திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முதல் முறையாக ஒரு அமைச்சர் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கு முன்பு நடந்த இரண்டு அமைச்சரவை மாற்றங்களிலும் அமைச்சர்கள் யாரும் நீக்கப்படவில்லை.
2022 டிசம்பர் மாத மத்தியில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் போகிறார் என்ற செய்திகள் பரவின. அப்போதே அமைச்சரவையிலிருந்து சிலர் கழற்றி விடப்படுவார்கள் என்ற பேச்சு கிளம்பியது. டிசம்பர் 14ஆம் தேதி அவர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அமைச்சரவையிலிருந்து யாரும் நீக்கப்படவில்லை. சில இலாகா மாற்றங்கள் மட்டும் நடந்தது.
இதற்கு முன்பு 2022 மார்ச் மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், சாதிய ரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியதையடுத்து, அவரிடமிருந்த துறை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான சிவசங்கரிடம் தரப்பட்டது. சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ராஜ கண்ணப்பனுக்கு அளிக்கப்பட்டது. அப்போதும் யாரும் நீக்கப்படவில்லை.
இந்த முறை பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டிருக்கிறார்.
நாசரின் ஆரம்பக் கால அரசியல் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாரத்திலேயே இருந்தது.
பள்ளிக் காலத்திலேயே அவரது திமுக பற்று தொடங்கிவிட்டது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 1980களில் திமுகவில் இளைஞரணி பலப்பட்ட நேரத்தில் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கமாகியிருக்கிறார். ஸ்டாலினின் இளைஞரணி சுற்றுப் பயணத்தின் போதெல்லாம் அவருடன் சென்றவர்.
1980களில் இருந்து தீவிர திமுக அரசியலில் இருந்தாலும் அவருக்கு தேர்தல் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.
2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஆவடி நகர சேர்மனாக பதவி பெற்றார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போட்டியிட்டார். 1395 வாக்குகளில் தோற்றார்.
2021 தேர்தலில் மீண்டும் ஆவடி தொகுதியில் மாஃபா பாண்டியராஜனிடமே போட்டி. இந்த முறை 54,695 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
முதல் முறை சட்டப் பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு உடனடியாக அமைச்சர் பதவி கிடைக்காது.
ஆனால் நாசருக்கு கிடைத்தது. காரணம், முதல்வர் ஸ்டாலினுக்கு நாசர் மீது இருந்த மதிப்பு. கூடவே அமைச்சர் மாஃபாவை வீழ்த்தியவர் என்ற பெருமையும் இருக்க அமைச்சரானார் ஆவடி நாசர். பால்வளத் துறை அவருக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால், அமைச்சரானப் பிறகு அவரைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள்.
நாசர் அமைச்சராக இருந்த பால்வளத் துறையில் பல பிரச்சினைகள் வந்தன.
பால் கொள்முதலில் குளறுபடிகள் இருப்பதாக செய்திகள் வந்தன. அடுத்து பால் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்தன. பல மாவட்டங்களில் பால் காலையில் குறித்த நேரத்தில் கிடைக்கவில்லை. பால் முகவர்கள் போராட்டங்களை நடத்தினர்.
இந்தப் பிரச்சினைகளில் வேகமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் நாசர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இதனால் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது.
ஆவடியில் காவல்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயன்றார் என்று நாசரின் மகன் ஆசிம் ராஜாவின் புகார் வந்தது. இந்தப் புகார் மட்டுமல்லாமல் வேறு சில புகார்களும் ஆசிம் ராஜாவின் மீது வைக்கப்பட்டன. ஆசிம் ராஜா ஆவடி மாநகர கழகப் பொறுப்பாளாராக இருந்தார்.
புகார்கள் தொடர்ந்து வந்ததால் ஆசிம் ராஜாவின் கட்சிப் பொறுப்பு பிப்ரவரி மாதம் பிடுங்கப்பட்டது. முதல்வர் நாசர் மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் என்பதை மகனின் பதவிப் பிடுங்கல் காட்டியது.
இவை தவிர அமைச்சர் நாசர் பொதுவெளியில் நடந்துக் கொண்ட விதங்களும் கட்சிக்குள் அவர் மீது அதிருப்தியை உண்டு பண்ணின.
இந்த வருட ஜனவரி மாதம் திருவள்ளூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்ட ஆய்வுப் பணியின் போது தனக்கு நாற்காலி எடுத்து வர தாமதித்த தொண்டர் மீது கீழே கிடந்த கல்லப் பொறுக்கி வீசினார். அவர் கல்லை வீசிய வீடியோ இந்திய அளவில் வைரலானது.
திருத்தணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தவறுதலாய் மைக்கை தட்டிவிட அவர் முதுகில் குத்தினார் அமைச்சர் நாசர்.
கட்சிக்காரர்களிடமும் அதிகாரத் தன்மையோடு நடந்துக் கொள்வார், கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள் என்கிறார்கள் கட்சிக்காரர்கள். இவை குறித்தும் கட்சித் தலைமையிடம் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
திருவள்ளூரில் ஒரு ஆலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது கிறிஸ்துவர்களின் ஜெபத்தால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்று பேசியதும் சர்ச்சையைக் கிளப்பியது.