வெறும் சில கோடிகளில் தயாரான ஒரு படம், சர்ச்சைகளினால் கிடைத்த விளம்பரத்தினால் 200 கோடி வசூலித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அந்தப் படம் கேரளாவில் எடுக்கப்பட்ட ‘த கேரளா ஸ்டோரி’. இந்தப்படம் கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் திரையிட அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
இளம்பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் அவர்களுக்கு திவீரவாத பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு ஒன்லைனை வைத்து கொண்டு எடுக்கப்பட்ட படம். சர்ச்சைகளினால் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களிலேயே மிக அதிக வசூல் செய்தப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது சுதிப்தோ சென் இயக்கி இருக்கும் ‘த கேரளா ஸ்டோரி’.
இப்படி பெரும் பிரளயத்தைக் கிளப்பியிருக்கும் இப்படத்தை வெளுத்து வாங்கியிருக்கிறார் கமல் ஹாசன்.
‘நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, கொள்கைகளைப் பரப்புகிற மாதிரியான படங்களுக்கு நான் முற்றிலும் எதிரானவன். ஒரு படத்தின் லோகோவிற்கு கீழ் ’உண்மைக்கதை’ என்று போடுவது மட்டும் போதாது. அது உண்மையாக இருக்கவேண்டுமென்பதே முக்கியம். ஆனால் அது அப்படி இருப்பது இல்லை.’’ என்று வெளிப்படையாகவே கமல் தனது கருத்தப் பகிர்ந்திருக்கிறார்.
ஒரு பக்கம் ‘த கேரளா ஸ்டோரி’க்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் கமல், மறுபக்கம் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பிற்கு ஆதரவையும் கொடுத்திருக்கிறார். கமலின் அணுகுமுறை அரசியல்ரீதியாகவும் கவனிக்கப்பட வேண்டியது என்கிறார்கள்.
விஜய் சேதுபதியை வளைத்துப் போட்ட ஒடிடி!
இந்திய ஒடிடி துறையில் இப்பொழுது போட்டி முழுவீச்சில் ஆரம்பித்திருக்கிறது. இதுவரையில் இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை கொடுப்பதில் கொஞ்சம் பின் தங்கியிருந்த நெட்ஃப்ளிக்ஸ் மிகவேகமாக இந்தியர்களின் ரசனைகளுக்கேற்ற நிகழ்ச்சிகளில் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கிடையில் ஜியோ சினிமா களத்தில் இறங்கி இருப்பதால் ஒடிடி தளத்தில் போட்டி சூடுப்பிடித்திருக்கிறது.
ஜியோ சினிமாவை எளிதில் பிரபலமடைய செய்வதற்காகவே, ஐபிஎல் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல், இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் ஜியோ சினிமா ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது.
இதற்கு அடுத்து வாரம் ஒரு புதிய படத்தின் ப்ரீமியர் ஷோவை ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீமிங் செய்யும் திட்டத்தையும் ஜியோ சினிமா கையிலெடுத்து இருக்கிறது.
இதற்காக பெரும் தொகையை கொடுத்து, படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜியோ சினிமா வாங்கி வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஹிந்தியில் அறிமுகமாக இருக்கும் ‘மும்பைகார்; படமும் அடக்கம்.
திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்ட ‘மும்பைகார்’ படத்தை இப்போது ஒடிடி-யில் திரையிட இருக்கிறார்கள்.
மும்பையில் மிரளவைக்கும் ஒரு டான் ஆக விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியை பாலிவுட்டில் அறிமுகம் செய்யும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியிருக்கிறார்.