அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர். கமல் என தமிழ் சினிமாவின் பெரிய ஜாம்பவான்கள் பலர் முயற்சித்தும் முடியாமல் போனது. 60 ஆண்டுகளாக நிறைவேறாத கனவுப்படமாக இருந்த பொன்னியின் செல்வனை மணி ரத்னம் 2022-ல் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார்.
பொன்னியின் செல்வன் முதல்பாகம், பாக்ஸ் ஆபீஸில் 500 கோடியைக் கடந்து வசூல் சாதனை படைத்தது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், பாலிவுட்டின் அக்ஷய் குமார் நடித்த 2.0’ படம்தான் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற சாதனையை எட்டியிருந்தது. இப்படம் சுமார் 625 கோடி வசூல் செய்திருந்தது. இதனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
2023, ஏப்ரல் 28-, தேதி ‘பொன்னியின் செல்வன் -2’ வெளியானது. இப்படம் வெளியானது முதலே இதன் வசூல் குறித்த சர்ச்சைகள் இருந்தன. சமூக ஊடகங்களில் ஒவ்வொருத்தரும் அவர்களது மனம் போன போக்கில், இவ்வளவு வசூல் என்று பதிவிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் படத்தைத் தயாரித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வசூல் பற்றி மெளனம் காத்தன.
பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம், பொன்னியின் செல்வன் வசூல் குறித்து சூடான கருத்துகளையும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ’பொன்னியின் செல்வன் -2’ வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் இப்படத்தின் வசூல் குறித்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருக்கிறது.
2023 மே 8-ம் தேதி அன்று படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் இப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவித்து இருக்கிறது.
இதனால் ’பொன்னியின் செல்வன் -2’, 2023-ல் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாகி இருக்கிறது. பொங்கலுக்கு வெளியான விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, 297.55 கோடி வசூல் செய்ததே இந்த ஆண்டின் அதிகப்பட்ச வசூலாக இருந்தது. இப்பொழுது வாரிசு படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் முந்தியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம், இதே 300 கோடி வசூலை வெறும் 6 நாட்களில் கடந்திருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் இதே இலக்கை எட்ட இரண்டு வாரங்கள் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.