நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கு உள்ள சிக்கல்களில் ஒன்று அவற்றை வாக்கிங் கூட்டிப் போவது. வாகன நெரிசல், போதுமான பிளாட்பார்ம் வசதிகள் இல்லாதது, தெரு நாய்களின் தொந்தரவு என நாய்களை வாக்கிங் கூட்டிப் போவதற்கு பல தொல்லைகள் இருக்கின்றன.
இப்படிப்பட்ட கஷ்டங்கள் ஏதும் இல்லாமல் நாய்களை வாக்கிங் கூட்டிச் செல்வதற்காக நாய்களுக்கான பூங்கா ஒன்று நொய்டா நகரில் இன்று திறக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் மனிதர்களுக்குத் தேவையான ஊஞ்சல், புல்வெளி, சறுக்குமரம் என்று எல்லா விஷயங்களும் இருக்கின்றன.
இதையெல்லாம் பார்த்தால் மனிதர்களுக்கான பூங்காவாகத்தானே இது இருக்கிறது. நாய்களுக்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
நாய்களுக்கு தேவையான விஷயங்களும் இங்கே இருக்கின்றன. அவற்றுக்கான சிறிய நீச்சல் குளம், வாக்கிங் செல்வதற்கான பாதை என பல அம்சங்கள் இங்கு இருக்கின்றன. கூடவே நாய்களுக்கு பயிற்சி கொடுக்கும் டிரெயினர்கள், மருத்துவ உதவி மையம், தடுப்பூசி போடும் இடம் என்று நாய்களைப் பராமரிப்பதற்கு தேவையான பல விஷயங்கள் இந்தப் பூங்காவில் இருக்கின்றன.
“நொய்டாவில் நாய்களை வாக்கிங் கூட்டிச் செல்லும்போது, அவற்றுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் உரசல் ஏற்படுகின்றன. சிலவற்றில் நாய் மற்றவர்களைக் கடித்துவிடுகிறது. சில சமயம் மற்றவர்கள் நாய்களைத் தாக்குகிறார்கள். இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் இருக்க நாய்களுக்கான இந்த பூங்காவை உருவாக்கி இருக்கிறோம்” என்கிறார் நொய்டா நகரின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிது மகேஸ்வரி.
வாக்கிங் செல்வதற்கான வசதிகள் மட்டுமின்றி, நாய்களை வாக்கிங் கொண்டு வருபவர்கள் ரிலாக்ஸாக அமர்ந்து சாப்பிட இங்கே உணவகங்களும் உள்ளன. மனிதர்கள் மட்டுமின்றி நாய்களுக்கான உணவுகளும் இங்கே கிடைக்கும்.
வெறும் பூங்காவாக மட்டுமின்றி, நாய்களை நேசிப்பவர்களை ஒன்றாக ஒரே இடத்தில் இணைக்கும் புள்ளியாகவும் இது இருக்கும் என்கிறார் ரிது மகேஸ்வரி.