நகர்ப்புற காதல்களை மையமாக கொண்ட ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. 6 கதைகளைக் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு கதையையும் ஒரு பிரபல இயக்குநர் இயக்கியுள்ளார். இதில் பாரதிராஜா இயக்கியுள்ள படம் ‘பறவைக் கூட்டில் வாழும் மான்கள்’
ரெட்டை வால் குருவி, சதி லீலாவதி, மறுபடியும், என ஒரு ஆணுக்கும் 2 பெண்களுக்குமான காதலையும், உறவுச் சிக்கலையும் சொல்லும் படங்களை அதிகம் இயக்கியவர் பாலு மகேந்திரா. ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி தொடரில் தான் இயக்கிய ‘பறவைக் கூட்டில் வாழும் மான்கள்’ படத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் பாரதிராஜா. பாலு மகேந்திராவுக்கு சமர்ப்பணம் செய்ததாலோ என்னவோ அவரது பாதையிலே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் பாரதிராஜா.
திருமணமாகி மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் 2 குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார் கிஷோர். மெட்ரோ ரயில் பயணத்தில் ஒருமுறை தவறுதலாக விஜயலட்சுமியின் போனை கிஷோர் பயன்படுத்த, அவர்களுக்குள் நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பு காதலாக மாற, இந்த விஷயத்தை ரம்யா நம்பீசனிடம் சொல்கிறார் கிஷோர். தன் கணவரையும், குழந்தைகளையும் விஜயலட்சுமிக்கு விட்டுக் கொடுத்து விடைபெற திட்டமிடுகிறார் ரம்யா நம்பீசன். இதுபற்றி பேச ஒரு இரவில் விஜயலட்சுமியை வீட்டுக்கு வரவழைக்கிறார். அந்த இரவில் அவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டம்தான் இப்படத்தின் கதை.
காதலிக்கும் மனைவிக்கும் இடையே ஊசலாடும் காதலனாக கிஷோர், காதலின் மனைவியை நேருக்கு நேர் சந்திக்க திணறும் காதலியாக விஜயலட்சுமி, கணவனின் புதிய காதலை புரிந்துகொள்ளும் மனைவியாக ரம்யா நம்பீசன் என்று ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கிஷோரின் அப்பாவாக நடித்துள்ள டெல்லி கணேஷ், சில நிமிடங்களே வந்தாலும் பச்சென்று மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்.
கிராமத்து காதல் கதைகளில் வெளுத்து வாங்கிய பாரதிராஜா, தன்னால் மரபுகளையும் மீறும் நகரத்து காதல் கதைகளையும் இயக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். இந்தக் குறும்படத்தின் மொத்த நீளம் 46 நிமிடங்கள். இதில் சுமார் 30 நிமிடங்களை ஒரே வீட்டுக்குள் வைத்து எடுத்தாலும், அலுப்புத் தட்டவில்லை.
அப்பா சிகரெட் பிடிப்பதைப் பார்த்து குழந்தைகள் கெட்டுப் போகக் கூடாது என்று ‘டீச்சர் 1,000 சிகரெட்களை பிடிக்கணும்னு அப்பாவுக்கு பனிஷ்மெண்ட் கொடுத்திருக்காங்க. அதான் தொண்டையும் கண்ணும் எரிஞ்சாலும் சிகரெட் பிடிக்கறாரு’ என்ரு சொல்லிவைக்கும் அம்மா கேரக்டரின் சிந்தனை புதுசு. அதை மேலும் மெருகூட்டுவதுபோல் அவர் ஒவ்வொரு முறையும் சிகரெட் பிடித்த பிறகு வீட்டு சுவரில் மாட்டப்பட்டுள்ள ஸ்லேட்டில், ஒரு எண்ணைக் கூட்டி எழுதுவது பாரதிராஜா டச்.
புதிய களத்தில் கதை சொல்ல முயலும் பாராதிராஜாவுக்கு கை கொடுத்து படம் முழுக்க துணையாக இருக்கிறார் இளையராஜா. இருவரின் கெமிஸ்ட்ரிக்கு இது ஒரு புது உதாரனம். கிஷோர் – விஜயலட்சுமி காதல் வளரும் காலகட்டத்தை ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுடன் இணைத்துள்ள இளையராஜா, படம் முழுக்க மென்மையான இசையை வழங்கி கதையுடன் ஒன்றியிருக்க செய்திருக்கிறார்.