அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர் காவேரி மருத்துவனமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கலைஞர் கோட்டம் திறப்பு விழா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வருகை திடீர் ரத்து
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.
கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சஞ்சய்சிங் எம்.பி. ஆகிய இருவரும் பீகாரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்கின்றனர். அவர்களுடன் திருச்சி சிவா எம்.பி.யும் செல்கிறார். இதனால் கலைஞர் கோட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை திறக்கப்படுகிறது.
சாலை வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விடியல் தருவோம்’ என்று கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்து உள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி, ஏற்கெனவே தமிழக மக்களின் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் தீயில், எண்ணெய் வார்த்ததைப் போல் உள்ளது.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஏற்கனவே இரண்டு முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பஸ்களில் மறைமுகக் கட்டண உயர்வு என்று அரசுக்கு வரும் வரி வருவாய்களை உயர்த்தி, வாக்களித்த தமிழக மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை, தற்போது 5 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழக மக்களிடம் இருக்கும் கடைசி ரூபாயையும் பிடுங்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (20.06.2023) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (21.06.2023) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பலை பார்வையிட கடலுக்குள் சென்ற சுற்றுலா பயணிகள் மாயம்!
நூறு வருடங்களுக்கு முன்னர் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகம் அழ்கடலுக்குள் உள்ளது. இதனைப் பார்வையிட, 21 அடி கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்று 5 சுற்றுலா பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுள்ளது. புறப்பட்ட 2 மணி நேரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் தனது சிக்னலை இழந்துள்ளது. நீர் முழ்கி கப்பலில் பயணித்த பயணிகளின் நிலைமை திங்கட்கிழமைவரை தெரியவில்லை. மாயமானவர்களை மீட்கும் பணியில் கனடா – அமெரிக்கா கடற்படைகள் இறங்கி உள்ளன.
மீட்புப் பணிகள் குறித்து அமெரிக்க கடற்படை கூறும்போது, “அந்த தொலைதூரப் பகுதியில் தேடுதல் நடத்துவது சவாலானது. அவர்களை கண்டுபிடிக்க அனைத்து தொழில் நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர்களது கப்பலில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதாக நம்பப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.