கர்நாடக மாநில முதல்வராக மே 20ஆம் தேதி சித்தராமையா பதவியேற்கிறார். டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் பொறுப்பேற்கிறார்.
13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்து நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் இந்த செய்தியை அறிவித்திருக்கிறார்.
சித்தாரமையாவும் டிகே சிவக்குமார் வெளியில் தெரியாமல் மோதிக் கொண்டிருந்த நிலையில், இருவரும் அடித்துக் கொள்வார்கள் என்று எதிர்க் கட்சிகள் காத்துக் கொண்டிருந்த சூழலில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு அடிப்படையாக சிவக்குமாரின் அயராத உழைப்பும் தேர்தல் பணிகளை தீவிரமாக செயல்படுத்திய விதமும்தான் காரணமாக சொல்லப்படுகிறது.
சித்தராமையாவும் கர்நாடகத்தின் அசைக்க முடியாத தலைவர். அமைதியான முறையில் வாக்குகளை கவர்பவர். ஆனால் ஒரிஜினல் காங்கிரஸ்காரர் அல்ல. ஜனதா, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் என கட்சிகளைக் கடந்து வந்திருப்பவர். 2006லிருந்து காங்கிரசில் இருக்கிறார்.
டிகே சிவக்குமார் அப்படியல்ல, கல்லூரி காலம் முதலே ஒரு கட்சி. காங்கிரஸ்.
சித்தராமையா ஏற்கனவே ஒரு முறை கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார். இந்தப் பின்னணியில் முதல்வர் பதவி இந்த முறை சிவக்குமாருக்குதான் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போகவில்லை.
என்ன காரணம்? அல்லது காரணங்கள்?
இன்று கே.சி.வேணுகோபால் சொன்ன வரிகளை கவனித்துப் பார்க்க வேண்டும்.
“We have decided on Siddaramiah as CM of Karnataka; D K Shivakumar will be Deputy CM. D K Shivakumar to continue as party’s Karnataka state president till Parliamentary elections,” என்பதுதான் அவருடைய வார்த்தைகள். முதல்வர், துணை முதல்வர் என்றெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, அடுத்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை டிகே சிவக்குமார் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீடிப்பார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படியென்றால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்..? என்ற கேள்வி எழுகிறது.
இங்குதான் டிகே சிவக்குமாருக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்ற யூகங்கள் தோன்றுகின்றன.
இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகத்தின் 24வது முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்கலாம்.
அல்லது, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றால் மத்திய அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.
இந்த இரண்டு வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு டிகே சிவக்குமாரை முதல்வராக்குவதில் காங்கிரசுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன.
டிகே சிவக்குமார் மீது அமலாக்கத் துறை வழக்குகள் இருக்கின்றன. சித்தாரமையா மீது பெரிய அளவில் குற்றச்சாட்டுக்கள் கிடையாது.
டிகே சிவக்குமார் வொக்கலிகா சமூகத்தை சார்ந்தவர். சித்தராமையா குருபா சமூகத்தை சார்ந்தவர்.
கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தினர்தான் அதிகம். அதற்கடுத்து வொகலிகா மற்றும் குருபா சமூகத்தினர் அதிகமாக இருக்கிறார்கள்.
சித்தாராமையாவை முதல்வராக்கினால் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று காங்கிரஸ் கருதுகிறது. சிவக்குமாரை முதல்வராக்கினால் மற்றொரு பெரிய சமூகத்தினரான லிங்காயத்துகள் எரிச்சலடைய வாய்ப்புகள் உள்ளது என்று சாதிய ரீதியான கணக்குகளும் காங்கிரஸின் முதல்வர் தேர்வில் இருக்கின்றன.
இந்த யூகங்கள் இருந்தாலும் நேற்று மாலை சோனியா காந்தியை சிவக்குமார் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது சோனியா அவரிடம், ‘உங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். நீங்கள் கர்நாடகாவை ஜெயித்துக் கொடுப்பீர்கள் என்று நம்பினேன்.’ என்று கூறியிருக்கிறார். சோனியாவின் இந்த வார்த்தைகள் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வது என்ற மனநிலையை சிவக்குமாருக்கு கொடுத்திருக்கிறது.
ராஜீவ் காந்தி குடும்பத்தின் மீது மிகுந்த பற்றுடைய சிவக்குமார், சோனியா காந்தியின் யோசனைகளை உடனே ஏற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
சித்தாரமையாவுக்கு அமைதியான, ஆழ்ந்த யோசனையுடைய நபர் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால் சிவக்குமாருக்கு அதிரடி ஆட்டக்காரர் என்ற பிம்பம் இருக்கிறது. இப்போதைக்கு வம்புகள் எதுவும் வேண்டாம் அமைதியான ஒரு முதல்வரையே தேர்ந்தெடுப்போம் என்பது காங்கிரஸ் தலைமையின் முடிவாக இருக்கிறது.