No menu items!

27 வருடங்களுக்குப் பிறகு ஜூன் மாத திடீர் மழை – என்ன நடக்கிறது?

27 வருடங்களுக்குப் பிறகு ஜூன் மாத திடீர் மழை – என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், கனமழையும் இப்போது வரலாற்று நிகழ்வாகியுள்ளது. இந்த திடீர் கனமழைக்கு என்ன காரணம்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ”என்று கூறியிருந்தது. எனவே, மழை பெய்யும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையில் பல சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெதர்மேன் ட்விட்

ஜூன் மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக பெய்துள்ள இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டிள்ள ட்விட்டில், ‘1991, 1996 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளது. 1996ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு ஒரு வாரத்துக்கு மழை விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னர், 27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டுதான் மழை காரணமாக சென்னையில் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலில் இருந்து நகர்ந்துவரும் மேகக்கூட்டங்கள் காரணமாக இப்போது மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத வெப்ப அலை வீசிய பின்னர் இயற்கை அதை சமன் செய்வதற்காக இது போன்ற மழை பெய்வது வழக்கம். ஆனாலும், கடலில் இருந்து மழை மேகங்கள் வருவதைப் பார்ப்பது கனவு போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளது போல், சென்னையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 செ.மீ மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஜூன் மாதம் இதுவரை 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஜூன் மாத மழையளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

எல் நீனோ விளைவு: முன்பே எச்சரித்த அமெரிக்கா

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இயல்புக்கு மாறாக அதிக வெயில் அடித்தது. கத்திரி முடிந்த பிறகும் இந்த நிலையே தொடர்ந்தது. இதுபோல் இயல்புக்கு மாறாக இப்போது கனமழை பெய்து வருகிறது. வானிலை இயல்புக்கு மாறாக அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது என்பதையே இவை காட்டுகிறது. இதற்கு காரணம், பருவநிலை மாற்றம்.

இந்த ஆண்டு எல் நினோ காலநிலை நிகழ்வு ஆரம்பித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல் நினோ ஏற்கனவே பூமியை பாதிக்கக் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும். இதனால் தீவிர வானிலை மற்றும் அதிக வெப்பம் அடிக்கடி நிகழும். எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும். இந்தியாவை பொறுத்தவரை, எல் நினோ தாக்கத்தை ஏற்படுத்த 70 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் முன்பே தெரிவித்திருந்தது.

நாளையும் மழை தொடரும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “இன்று மீண்டும் வட தமிழகத்தை மையமாக வைத்து இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...