சென்னையில் ராஜாஜி கலந்து கொண்ட விழா அது. அப்போது அவர் கவனர் ஜெனரல். விழாவிற்கு புகழ் பெற்ற நீதிபதி பஷீர் அகமது சையது தலைமை வகித்தார். நீதிபதி ராஜாஜியின் நெருக்கமான நண்பர்.
தனது உரையில் நீதிபதி மிக உயர்வாக ராஜாஜியை வானளாவ புகழ்ந்தார். அவையில் கைத்தட்டல்கள்.
ராஜாஜி பேச ஆரம்பிக்கும்போது சற்று நேரம் நீதிபதியை பார்த்தவாறு இருந்தார்.
“நீதிபதி அவர்களே! நீங்கள் என்னை பற்றி உயர்வாக பேசினீர்கள். ஒருபோதும் அப்படியெல்லாம் பேசி இருக்கக்கூடாது. நீங்கள் என் நண்பர் என்பது வேறு. நீங்கள் ஒரு நீதிபதி. 24 மணிநேரமும் நீங்கள் நீதிபதி. நீங்கள் யாரையும் புகழ்ந்து பேசுவது தவறு. தனிநபர்களையும் விமர்சிப்பதும் தவறு. நீங்கள் வசிக்கிற பதவி ஒரு லஷ்மன் கோட்டை போட்டிருக்கிறது.”
ராஜாஜி இப்படி பேசிவிட்டார்! அதுதான் ராஜாஜி! அதனால்தான் ராஜாஜியை ‘என் மனசாட்சி’ என்று கூறினார் காந்தியடிகள்.
ராஜாஜியிடம் ஒரு சமயம் நிருபர்கள்
‘நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை’ என்று கேட்டபோது, ‘எனக்கு கற்பனை ஆற்றல் மிகக்குறைவு’ என்று பதிலளித்தார்.
“ராஜாஜியும், பெரியாரும் இல்லாமல் போனதால், தமிழ்நாடு கேட்பார் இல்லாமல் போய்விட்டது” என்று ஒரு முதிய இடதுசாரி தலைவர் வருத்தப்பட்டார்.
தமிழ்நாட்டில் உயர்ந்த பதவிக்கு வருகிறவர்கள் ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜ் போன்றவர்களை பற்றி ஆழமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொண்டால், அவர்கள் சிக்கலில் சிக்காமல் இருக்க முடியும்.
“நீதிபதிகள் மட்டுமின்றி கவர்னர்களுக்கும் ராஜாஜியின் புத்திமதி பொருந்தும். எப்படி வார்த்தைகளை ஆராய்ந்து அளந்து பேசவேண்டும் என்பதை அறிந்து கொண்டு பேசவேண்டிய பதவிகள் அவை. ‘சனாதன செம்மல்’ என்று இப்போது நம் கவர்னரை பலர் அழைக்கிறார்கள்!
அவர் ஜவஹர்லால் நேரு பற்றி ‘இந்திய கலாச்சாரத்தை அறியாதவர்’ என்று சொல்லிவிட்டாரே! வாய் தவறியிருக்கிறது என்று நினைக்கிறேன்! அதனால்தான் ‘யாகாவராயினும்’ என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.” – அந்த முதிய தலைவர் ஆற்றாமையுடன் கூறினார்.
உண்மை! ஜவஹருக்கு யாரும் நற்சான்று தரவேண்டிய அவசியம் இல்லை. ‘எனக்குப் பிறகு ஜவஹர்லால்தான் என் குரலை ஒலிப்பார்’ என்று சொல்லிவிட்டு போனார் காந்தியடிகள். இதற்குப் பிறகு அவருக்கு தேவையா வேறு புகழ்மாலை!
இந்த தேசத்தின் ஒவ்வொரு பிடி மண்ணையும் நேசித்தவர் ஜவஹர்லால். அவர் உயிலை படியுங்கள் புரியும். அவரது சாம்பல் விமானம் மூலம் தூவப்பட்டு இந்த தேச மண்ணோடு கலந்துவிட்டது. இமயத்தையும், கங்கையையும் அவர் பக்தர்களை காட்டிலும் வியந்து போற்றியவர். இந்த தேசத்தில் மூலை முடுக்கெல்லாம் பயணித்துவிட்டுதான் டெல்லி செங்கோட்டையில் தேசக்கொடி ஏற்றினார்.
தேச விடுதலைக்கு போராடிய மாபெரும் தலைவர்கள் விதவிதமான சிந்தனையுடையவர்களாக இருந்திருக்கலாம். பகத்சிங் தியாகத்துக்கு இணை உண்டா? தூக்குமேடை ஏறுவதற்கு முன்பும் புத்தகத்தை ஆழ்ந்து படித்து கொண்டிருந்தார். நினைவில் வையுங்கள். அவர் நார்த்திகர். அதனால் என்ன? அவருக்கு இங்கே யார் இணை?
“நேரு – காமராஜர், நேரு – சர்தார் பட்டேல் என்றெல்லாம் அவர்களது கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தி பேசுவது வழக்கமாகி விட்டது. சுபாஷ் சந்திரபோஸ் நேருவை எப்படி நேசித்தார், சர்தார் பட்டேல் நேருவை எந்த அளவுக்கு மதித்தார் என்பதை எல்லாம்தான் இன்றைய அரசியல்வாதிகள் அறிய வேண்டியவை. அப்போதுதான் மாற்று கருத்து உள்ளவர்களை மதிக்க வேண்டும் என்ற பாலபாடம் மூளையில் பதியும்” என்றார் அந்த இடதுசாரி முதியவர்.
“அதிகாரத்தில் இருப்பதால் எதுவும் பேசாலம், பத்திரிகைகள் பிரசுரிக்கும், அதைபார்த்து மகிழலாம்! ஆனால் யாரோ ஒருவர் அதை படித்துவிட்டு சிரிப்பது அவர் காதில் விழாது” என்றார் அவர். நேருவால் புகழ் பெற்ற ‘ஜாக்கெட்’ உடையை பின்பற்றுகிறாரே நம் ஆளுநர் என்றார் கடைசியாக!
தமிழ்நாட்டில் சிலர் பெரியாரை பற்றி தாறுமாறாக பேசுகிறார்கள். அதுவும் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட வேண்டிய விஷயம்.
ஒரு நிகழ்ச்சி.
தமிழ்நாடு காங்கிரஸில் காரியகமிட்டி கூட்டம் நடந்து கொண்டிருந்தது.காமராஜ் நடுநாயகமாக.ஒரு மாவட்ட காங்கிரஸ் தலைவர் “சுயநலம் பிடித்த ராஜாஜி….” என்று ஆரம்பித்தார்
“நிறுத்து” என்று சத்தம் போட்டார் காமராஜ். கைகளால் காதை மூடிக்கொண்டிருந்தார்.
“யாரை பார்த்து என்ன பேசுவது என்ற விவஸ்தை இல்லையா? ராஜாஜி சுயநலம் பிடித்தவரா? என்ன பேச்சு இது? துளிகூட சுயநலம் இல்லாத பெரியவர் அவர். உனக்கு என்ன தெரியும்? எத்தனை ஆயிரம் ஆயிரமாக மாதம் சம்பாதித்தவர்? தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். திருச்செங்கோடு ஆசிரமத்தில் வருமானம் பற்றி கவலையின்றி குழந்தை குட்டிகளோடு ஓலை குடிசையில் வாழ்ந்தாரே. இப்போதுகூட ஓய்வூதியம் தவிர வேறு எதையும் தேடாதவர்.”
அடுக்கடுக்காக சொன்னார் காமராஜ். தமிழ்நாட்டுக்கு பெரும் பொறுப்பில் வருகிறவர்களே! எங்கள் தலைவர்களை பற்றியும் படியுங்கள்! பிறகு பேசுங்கள்! ஜாக்கிரதையாக அறிவுரை கூறுங்கள்!