எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரபல நாயகர்களின் குரலாக ஒலித்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய டி.எம்.சவுந்தர்ராஜனின் நினைவுநாள் இன்று (25-05-2023) அனுசரிக்கப்படுகிறது. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
டிஎம் எஸ்ஸுக்கு வாய்ப்பு கொடுத்த முதல் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
1946-ல் கிருஷ்ண விஜயம் படத்தில் இடம்பெற்ற ‘ராதே என்னைவிட்டு போகாதடி’ பாடல்தான் அவர் பாடிய முதல் பாடல்.
சிவாஜிக்காக டிஎம்எஸ் முதலில் பாடிய படம் ‘தூக்குத்தூக்கி’. இப்படத்தில் முதலில் திருச்சி லோகநாதன் பாடுவதாக இருந்தது. ஆனால் அவர் ஒரு பாடலுக்கு 1,000 ரூபாய் கேட்டதால் டிஎம்எஸ்ஸை பாடவைக்க முடிவெடுத்தனர். ஆனால் சிவாஜி, அந்த பாடலை சி.எஸ்.ஜெயராமன் பாடினால் நன்றாக இருக்கும் என்று சிபாரிசு செய்துள்ளார். இதைக்கெட்டு பதறிய டிஎம்எஸ், “இப்படத்தின் 3 பாடல்களை நான் இலவசமாக பாடித் தருகிறேன். நன்றாக இருந்தால் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எடுத்துவிடுங்கள்” என்று கேட்டுள்ளார். அவர் பாடிய பாடலைக் கேட்டதும் சிவாஜிக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன்பிறகு அவரே தன் பாடல்களைப் பாட சிவாஜி சிபாரிசு செய்துள்ளார்.
’உயர்ந்த மனிதன்’ படத்தில் வரும் “என் கேள்விக்கென்ன பதில்?’ பாடலை சிவாஜிக்காக பாடுவதாக நினைத்து முதலில் உச்சஸ்தாயியில் பாடியிருக்கிறார் டிஎம்எஸ். அந்த பாடலை பாடி முடித்த பிறகு அவருக்கு சிவக்குமாரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவருக்காகத்தான் அந்த பாடலை பாடியிருக்கிறோம் என்பதை அறிந்த டிஎம்எஸ், அப்பாடலை சிவக்குமாருக்கு ஏற்ற வகையில் பாடி மீண்டும் ஒலிப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
‘அடிமைப் பெண்’ படத்துக்காக “ஆயிரம் நிலவே வா…” பாடலை உடனே பாடிக்கொடுக்குமாறு கேட்டுள்ளார் எம்ஜிஆர். ஆனால் டிஎம்எஸ், தான் அவசரமாக ஊருக்குப் போவதாக சொல்லி செல்லுவிட்டார். அந்த கோபத்தில்தான் எஸ்.பி.பியை வைத்து அந்த பாடலை எடுத்தார் எம்ஜிஆர். ஆனால் அதே படத்தில் வரும் மற்ற பாடல்களைப் பாட டிஎம்எஸ்ஸை அணுகி இருக்கிறார்கள். “ஆயிரம் நிலவே வா” பாடல் விஷயத்தால் வருத்தத்தில் இருந்த டிஎம்எஸ். “நான் இதுவரை ஒரு பாடலுக்கு 500 ரூபாய்தான் வாங்கியிருக்கிறேன். இனி ஒரு பாடலுக்கு எனக்கு 1,000 ரூபாய் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். அன்றிலிருந்துதான் அவரது சம்பளம் ஒரு பாடலுக்கு 1,000 ரூபாயாக உயர்ந்தது.
தமிழ் சினிமாவுக்கு பாடல் எழுதுவதற்காக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த வாலி, முதலில் டிஎம் எஸ்ஸுக்குதான் ’கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’, ’ஓராறு மனமும் ஈராறு கரமும்’ ஆகிய 2 பாடல்களை எழுதினார். இந்த பாடல்களுக்குப் பிறகு டிஎம்எஸ் கடிதம் எழுதி வாலியை சென்னைக்கு வரவழைத்தார்.
“ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ” பாடலைப் பதிவுசெய்யும் நாளில் டிஎம்எஸ்ஸின் மகன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பாடலை பதிவு செய்த பிறகு அவரது மகன் இறந்துவிட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மனம் கலங்கிய டிஎம்எஸ், அதன்பிறகு அப்பாடலை எந்த நிகழ்ச்சியிலும் பாடியதில்லை.
இளையராஜாவின் இசையில் வந்த முதல் திரைப்பட பாடலான ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே…’ பாடலைப் பாடியவர் டிஎம்எஸ்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறுவயதில் டிஎம்எஸ்ஸிடம் கீபோர்ட் வாசித்துள்ளார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தியவர் டிஎம்எஸ். தான் வாழ்நாளின் கடைசி காலம் வரை அவர் யோகாசனம், ஆல்ஃபா மெடிடேஷன் செய்துவந்தார்.