இந்தியாவில் பத்துக் கோடி பேருக்கு சர்க்கரை நோய். கடந்த 4 வருடங்களில் 44 சதவீதம் சர்க்கரை நோய் அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது ஐசிஎம்ஆர்.
ஐசிஎம்ஆர் (ICMR) என்று சுருக்கமாய் அழைக்கப்படும் Indian Council of Medical Research என்பது இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய அரசு நிறுவனம். இந்தியாவில் சர்க்கரை நோய் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து மிக நீண்ட ஆராய்ச்சி செய்து முடிவுகளை லேன்சட் மருத்துவ ஆய்வு இதழில் வெளியிட்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் அக்டோபர் 2008லிருந்து 2020 டிசம்பர் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1 லட்சத்து 13ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 75 ஆயிரம் பேர் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஐசிஎம்ஆர் எடுத்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கடந்த நான்கு வருடங்களில் – அதாவது 2019லிருந்து இந்தியாவில் டயபடீஸ் 44 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
2019ல் 7 கோடி பேர் டயபடீஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இப்போது 10 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் 13 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்களை டயபடீஸ் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்று கூறப்படுகிறது.
கோவா மாநிலத்தில்தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் – 26.4 சதவீதத்தினர் இருக்கிறார்கள். அதற்கடுத்த நிலையில் புதுவை மாநிலம். அங்கு 26.3 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 25.5 சதவீத சர்க்கரை நோயுடன் கேரளா மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 14.4 சதவீதத்தினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
இந்தியாவில் 35.5 சதவீதத்தினருக்கு இரத்த அழுத்த நோய் இருக்கிறது.
81.2 சதவீதத்தினருக்கு கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு அதிகமாக உள்ளது.
உடல் பருமன் நோய் 28.6 சதவீதத்தினரை பாதித்திருக்கிறது.
இது போன்ற நோய்கள் இந்தியர்களிடம் அதிகரிக்க அவர்களது வாழ்க்கை முறை மாற்றங்களே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
துரித உணவு, உடற்பயிற்சி இல்லாமை, தூக்கக் குறைவு, வாழ்க்கை அழுத்தங்கள் போன்ற காரணிகளை மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
எளிய காரணங்கள். எளிதில் சரி செய்ய முடிகிற விஷயங்கள்.