288 பேரை பலி கொண்டா ஒடிசா ரயில் விபத்து பொது நினைவிலிருந்து மெல்ல மறைந்துக் கொண்டிருக்கிறது. மரண எண்ணிக்கை கூடியிருக்கிறதா குறைந்திருக்கிறதா என்பது குறித்து தகவல் இல்லை.
இன்னும் 82 உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. டிஎன்ஏ சோதனைகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.
தவறான உடலை உறவினர்களுக்கு கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது.
இத்தனை உடல்களை எப்படி பாதுகாத்து பராமரிப்பது என்ற கவலை அதிகாரிகளுக்கு இருக்கிறது.
ஒடிசா மாநில அதிகாரிகள் தவிர மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மாநில அதிகாரிகள் இன்னும் விபத்து நடந்த பகுதியில் தங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தனது பயணத்தை மீண்டும் தொடங்கிவிட்டது.
சிபிஐ விசாரணை, ரயில்வே விசாரணை என்ற பேச்சுக்கள் மெல்ல செயல் வடிவத்துக்கு வந்துக் கொண்டிருக்கின்றன. முடிவுகள் வரும்போது காலங்கள் ஓடியிருக்கும்.
அதற்கு முன் இப்போது இந்த விபத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
சிபிஐ அதிகாரிகள் விபத்து நடந்த இடத்துக்கு நேற்று வந்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ரயில்வே அதிகாரிகளையும் அங்கிருந்த மக்களையும் விசாரித்திருக்கிறார்கள். ஆறு ரயில்வே ஊழியர்களிடமிருந்து மொபைல் ஃபோன்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
விபத்துக்கு காரணம் மனிதத் தவறா, தொழில்நுட்பக் கோளாறா, சதி வேலையா போன்ற சந்தேகங்களுக்கு இதுவரை நடந்த விசாரணைகளிலிருந்து எந்த விடையும் கிடைக்கவில்லை.
மத ரீதியான மோதலையும் வெறுப்பையும் தூண்டிவிட விபத்து ஏற்படுத்திய ரயிலின் ஓட்டுநர் ஒரு இஸ்லாமியர் என்று சில சமூக விரோதிகளால் கிளப்பிவிடப்பட்டது. ஆனால் அது உடனடியாக மறுக்கப்பட்டது. ரயிலை ஓட்டியவர் மொகாந்தி என்ற தகவல் வெளியில் சொல்லப்பட்டது. அவரை இன்னும் சிபிஐ விசாரிக்கவில்லை. இந்த வாரம் அவர் விசாரணை வளையத்துக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்னல் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் விபத்து ஐந்து அதிகாரிகள் கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைக் குழு தெரிவித்திருந்தது. இந்தக் கருத்தை மறுத்திருக்கிறார்கள் சிக்னல் பிரிவை சேர்ந்த அதிகாரிகள்.
சிக்னல் குழப்பம்தான் காரணம் என்று சொல்வது தவறு என்கிறார்கள். ஆனால் ரயில்வே இது போன்று ஒவ்வொரு பிரிவை சார்ந்தவர்களும் தங்கள் பிரிவை காப்பாற்ற இப்படி சொல்வது வழக்கம் என்றும் சொல்கிறார்கள்.
இவைதான் இப்போது ஒடிசா ரயில் விபத்தின் இன்றைய நிலை.
இன்னும் நாட்கள் போகப் போக ஒடிசா ரயில் விபத்தைப் பற்றிய தேடல்கள் குறையும். நாளைடைவில் மறையும்.