இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர். அவரது சொத்து மதிப்பு 72 லட்சம் கோடி ரூபாய் என்கிறது லேட்டஸ்ட் புள்ளி விவரம். அவரால் முடியாத காரியம் எதுவுமே இல்லை..அவர் லைஃப் ரொம்ப ஜாலி, ஈசி என்ற பார்வை உண்டு. ஆனால் அவரும் கஷ்டப்பட்டு ஒரு காரியத்தை செய்திருக்கிறார். தனது எடையை 15 கிலோ குறைத்திருக்கிறார், ரொம்ப சிரமப்பட்டு.
சொத்து மதிப்பு உயர்ந்துக் கொண்டெ போவதைப் போல் முகேஷ் அம்பானியின் எடையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. எடையைக் குறைத்து ஆரோக்கியத்தை கூட்டுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுரை கொடுத்ததால் எடையைக் குறைக்க முயற்சிகள் எடுத்தார்.
முதல் முயற்சி. உணவுப் பழக்கம். எப்போதுமே அவருக்கு லைட்டான உணவுகள்தாம் பிடிக்கும். அதிகமாய் சாப்பிட மாட்டார். நான் வெஜ் கிடையாது. ஃபாஸ்ட் ஃபுட் பக்கமே போக மாட்டார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்ட்டில் படிக்கும் போது கூட வெஜிடேரியன்தான். அவர் சேர்த்துக் கொள்ளும் ஒரே அசைவ உணவு முட்டை.
வெயிலோ மழையோ ஞாயிறோ திங்களோ விடுமுறையோ அலுவலகமோ காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்துக் கொள்வார் முகேஷ். கொஞ்சம் உடற்பயிற்சி. கொஞ்சம் யோகா. பிறகு கொஞ்சம் பழங்கள். ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ். இதுதான் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரின் காலை உணவு.
நம்மைப் போல் மூன்று வேளை உணவு என்ற பழக்கம் அம்பானி குடும்பத்தினரிடம் இல்லை. நாள் முழுவதும் சிறிது சிறிதாக உணவு எடுத்துக் கொள்வதுதான் அவர்கள் வழக்கமாக இருக்கிறது.
முகேஷ் அம்பானி அலுவலகம் சென்றாலும் அங்கே கொஞ்சம் சூப், கொஞ்சம் காய்கறிகள், கொஞ்சம் பழங்கள் என்று அவ்வப்போது வயிற்றுக்கு உணவைத் தந்துக் கொண்டே இருப்பாராம். அதனால் மதிய உணவு என்று ஃபுல் கட்டு கட்டுவது கிடையாது.
மதியம் வீட்டிலிருந்து பருப்பும் சோறும் குறைச்சலாக கொடுத்துவிடுவார்கள் அதுதான் அவரது மதிய உணவு.
இரவு உணவு வரை மீண்டும் சிறு சிறு உணவுகள். இரவு உணவாக சப்பாத்தி. இப்படிதான் முகேஷ் அம்பானியின் உணவு வாழ்க்கை இருக்கிறது.
முகேஷ் அம்பானிக்கு நம்ம ஊர் மசாலா தோசை மிகவும் பிடிக்கும். அதுவும் மும்பையிலுள்ள சாதாரண மைசூர் கஃபே ஓட்டலில் மசாலா தோசை ரொம்பவே பிடிக்கும். அதனால் அங்கிருந்து மசாலா தோசை வாங்கி சாப்பிடுவதும் சில சமயங்களில் நடக்கும். அவர் கெமிக்கல் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும்போது இந்த ஓட்டலில்தான் சாப்பிடுவாராம். அந்தப் பழக்கம் இன்று தொடர்கிறது. மசாலா தோசையுடன் சில நாட்கள் இட்லி சட்னியும் வாங்கி சாப்பிடுவார்.
காரிலும் விமானத்திலும் செல்பவருக்கு நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் தினமும் நடைபயிற்சியை ஒரு வேலையாக வைத்திருக்கிறார் முகேஷ். தினமும் அலுவலகத்திலாவது வீட்டிலாவது அரை மணி நேரமாவது நடந்துவிடுவார்.
இது போன்ற உணவுப் பழக்கத்தை வைத்திருந்த போதும் அவரது எடை கூடியிருக்கிறது. அதில் 15 கிலோவை டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைத்திருக்கிறார் முகேஷ்.
15 கிலோ எடை குறைந்ததுடன் அவருக்கு இன்னொரு மகிழ்ச்சி, அவருக்கு இன்னொரு பேத்தி பிறந்திருக்கிறாள். முகேஷ் -நீட்டா தம்பதியின் மூத்த மகன் ஆகாஷ் – ஸ்லோகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஏற்கனவே இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.