இயக்குநர் ராதா மோகன் தன்னுடைய உணர்வுப்பூர்வமான படங்களுக்காக அதிகம் பாராட்டப் பட்டவர். இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ‘பொம்மை’.
ராதா மோகன் படங்கள் அதிக பேசப்பட்டாலும் இவரது படங்கள் ஏதாவது ஒரு வகையில் பிறமொழிப் படங்களின் தழுவலாகவே இருந்தது வந்திருக்கின்றன என்கிறார்கள் திரைப்பட விமர்சகர்கள்.
அந்தவகையில் இப்போது ‘பொம்மை’ படமும் 1987-ல் வெளியான ’Mannequin’ என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்தான் என்று பேச்சு அடிப்படுகிறது.
மனிதர்களைப் போலவே இருக்கும் காட்சிப் பொம்மைகளை செய்வதில் கில்லாடியா ஹீரோ, வேலையை செய்து முடிப்பதில் ரொம்பவே நேரம் எடுப்பவர். இதனால் அவரது முதலாளியினால் வேலையை விட்டு தூக்கப்படுகிறார். மறுபக்கம் அவரது காதலியும் ஹீரோவை ஒன்றுக்கும் ஆகாத தண்டம் என கழற்றிவிட்டு விடுகிறார்.
இந்நிலையில் ஒரு நாள் நல்ல மழை. அதில் சிக்கிக்கொள்ளும் ஹீரோவின் பைக் ரிப்பேர் ஆகிவிடுகிறது. அப்போது ஓரமாக ஒதுங்கி நிற்கும் அவர் ஒரு கடையைப் பார்க்கிறார். அங்கு அவர் செய்த மன்குயின் இருக்கிறது. அதைப் பார்த்ததும் உற்சாகமாகிறார். மறுநாள் அந்த கடை உரிமையாளருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அதிலிருந்து அவரை காப்பாற்றுகிறார் ஹீரோ. இதனால் ஹீரோவுக்கு வேலை கிடைக்கிறது.
அப்போது அந்த பொம்மையில் ஒரு பெண்ணின் ஆவி இருக்கிறது. தான் இதுவரையில் உண்மையான அன்பை, காதலை உணர்ந்தது இல்லை என்று ஹீரோவிடம் சொல்கிறது. அதேபோல் ஹீரோ அந்த பொம்மையை ஒரு பெண்ணாக உணரும் போது மட்டுமே அந்த ஆவியால் பொம்மையின் மூலம் தொடர்பு கொள்ளமுடிகிறது.
இந்த சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதே மீதி கதை. இதைதான் கொஞ்சம் அப்படி இப்படி என்று டிங்கரிங் வேலைகள் பார்த்து இங்கே ‘பொம்மை’ படமாக தட்டிவிட்டிருக்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.
இப்பேர்பட்ட பொம்மையாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். ஹீரோவாக எஸ்.ஜே. சூர்யாவும் பொம்மை காதலிக்கிறார்.
தமிழ் மீடியாவை கண்டுக்கொள்ளாத ’ஆதிபுரூஷ்’
தொழில்நுட்பமும், அறிவியலும் எங்கேயோ போய் கொண்டிருக்க, திரைப்படங்களின் மேக்கிங் மாயாஜாலங்கள் வேறு தளத்தில் பிரமிப்புடன் ரசிக்க தூண்டி வருகின்றன.
இது ஒரு பக்கம் இருந்தாலும், இப்போது மக்களை ஏதாவது ஒரு காரணத்தை வைத்து மூளைச்சலவை செய்யும் வேலைகளையும் திரைப்படங்கள் வாயிலாக செய்துவருவது வாடிக்கையாகி வருகிறது.
அப்படியொரு படமாக ’பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுரூஷ்’ படத்தின் விளம்பர யுக்திகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.
அதாவது ஆதிபுரூஷ் படம் வெளியாகும் திரையரங்குகளில் ரசிகர்கள் படம் பார்க்க இருக்கைகள் ரிசர்வ் செய்யப்பட்டாலும், அனுமாருக்கும் ஒரு இருக்கை யாருமில்லாமல் வெற்று இருக்கையாக விடப்படும் என்று ஒரு அதிரிபுதிரி ப்ரமோஷனை ஆதிபுரூஷ் பப்ளிசிட்டி குழு அறிவித்தது.
இப்படி வித்தியாசமான ப்ரமோஷனுடன் பான் இந்தியா படமாக ஆதிபுருஷ் விளம்பரப்படுத்தப்பட்டாலும், தமிழ் நாட்டில் அப்படக்குழுவினர் இங்குள்ள ஊடகத்தினரை, திரைப்பட விமர்சகர்களை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளவில்லை.
இப்பட நிகழ்விற்கு அழைத்து சென்ற பத்திரிகையாளர்களை விழா நடக்கும் இடத்திற்குள் நுழையவிடவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பத்திரிகையாளர்கள் வெறுத்து போய், நள்ளிரவு 1 மணிக்கு வேறு வழியில்லாமல் கஷ்டப்பட்டு திரும்பியிருக்கின்றனர்.
அனுமாருக்கு ஒரு இருக்கையை ஒதுக்க சொன்ன ஆதிபுரூஷ் இயக்குநர், பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகளை ஒதுக்க சொல்லவில்லை. கண்டுகொள்ளவும் இல்லை.
இப்படியாக தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த யாரையும் கண்டுக்கொள்ளாத ஆதிபுரூஷ் மீது ஏக கோபத்தில் இருக்கிறது தமிழ் ஊடக வட்டாரம்.
’ஆஹா’ ஒடிடி-யை குறிவைக்கும் ’ஜியோ சினிமா’!
இந்திய ஒடிடி சந்தையை கைப்பற்றுவதில் இப்போது கடும் போட்டி உருவாகி இருக்கிறது.
அமேசான் ப்ரைம் வீடியோவா, ஹாட்ஸ்டாரா அல்லது நெட்ஃப்ளிக்ஸா என்று இருந்த முக்கோண போட்டியில் இப்போது தெம்பாக தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறது ஜியோ சினிமா.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒரு பைசா செலவில்லாமல் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று அம்பானி வழக்கம் போல் தனது அதிரடியைக் காட்ட, ஜியோ சினிமா பக்கம் இப்போது சந்தாதாரர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
அதோடு விட்டுவிடாமல் இந்திய சந்தையை கைப்பற்றியே ஆகவேண்டுமென ஜியோ சினிமா மும்முரம் காட்டி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஹாட்ஸ்டாருடன் கைக்கோர்த்திருந்த ஹெச்.பி.ஒ.வை தன் பக்கம் இழுத்துவிட்டது ஜியோ சினிமா. இதனால் ஹெச்.பி.ஒ.வின் புகழ்பெற்ற வெப் சிரீஸ்கள், ஹாலிவுட் படங்கள் மற்றும் ஒரிஜினல்கள் இப்போது ஜியோ சினிமாவில் ஸ்ட்ரிமிங் ஆகி வருகின்றன.
ஹெச்.பி.ஒ.வின் கையகப்படுத்தலுக்கு அடுத்து, தெலுங்கு சினிமாகளுக்கான, நிகழ்ச்சிகளுக்கான ஒடிடி-தளமாக இருக்கும் ‘ஆஹா’ ஒடிடி மீது ஜியோ சினிமாவின் பார்வை விழுந்திருக்கிறது.
ஆஹா ஒடிடி-யானது ’புஷ்பா’ படநாயகன் அல்லு அர்ஜூன் குடும்பத்திற்கு சொந்தமான ‘மை ஹோம் க்ரூப்’ நிறுவனத்தை சேர்ந்தது.
ஆஹா ஒடிடி-யில் அல்லு அர்ஜூன் குடும்பம் அதிகளவில் முதலீடு செய்திருக்கிறது. இருந்தாலும், தெலுங்கு சினிமாவை தாண்டி ஆஹாவிற்கு வரவேற்பு இல்லாததால், தடுமாற்றத்தில் இருக்கிறதாம்.
இதை குறிவைத்தே ஆஹா ஒடிடி-யை வாங்கிவிட்டால், தெலுங்கு வட்டாரத்தையும் கைப்பற்றிவிடலாம் என ஜியோ சினிமா தரப்பில் யோசிக்கப்பட்டுள்ளதாம்.