அகமதாபாத்தில் 2000 முதல் 20212 வரையிலான காலக்கட்டம். மூன்று நண்பர்கள். விளையாட்டுத்துறையில் இருக்கும் ஆர்வத்தினால் ஒரு விளையாட்டுப் பயிற்சி மையத்தையும், விளையாட்டுப் பொருட்கள் கடையையும் திறக்க நினைக்கிறார்கள். அப்போது எதிர்பாராமல் நடந்த குஜராத்தில் நிலநடுக்கம், அதன்பிறகு நடக்கும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என இரண்டு சம்பவங்களும் அவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை உருவாக்குகிறது என்பதே ஹிந்திப்படமான ‘கை போ ச்சே’.
பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய The 3 Mistakes of My Life, என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
இதை தழுவிதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது என்ற கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இவர்கள் இருவருக்கும் விளையாட்டு வீரர்கள் கதாபாத்திரம். இவர்களது வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தில் மொய்தீன் பாய் என்ன செய்கிறார் என்பதே கதை என லால் சலாம் பற்றி பேச்சு அடிப்படுகிறது.
ரஜினிக்கு இதில் கெஸ்ட்ரோல்தான் என்றாலும் பவர்ஃபுல்லான கதாபாத்திரம் என்கிறார்கள்.
சேத்தன் பகத் எழுதிய கதையின் உரிமையை வாங்கி இப்பட த்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்களா அல்லது அந்த கதை, கதாபாத்திரம், சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு இவர்களாகவே ஒரு புதிய திரைக்கதையை வடிவமைத்து இருக்கிறார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
’பாகுபலி’ ராஜமெளலியின் அடுத்தகுறி ‘மகாபாரதம்’
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். இந்த இரு படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மவுசு உலகளவில் அதிகரித்து இருக்கிறது.
இதனால் இவர் அடுத்து என்ன பண்ண போகிறார் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறது தென்னிந்திய சினிமா.
இந்நிலையில் ராஜமெளலி, ‘மகாபாரதம்’ புராணக்கதையில் அதிக ஆர்வம் காட்டிவருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
‘மகாபாரதம்’ மிகப்பெரிய கதை மட்டுமில்லை, மிகவும் சிக்கலான கதையும் கூட. இந்த புராணக் கதையை பல்வேறு வடிவங்களில் நாம் கண்டுகளித்திருக்கிறோம். 250 வார தொலைக்காட்சி தொடராகவும் கூட பார்த்து விட்டாகிவிட்டது. இதனால் மகாபாரதத்தை சினிமாவாக எடுக்க வேண்டுமானால், பத்து பாகங்களாக, ஒவ்வொரு பாகமும் சில மணிநேரம் ஓடக்கூடியதாக எடுக்கவேண்டும்’ என்று தனது நண்பர்களிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார் ராஜமெளலி.