பக்தவச்சலம் தமிழக முதலமைச்சராக இருந்த நேரம். திமுகழக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் அப்போதெல்லாம் சட்டசபையில் எல்லா விவாதங்களிலும் பேசுவார். “நீங்கள் எரிமலை மீது அமர்ந்திருக்கிறீர்கள்” என்று பேச்சின் முடிவில் ஒவ்வொரு முறையும் முதலமைச்சரை பார்த்து எச்சரிப்பார்.
அன்று அதேபோல எச்சரிக்க முதல்வர் பக்தவச்சலம் எழுந்து “எரிமலை மீது உட்கார்ந்திருப்பதாக பலமுறை கூறிவிட்டார். அப்படி பார்த்தால் நான் இந்நேரம் எரிந்து சாம்பலாகி இருக்க வேண்டும்” என்று சொல்ல சபை சிரித்தது.
ஆளும் கட்சியை எப்படி தாக்குவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று ராஜாஜி ஒருமுறை கூறினார். அதில் உண்மை இருக்கிறது. இன்றைய எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற நூலகத்திற்கு சென்றிருக்கிறார்களா? அங்கே ராஜாஜி, அண்ணா முதல்வர்களாக இருந்தபோது நடந்த விவாதங்களை தேடிப் படித்தால் புரியும்.
இன்றைய எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் கட்சியை புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி விமர்சிப்பதைக் காட்டிலும் வார்த்தை ஜாலங்களில்தான் கவனம் செலுத்துகிறது. திமுக தங்கள் ஆட்சியை ‘விடியல் அரசு’ என்று சொன்னதை ‘விடியா அரசு’ என்று திமுக பதவியேற்ற முதல் நாளிலிருந்து எடப்பாடியார் கிண்டலாக சொல்கிறார். பதிலடி வார்த்தை கண்டுபிடித்த மகிழ்ச்சிப் புன்னகை அவர் முகத்தில்.
கடுமையான வசைகள், ஆட்சி கவிழும் என்ற பயமுறுத்தல், மக்கள் ஆதரவு போய்விட்டது, இப்படி எல்லாம் திமுக பற்றி முதல் நாள் தொட்டே அதிமுக தலைவர்கள் சொல்லி வருவது வாடிக்கையாகிவிட்டது. திமுகவை ஜென்ம விரோதிகளாக நினைக்கிறார்கள் என்பது வெளிப்படையாக மக்களுக்கு காட்டுகிறார்கள் என்றார் ஒரு மூத்த அரசியல் பத்திரிக்கையாளர்.
திமு கழகம் தேர்தலில் வெற்றி பெற்ற செய்திகள் வந்த அன்றே, பல இடங்களில் கரண்ட் கட்டாகிவிட்டது. திமுக வருகிறது என்றவுடனேயே கரண்ட் கதி இப்படியாகிறது என்ற பிரச்சாரம். சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக திமுகவுக்கு எதிராக பரப்பப்பட்ட செய்தியும் இப்போதைய உதாரணம்.
1967ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காமராஜ் “6 மாதம் அல்லது ஒரு வருடம் அவர்கள் ஆட்சி பற்றி விமர்சிக்க மாட்டேன்” என்றார். காமராஜருக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவது ஏனோ ஏற்புடையதாக இருக்கவில்லை.
“தங்களிடமிருந்து ஆட்சி பறிபோய்விட்ட ஆதங்கம்தான் அதிமுக குற்றச்சாட்டுகளில் அதிகம் வெளிப்படுகிறது. அதிமுகவில் முன்னாள் மந்திரிகள் அத்தனை பேரும் இன்று தலைவர்களாக பவனி வருகிறார்கள். தினம் தினம் நிருபர்களை அழைத்து மைக் எதிரே சவால் பேச்சுகளை பேசுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவ பறந்து சென்றார். இதை இன்ப சுற்றுலா போனதாக நாகூசாமல் ஒரு முன்னாள் அமைச்சர் – எடப்பாடி கோஷ்டி – விமர்சித்ததை மக்கள் ரசிக்கவில்லை” என்று கூறினார் அந்த பிரபல நிருபர்.
திமுக ஆட்சியை அரசியல் சட்ட 356 விதிப்படி டிஸ்மிஸ் செய்யுங்கள் என்றார் ஒரு அமைச்சர். அதெல்லாம் இனி நடவாது என்பது அறியாமல்.
முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு நடப்பே தெரியவில்லை என்றார் ஒருமுறை முன்னாள் முதல்வர் எடப்பாடியார். அவர் நாடாண்டபோது நடந்ததை மறந்தே போனார். அல்லது மக்கள் மறதி மீதுதான் அரசியல்வாதிகளின் சாமர்த்திய வாழ்வு இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
அநியாயமாக 8 பேர்களை பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை பற்றி மறுநாள் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டதாக கூறியவராயிற்றே எடப்பாடியார். இவ்வளவு பயங்கரமான துப்பாக்கிச்சூட்டை நடத்த அரசிடம் தகவல் கூறவேண்டாமா? அனுமதி பெறவேண்டாமா?
அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது மாணவர் போராட்டம் நடந்தது. “எழும்பூரில் ஒரு ரயில் பெட்டியை எரிக்க முயல்கிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தினால்தான் சமாளிக்க முடியும்” என்று அன்றைய போலீஸ் ஐஜியான எப்.வி. அருள், அண்ணாவிடம் டெலிபோனில் அனுமதி கேட்டார்.
“ரயில் பெட்டி ஒன்று எரிந்தால் அதை உருவாக்கலாம். ஒரு மாணவர் பலியானால் அவரை மீண்டும் கொண்டுவர முடியாமா” என்று கேட்டார் அண்ணா. துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி மறுத்தார்.
தங்கள் கட்சியின் பெயரில் அண்ணாவை சேர்த்து கொண்டிருக்கிறார்களே என்று அந்த நிகழ்ச்சியை விவரித்தார் நிருபர்.
தவயோகி பன்னீரார் ஜெயலலிதா சமாதி முன்பு தவத்தை முடித்து எழுந்தவுடன் சசிகலா மீது குற்றம்சாட்டினார். இன்று சசிகலாவை தலைவியாக ஏற்கிறார். இதற்கு மக்கள் சபாஷ் போடுவார்களா? என்றார் அந்த நிருபர்.
வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் தங்கள் தொகுதி பற்றிய குறைகளை எடுத்து சொல்வதே இல்லை. திமுக மீது தினமும் கண்டன கனைகளை விடுவதே போதுமானதாக கருதுகிறார்கள்.
“அதோடு இப்போது கவர்னர் பெருமானும் திமுக அரசை ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு கட்டி அடிக்கடி ஏதாவது கூட்டங்களை நடத்தி தோள் தட்டுகிறார்” என்றார் உடனிருந்த ஒரு அரசியல் பிரமுகர்.
நாலா திசைகளில் இருந்தும் தாக்குதல்களும், சிறு விஷயங்களையும் பூதாகரமாக்கும் நிலையில் திமுக ஆட்சி திக்குமுக்காடவே செய்கிறது. இதனால் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைய வாய்ப்பிருக்கிறது. அதை அடுத்து அரசாங்கத்திற்கு நிஜமான சங்கடங்கள் ஏற்படக்கூடும். முதல்வர் ஸ்டாலின் அலட்டிக்கொள்ளாமல் தன் பணியை செய்வது அதிசயம்தான்! மத்திய அரசின் பல கொள்கைகள், நடைமுறைகள் மாநில உரிமைக்கு வேட்டு வைத்து வருகிறதே! அதை சமாளிக்கவே முதல்வர் ஸ்டாலின் சில ராஜதந்திர முறைகளை கையாள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் வளர்க்க மத்திய அமைச்சர்களே நேரடியாக களம் இறங்குவதை முதல்வர் வேடிக்கை பார்த்தவாறு இருக்க முடியுமா? – விவரித்தார் நிருபர்.
“பொதுமக்கள் கருத்து என்ன என்பதை அறிய ஒரு சர்வே எடுக்க முயன்றோம். ‘முதல்வர் ஸ்டாலினை சற்று ஆட்சி செய்ய விடுங்கள். ஆரம்பநாள் முதல் அவர் காலை இடறிவிட நடக்கிற முயற்சிகள் சரியல்ல. இரண்டு வருடங்கள்தானே ஆகிறது’ இதுதான் பெரும்பாலோர் கருத்து” என்றார் அந்த அரசியல் நிருபர்.