No menu items!

டெஸ்ட் உலகக் கோப்பை தோல்வி – காரணம் ரோஹித் ஷர்மாவா?

டெஸ்ட் உலகக் கோப்பை தோல்வி – காரணம் ரோஹித் ஷர்மாவா?

இந்திய கிரிக்கெட் அணி கடும் வறட்சியில் இருக்கிறது. 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் தொடரில் கோப்பையை வென்ற பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை எதையும் இந்தியாவால் வெல்ல முடியவில்லை. இடையில் 2 ஒருநாள் உலகக் கோப்பைகள், 4 டி20 உலகக் கோப்பைகள், 2 உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் அதிகபட்சமாக டெஸ்ட் உலகக் கோப்பையில் 2 முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததுதான் இந்தியாவின் ஓரே சாதனை.

தோனி தலைமையில் 2007, 2011, 2013 என தொடர்ந்து ஐசிசியின் கோப்பைகளை வென்ற இந்திய அணிக்கு என்ன ஆனது என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி. இத்தனைக்கும் 2013-ல் தோனியின் தலைமையில் இருந்த இந்திய அணியைவிட இப்போதிருக்கும் அணி வலிமையாகத்தான் உள்ளது. அப்படி இருந்தும் நேற்று நடந்த போட்டியில் கோப்பையை தவறவிட்டது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

தோனியின் காலத்தில் ஜாஹிர்கானைத் தவிர சிறந்த வேகப்பந்து வீச்சாளார்கள் இல்லை. ஆனால் இப்போதைய அணியில் முகமது ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், நடராஜன் என தடுக்கி விழுந்தால் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். பேட்டிங்கிலும் அதே நிலைதான், சர்வதேச அளவில் சாதனைகளைப் படைத்த விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே என பல வீரர்கள் இந்த அணியில் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் வெற்றி பெற முடியாமல் போனதற்கு முதல் காரணனமாக கேப்டன்ஷிப் உள்ளது.

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களாக இருந்த கபில்தேவும் சரி, தோனியும் சரி அணியின் சாதக பாதகங்களை உண்ர்ந்து அதற்கேற்ப வியூகங்களை வகுத்தனர். இந்தியாவைப் பொருத்தவரை எப்போதும் சுழற்பந்து வீச்சுதான் பலமாக இருந்திருக்கிறது. இதை அவர்கள் இருவரும் உனர்ந்திருந்தனர். அதேபோல் ஆடும் மைதானங்களின் தன்மையையும் எளிதாக கணிக்கக்கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, எத்தனை டென்ஷன் நிறைந்த போட்டிகளாக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொல்ளாமல் அவர்கள் அணியை வழிநடத்தினர். அது இந்தியாவின் வெற்றிகளுக்கு வழிகாட்டியது.

தோனிக்குப் பிறகு கேப்டன்களாக வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரிடம் இந்த தன்மைகள் இல்லை. பல சமயங்களில் பதற்றத்துடன் அவர்கள் எடுத்த முடிவுகள் அணியை பலவீனப்படுத்தின. முக்கியமாக இந்த டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் டாஸ் வெல்லும் அணிகள் பேட்டிங்க்கைத்தான் தேர்ந்தெடுக்கும். ஆனால் ரோஹித்தின் முடிவு அதற்கு நேர் எதிராக இருந்தது.

புற்கள் அதிகமான ஆடுகளம் என்பதால் முதலில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதனால் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததாக ரோஹித் சர்மா கூறினார். டெஸ்ட் போட்டிகளில் எப்போதுமே கடைசியாக பேட்டிங் செய்வது நல்லதல்ல என்ற மூத்த, முன்னாள் வீரர்களின் ஆலோசனையை அவர் ஏற்கவில்லை. இது இந்திய அணியை வெகுவாக பாதித்தது. முதல் நாளில் முதல் செஷனில் மட்டுமே சற்று தடுமாறிய ஆஸ்திரேலியா, அதன்பிறகு மீண்டு பேட்டிங்கில் வெளுத்து வாங்கியது. அதேநேரத்தில் கடைசி இன்னிங்சில் ஆடமுடியாமல் இந்தியா தடுமாறித் தோற்றது.

இந்திய அணியின் தோல்விக்கான இன்னொரு காரணம், 13 போட்டிகளில் 61 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வினை அணியில் சேர்க்காதது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த அஸ்வினுக்கு பதிலாக இந்த போட்டியில் ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சுமார் 2 மாதங்களுக்கு மேல் நடந்த ஐபிஎல் போட்டிகள் முடிந்த ஒரே வாரத்தில் இந்த டெஸ்ட் போட்டி நடந்ததும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். புஜாரா, பரத் ஆகிய 2 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் ஆடிக் களைத்துப் போயிருந்தனர். மேலும் டி20 போன்ற குறுகிய காலப் போட்டிகளில் ஆடிய அவர்களால் மிகக் குறைந்த நேரத்துக்குள் டெஸ்ட் போட்டிக்கு தயாராக முடியவில்லை. இந்த குறை சரியாக வேண்டுமானால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் முக்கியமான சர்வதேச போட்டிகளுக்கும் இடையே 1 மாத இடைவெளியையாவது விடவேண்டும். இல்லாவிட்டால் ஐபிஎல்லை மட்டும் ரசித்துக்கொண்டு சர்வதேச போட்டிகளில் வெல்லும் கனவை மூட்டை கட்டி வைத்துக்கொள்ளலாம்.

1 COMMENT

  1. Reason for the lose is fully on Rohit Sharma. Aussie bowling is not dangers like before. The Captain fault is more. His batting was too much poor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...