ரஜினி, ‘ஜெயிலர்’ பட டப்பிங் மற்றும் ’லால் சலாம்’ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.
விக்ரம், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தினால் விலா எலும்பு முறிவு ஏற்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த இருவரையும் ஒரு படத்தில் வைத்தால் எப்படியிருக்கும் என கணக்குப் போட்டு பார்த்த ’ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ. ஞானவேல் அதேவேகத்தில் களத்தில் இறங்கி இருக்கிறாராம்.
விக்ரமைத் தொடர்பு கொண்ட ஞானவேல், அடுத்து தான் ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க வேண்டுமென்று கேட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
ரஜினியின் படமாச்சே என்று ஆர்வத்துடன் பேசிய விக்ரமிடம், ‘சார் உங்களுக்கு இதில் நெகட்டிவ் ரோல்’ என்று அடுத்த ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறார் த.செ. ஞானவேல்.
இதுவரையில் தனக்கு தானே வில்லனாகி இருக்கும் விக்ரம், ரஜினிக்கு வில்லனாக நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். ‘ஸாரி என்னால் வில்லனாக நடிக்க முடியாது’ என்று ஒரே வரியில் முடித்துவிட்டாராம். ஆனாலும் த.செ. ஞானவேல் விக்ரமை அப்படியே விட்டுவிடவில்லை. ‘இல்ல சார் இந்த வில்லன் கேரக்டர்ல நீங்க நடிச்சாதான் சரியா இருக்கும். அந்த மாதிரி ஒரு பவர்ஃபுல்லான வில்லன்.’ என்று விக்ரமை சமாதானப் படுத்த முயன்றாராம்.
விக்ரம் இதுவரை க்ரீன் சிக்னல் காட்டாததால், ரஜினி170 படத்தை தயாரிக்க இருக்கும் லைகா நிறுவனமே இப்போது இந்த விஷயத்தில் களத்தில் இறங்கியிருக்கிறது என்கிறார்கள்.
ரஜினிக்கு வில்லனாக நடிக்க 50 கோடி சம்பளம் தரவும் தயார். சிங்கிள் பேமெண்ட்டில் கொடுத்துவிடுகிறோம் என்று லைகா தரப்பில் சொல்லப்பட்டதாகவும் பேச்சு அடிப்படுகிறது.
லைகா தயாரித்த பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் விக்ரம் நடித்திருப்பதால், லைகா கொடுக்கும் அழுத்தத்தை விக்ரமினால் மறுக்க முடியாது என ரஜினி170 படக்குழு எதிர்பார்ப்பில் இருக்கிறதாம்.
ஆனால் சமீபத்தில் லைகா நிறுவனம் தொடர்பான அலுவலகங்கள், அதன் நிர்வாகிகள் இல்லங்களில் முறைக்கேடான பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த புகார்களினால் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளால், இந்த 50 கோடி சம்பளம் இனி சாத்தியமா என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.