“செந்தில் பாலாஜி விஷயத்துல துரைமுருகன் ரொம்ப வருத்தத்துல இருக்காராம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“துரைமுருகனுக்கு என்ன வருத்தம்?”
“செந்தில் பாலாஜி மேல டெல்லி நடவடிக்கை எடுக்கும்னு துரைமுருகன் முன்னாலயே கணிச்சிருக்காரு. அதனால அவருக்கு தேவையில்லாம முக்கியத்துவம் தர வேணாம்னு முதல்வர்கிட்ட அவர் 2 மாசம் முன்னாடியே சொன்னாராம். ‘அவர் மேல இருக்கற வழக்குகள் முடியற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க. நீங்களும் அவருக்கு தேவையில்லாம முக்கியத்துவம் கொடுக்காதீங்க’ன்னு துரைமுருகன் சொல்லி இருக்காரு. ஆனா முதல்வர் அதைக் கேட்கலை. அதுல துரைமுருகனுக்கு ரொம்பவே வருத்தமாம். ‘அப்பவே நான் சொன்னதை கேட்டிருந்தா நிலைமை இந்த அளவுக்கு ஆகியிருக்காது’னு புலம்பறாராம்.’
”இப்ப ஏதும் அட்வைஸ் பண்ணலையா?”
“இப்பவும் சொல்லி இருக்கார். கைதி எண்ணெல்லாம் தந்துட்டாங்க. அவரை ஏன் இலாகா இல்லாத அமைச்சர்னு நாம ஏன் மல்லு கட்டணும்? திமுக ஏற்கனவே பல சோதனைகளை கடந்திருக்கு. அமலாக்கத் துறையை நாம் அரசியல் ரீதியாக எதிர் கொள்ளலாம். நமக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவும் இருக்கு. அதே நேரத்துல அளவுக்கு அதிகமா செந்தில் பாலாஜிக்காக குரல் கொடுக்க வேண்டாம். திமுகவின் மத்த மூத்த தலைவர்களின் நிலைப்பாடும் இதுதான். அப்புறம் உங்கள் விருப்பம்னு முதல்வர்கிட்ட துரைமுருகன் நேருக்கு நேராவே சொல்லிட்டாராம். முதல்வரும் இப்ப இதைப்பத்தி யோசிச்சுட்டு இருக்கார்.”
“அப்படின்னா திமுக மூத்த தலைவர்கள் மத்தியில செந்தில் பாலாஜிக்கு ஆதரவு இல்லையா?”
“புதுசா கேக்குறீங்க. காலம் காலமா திமுகல இருக்கற தலைவர்கள் பலருக்கு செந்தில் பாலாஜிக்கு சமீப காலத்துல முக்கியத்துவம் கொடுத்த்து பிடிக்கலை. அவங்க எல்லாரும் இந்த கைது விஷயத்தை கிட்டத்தட்ட கொண்டாடறாங்கன்னு சொல்ல்லாம்.”
“காவேரி ஹாஸ்பிடல்ல நடக்கற விஷயங்கள் எதையாவது கேள்விப்பட்டியா?”
“காவேரி ஆஸ்பிடல்ல செந்தில் பாலாஜியைப் பார்க்கறதுக்கு யாரெல்லாம் வர்றாங்கன்னு அமலாக்கப்பிரிவு அதிகாரிங்க தீவிரமா கண்காணிச்சுட்டு இருக்காங்களாம். இந்த விஷயத்தை காவேரி மருத்துவமனை நிர்வாகம் திமுக தலைமைக்குச் சொல்லி, ஜாக்கிரதையா இருக்க சொல்லி இருக்காங்க. அதனால இப்ப திமுக பிரபலங்கள் யாரும் காவேரி ஹாஸ்பிடல் வழியாக் கூட போறதில்லையாம்.”
“செந்தில் பாலாஜியோட தம்பி அசோக் குமாரை அமலாக்கத் துறை தீவிரமா தேடறதா சொல்றாங்களே?”
“வருமானவரி சோதனையின்போதும், அமலாக்கத் துறை சோதனையின்போதும் அவர் வீட்ல இல்லை. இப்ப அவர் வீட்டை சீல் வச்சிருக்காங்க. விசாரணைக்கு ஆஜராகணும்னு அவர் வீட்டு வாசல்ல நோட்டீஸ் ஒட்டி இருக்காங்க. அவர் லண்டன்ல இருக்கார், பெங்களூர்ல இருக்கார்னெல்லாம் வதந்தி வந்தாலும் அவர் கரூரில்தான் எங்கயோ இருக்கறதா அமலாக்கத் துறை அதிகாரிங்க நம்பறாங்க. அவரை எப்படியும் ஓசைப்படாமல் அமுக்கிப் பிடிச்சு டெல்லிக்கு கொண்டுபோறதுதான் அவங்களோட திட்டம்.”
“தமிழக பாரதிய ஜனதா மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தமிழக போலீஸ் கைது செஞ்சிருக்கே?”
“மார்க்சிஸ்ட் கட்சி கொடுத்த புகார்ல கைது பண்ணிருக்காங்க. தன்னோட ட்விட்டர் பக்கத்தில் ‘மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு.வெங்கடேசன் கள்ள மெளனம் காக்கிறார்’எனப் பதிவிட்டிருந்தார்.எஸ்.ஜி.சூர்யா, மதுரையில் அவர் கூறியபடி அந்த பகுதியும் இல்லை கவுன்சிலரும் இல்லை. தவறான தகவல் தந்து அவதூறு செய்கிறார் என்று அவர் மேல் புகார் கொடுக்கப்பட்டது. உடனே நடவடிக்கை எடுத்துட்டாங்க”
“இன்னைக்கு உமா கார்கினு இன்னொரு பாஜக ஆதரவாளரையும் கைது பண்ணியிருக்காங்களே?”
“ஆமா. இவங்க ரொம்ப கொச்சையா ட்வீட் பண்ணுவாங்க. விஜய்யையும் அவரது மகளையும் பெரியாரையும் கொச்சைப்படுத்தி ஒரு ட்வீட் போட்டிருந்தாங்க. அதற்காக கைது செய்யப்பட்டிருக்காங்க. இதில என்ன வேடிக்கைனா நேத்துதான் சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர்னு அண்ணாமலை கையால விருது வாங்கினாங்க”
“இப்படி கொச்சையா எழுதுறதுதான் சிறந்த சமூக ஊடக செயல்பாடா? இவங்க ரூட்டே புரியல. சரி, பாஜகவின் ரியாக்ஷன் என்ன?”
”நிர்மலா சீதாராமனுக்கு வேண்டப்பட்டவர் எஸ்.ஜி.சூர்யா. சூர்யா கைதைக் கண்டிச்சு நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவு செஞ்சிருந்தார். இந்த கைது விஷயத்தை அவர் பிரதமரோட கவனத்திற்கும் கொண்டு போயிருக்கார். பாரதிய ஜனதா சட்ட நிபுணர்களைத் தொடர்பு கொண்டு, அவரை வெளியே எடுக்கறதுக்கான வேலையில ஈடுபடுமாறு டெல்லி தலைமை அறிவுறுத்தி இருக்கு.”
“பிடிஆரைப் பத்தி ரொம்ப நாளா எந்த தகவலும் இல்லையே. செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரா சமூக வலைதளத்துல எதிர்ப்பு தெரிவிச்சதைத் தவிர எதையுமே பண்ணலையே?”
“அவருக்கு இங்க இருக்கவே பிடிக்கலையாம். ஒரு பக்கம் திமுகவின் மூத்த தலைவர்களும், மறுபக்கம் மதுரை திமுக்காரங்களும் தன்னை மதிக்கலைன்னு அவர் நினைக்கறார். அதனால அமைச்சர் பதவியை ராஜினாமா செஞ்சு அமெரிக்காலயே செட்டிலாக விரும்பறார். ஆனா ஏற்கெனவே செந்தில் பாலாஜி விஷயம் தீவிரமா இருக்கும்போது நீங்களும் ராஜினாமா பண்ணி பிரச்சினையை அதிகப்படுத்த வேணாம்னு மத்த தலைவர்கள் அவரை கூல்படுத்தி வச்சிருக்காங்க.”
“அதிமுக விஷயம் எதுவும் இல்லையா?”
“பாஜக கூட்டணியைப் பத்தி நம்பாம நாமளே சொந்தக் கால்ல நிக்கறதைப் பார்ப்போம்னு கட்சிக்காரங்ககிட்ட எடப்பாடி சொல்லி இருக்கார். அதேநேரத்துல அமித் ஷாவை சந்திக்க சசிகலா முயற்சி பண்ணிட்டு இருக்காங்களாம். எடப்பாடி இல்லாத மத்த அத்தனைபேரையும் ஒருங்கிணைச்சு பாஜகவோட கூட்டணி அமைக்கறது அவங்களோட திட்டம்.”
“அது சாத்தியமா?”
“அத்தனை அதிமுக கோஷ்டியும் பாஜக பக்கம் வந்துரும்னு கமலாலயத்துல கான்ஃபிடெண்ட்டா சொல்றாங்க”