No menu items!

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அஸ்வின்

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அஸ்வின்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை நம் கைக்கு எட்டாதுபோல் தெரிகிறது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் என்று தடுமாறிக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி, பின்னர் ஸ்டீவ் ஸ்மித் – ஹெட் ஜோடியின் ஆட்டத்தால் 300 ரன்களைக் கடந்து வலுவாக நிற்கிறது. ஆஸ்திரேலிய அணியின் இந்த ரன் குவிப்பால் டிரா அல்லது ஆஸ்திரேலிய அணியின் வெற்றி என்ற 2 முடிவுகள் மட்டுமே இப்போது சாத்தியமாக இருக்கிறது. இந்தியாவின் இந்த பின்னடைவுக்கு அஸ்வினை அணியில் சேர்க்காததுதான் முக்கிய காரணம்.

ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் ஒரு ஸ்பின்னரை மட்டுமே அணியில் சேர்க்க முடியும் என்ற நிலையில் ஜடேஜாவுக்கு முன்னுரிமை கொடுத்து அஸ்வினை அணியில் சேர்க்காமல் விட்டது அணி நிர்வாகம். இதுதான் இப்போது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்தவர் அஸ்வின். அவர் இருந்திருந்தால் எப்படியும் 2 விக்கெட்களையாவது எடுத்திருப்பார் என்று வாளை உருவாத குறையாக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் முன்னாள் வீரர்கள்.

இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை ஆடவைக்காதது இது முதல் முறையல்ல. 6-வது முறை. கடந்த 6 போட்டிகளாக இங்கிலாந்து மண்ணில் பந்துவீச அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு முந்தைய டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் அஸ்வின் அதிக விக்கெட்களைக் கொய்யாதது இதற்கு காரணமாக கூறப்பட்டது. “வேறு வழியில்லாததால், மிகுந்த மனவேதனையோடு இந்த முடிவை எடுக்கிறோம்” என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.

ஆனால் கடைசியாக நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் 61 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வினை வெளியில் உட்காரவைத்தது சரியா என்பதுதான் முன்னாள் வீரர்கள் எழுப்பும் கேள்வி. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கவாஸ்கர், “இன்றைய சூழலில் இந்தியாவின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அஸ்வின், அவரைப் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு பிட்ச் ஒரு பொருட்டே அல்ல. எத்தகைய பிட்சிலும் (ஆடுகளம்) அவரால் விக்கெட்களை வீழ்த்த முடியும். அவரை ஆடவைக்காததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறை செய்துவிட்டது” என்கிறார்.

இதே கருத்தை தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “முதல் இன்னிங்ஸை மட்டும் மனதில் கொண்டு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3-வது நாளில் இருந்து பந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அப்போது அஸ்வின் முக்கிய வீரராக இருந்திருப்பார். அஸ்வினை ஆடவைக்காததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறை செய்துவிட்டது” என்கிறார்.

சவுரவ் கங்குலி உள்ளிட்ட மேலும் பல வீரர்களும், விமர்சகர்களும்கூட இதே கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அணி நிர்வாகத்துக்கு மட்டும் அஸ்வின் பெரிய வீரராக தெரியவில்லை. அவரைவிட ஜடேஜா சிறந்த பேட்ஸ்மேன் என்பதால் அவரை அணியில் சேர்த்துள்ளனர். 12-வது வீரர் என்ற பெயரில், சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல மட்டும் அஸ்வின் பயன்படுத்தப்படுகிறார்.

சர்வதேச டெஸ்ட் தொடரில் தோனி ஓய்வுபெற்ற காலத்தில் இருந்தே அஸ்வின் இப்படி பலமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில்கூட கோலியும், ரோஹித் சர்மாவும் அவரை பலமுறை பெஞ்சில் உட்காரவைத்திருக்கிறார்கள். இதனால் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஸ்வினால் பெற முடியவில்லை. அவர் மட்டும் எல்லா போட்டிகளிலும் ஆடியிருந்தால் கும்ப்ளேவின் பல சாதனைகளை முறியடித்திருப்பார். அவ்வளவு ஏன்… முரளிதரனின் சாதனைக்குகூட சவால் விட்டிருப்பார்.

ஆனால் கேப்டன்களின் புறக்கணிப்பால் அது நடக்காமல் போய்விட்டது. அதனால் இழப்பு அஸ்வினுக்கு மட்டுமல்ல… இந்தியாவுக்கும்தான் என்பதை இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...