‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படமும் வலதுசாரி சித்தாந்தத்தைப் பேசுகிறது. ரண்தீப் ஹூடா என்ற புதிய இயக்குநரால் இயக்கப்படும் ‘ஸ்வாதந்தர்ய வீர் சாவர்கார்’ படம்தான் இந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான வீர சாவர்கரைப் பற்றி இரண்டு விதமான கருத்துகள் உலவுகின்றன. இந்துத்துவ அமைப்புகளும், பாஜகவும் அவரை இந்தியாவின் வீர புருஷராக சித்தரிக்கின்றன. காந்தி, நேரு போன்ற தலைவர்கள் பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டாலும், அவர்களின் சிறைச்சாலை அறைகள் சொகுசாக இருந்தன. ஆனால் வீர சாவர்க்கர், அந்தமானில் மிகக் குறுகிய, எந்த வசதியும் இல்லாத அறையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார். அவரைப் போன்று சிறைக் கொடுமைகளை அனுபவித்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பது வலதுசாரி தலைவர்களின் வாதம்.
ஆனால் சிறை வாழ்க்கையில் இருந்து தப்பிக்க, ஆங்கிலேய அரசிடம் அவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் என்பது காங்கிரஸ் கட்சியினரின் வாதம்.
இப்படி வீர சாவர்கரைப் பற்றி 2 விதமான கருத்துகள் நிலவிவரும் நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படம் இயக்கி வருகிறார் ரண்தீப் ஹூடா. வீர சாவர்கரை ஒரு மிகப்பெரிய ஹீரோவாகப் போற்றி எடுக்கப்படும் இப்படத்தின் டீஸர், அவரது பிறந்தநாளான மே 29-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த டீஸரை முன்னிட்டு நடிகர் ரந்தீப் ஹூடா வெளியிட்ட ட்விட்டர் பதிவுதான் இப்போது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
”பிரிட்டிஷாரால் அதிகம் தேடப்பட்ட நபர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குதிராம் போஸ், பகத்சிங் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்தவர்” என்று இந்த டிவீட்டில் பதிவிட்டிருந்தார் ரண்தீப் ஹூடா. படத்தின் டீஸரிலும் இந்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வார்த்தைகள்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
”குதிராம் போஸுக்கு வீர சாவர்கர்தான் உத்வேகம் அளித்தார் என்று இந்த டீஸரில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் குதிராம் போஸ் 1908-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி தூக்கிலிடப்பட்டு இறந்தார். ஆனால் வீர் சாவர்கர் 1906-ம் ஆண்டுமுதல் 1911-ம் ஆண்டுவரை லண்டனில் இருந்தார். உண்மை அப்படி இருக்கும்போது, லண்டனில் இருந்த வீர் சாவர்க்கர் எப்படி குதிராம் போஸுக்கு உத்வேகம் அளித்திருக்க முடியும்? நேதாஜி பலமுறை வீர சாவர்க்கரையும், இந்து மகாசபாவையும் எதிர்த்துள்ளார். அவர் வீர சாவர்க்கரால் உத்வேகம் பெற்றவர் என்று எப்படி சொல்ல் முடியும்” என்று பலரும் இதே ட்விட்டர் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளனர்.
அதேபோல் இந்த வாசகங்களை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பமும் மறுத்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ், “சுவாமி விவேகானந்தர் மற்றும் தேசபந்து சித்ரஞ்சன் தாஸ் ஆகிய இருவரை மட்டுமே தனது குருநாதர்களாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஏற்றுக்கொண்டிருந்தார். நேதாஜிக்கு உத்வேகம் அளித்தவர்கள் என்று அவர்களை மட்டுமே சொல்ல முடியும். அவர்கள் இருவரைத் தவிர வேறு யாராலும் நேதாஜி ஈர்க்கப்படவில்லை. sஆவர்க்கர் ஒரு சிறந்த மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது சித்தாந்தமும், நேதாஜியின் சித்தாந்தமும் வேறு வேறானவை. அதனால் சாவர்க்கரை எந்த கட்டத்திலும் நேதாஜி பின்பற்றவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.