ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கான்ஸ் திரைப்பட விழா என மேற்கத்திய நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களின் மிக முக்கிய சடங்கு ரெட் கார்ப்பெட். விழா அரங்கத்துக்கு வெளியில் விஐபிக்களுக்காக விரித்து வைக்கப்பட்டுள்ள சிவப்பு கம்பளத்தில் சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட உடைகளுடன் வலம் வருவது வழக்கம். அதில் யார் சிறப்பாக உடையணிந்து வந்தார் என்று ஒவ்வொரு முறையும் சிறு பட்டிமன்றமே நடக்கும். அந்த உடைகளை அணியும் விஐபிக்களுடன் அதை வடிவமைத்த ஃபேஷன் டிசைனரைப் பற்றியும் விவாதங்கள் நடக்கும்.
அந்த வகையில் இப்போது நடந்த கான்ஸ் திரைப்பட விழாவிலும் பிரபலங்கள் அணிந்துவந்த உடை பேசு பொருளாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரபலங்கள் சிலர் அணிந்துவந்த உடைகளைப் பார்ப்போம்.
சாரா அலிகான்
அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா வடிவமைத்த லஹங்காவை அணிந்து இந்த முறை கான்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தார் சாரா அலிகான். இந்த உடைக்கு நிகராக பழங்கால இந்திய நகைகளை அவர் அணிந்து வந்திருந்தார்.
மனுஷி சில்லார்
முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லார், இந்த முறை ரெட் கார்ப்பெட்டில் Fovari என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட வெள்ளை நிற கவுனை அணிந்து வந்தார். மிதமான மேக்கப்பில் கூந்தலை கட்டாமல் காற்றில் மிதக்க விட்டபடி அவர் நடந்துவந்தது பலரது நெஞ்சத்தை கிள்ளியது.
ஈஷா குப்தா
வித்தியாசமான வேலைப்பாடுகளைக் கொண்ட pastel pink நிற கவுனில் நிகழ்ச்சிக்கு ஆஜராகி இருந்தார் ஈஷா குப்தா. Nicolas Jebran Couture என்ற ஃபாஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கவுன், அவரது ஒரு காலை மட்டும் முழுமையாக மறைக்காமல் முழு சுதந்திரம் கொடுத்த நிலையில் இருந்தது. இந்த கவுனுக்கு ஜோடியாக சில்வர் நிறத்தில் ஹை ஹீல்ஸ் காலணிகளை அவர் அணிந்திருந்த ஈஷா குப்தா, உடையின் வண்ணத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மேக்கப் போட்டிருந்தார்.
எல்.முருகன்
நடிகைகள் பலரும் இந்திய பாரம்பரியத்தைவிட மேற்கத்திய நாகரிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க, அதற்கு நேர்மாறாக இந்திய பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் இருந்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன். அந்த வேஷ்டி சட்டைக்கு மேல் அணிந்திருந்த மேல்துண்டின் மத்தியில் தேசிய கொடியின் உருவத்தை பொறித்திருந்தார். “பிரபல ஃபேஷன் டிசைனர்கள் யாரும் இதை வடிவமைக்கவில்லை. எங்கள் ஊரின் சாதாரண டெய்லர் ஒருவர் தைத்துக் கொடுத்த டிரஸ் இது” என்று அடக்கமாய் தன் உடையைப் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.