்த உண்மை ஒரு பக்கம் இருக்க, ’இனி நான் நடிக்கப் போவது இல்லை’ என உதயநிதி தீர்மானித்திருப்பதால், ’மாமன்னன்’ படத்தை ஒரு வெற்றிப்படமாக்க வேண்டுமென்று ஒரு தரப்பு களத்தில் இறங்கி இருந்தது.
இப்பொழுது படத்திற்கு கிடைத்திருக்கும் பிரபலமும், கமலின் அரவணைப்பும், உதயநிதியின் உற்சாகமும் சேர்ந்த மாதிரி இருக்கும் களச்சூழலைப் பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.
மாரி செல்வராஜ் மேடையில் பேசியதை கமல் மறுக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. ஆனால் மறுநாட்களிலேயே மாரி செல்வராஜையும், உதயநிதியையும் பாராட்டி கமல் கட்டியணைத்தார். புன்னகைப் பூத்தார். உதயநிதியும் இப்படியொரு படத்தில் நடித்தத்தற்காக பெருமைப்படுவதாக கூறுகிறார்.
‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆழ்வார் பேட்டை ஆண்டவர், உதயநிதியிடம் நெருக்கமாகி இருக்கிறார். ‘தம்பி..தம்பி..’ என்று அடிக்கடி அழைக்கிறார்.
அதேபோல் ’இந்தியன் -2’ தயாரிப்பில் தம்பி இருக்கிறார். அடுத்து வருகிற பல படங்களுக்கு தம்பியின் ஆதரவு தேவை. இப்படி பல விஷயங்கள்.
இந்த சமாச்சாரங்களை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்த ரகளைகள் எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவையோ என்ற சந்தேகம் எழுகிறது என்கிறார்கள்.