‘அமைதியான மாநிலத்தில் போலி வீடியோக்களை பரப்பி அமைதியை சீர்குலைக்க கூடாது’ – தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர் என வதந்தி பரப்பிய யூடியூபர் மனிஷ் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்படி கருத்து சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டைக் குறித்து நீதிபதி சொல்லியிருக்கிறார். இது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பொருந்தும்.
உண்மையா பொய்யா என்று தெரியாத – சமூக ஊடகங்களில் வெளியான ஒரு ஆடியோ அவரது அமைதியை குலைத்திருக்கிறது. திமுகவில் அவர் குறித்த ஒர் கனத்த அமைதியை உருவாக்கியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் சேர்த்திருக்கிறார்கள் என்று பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோவை தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
அதற்கு பிடிஆர் மறுப்புத் தெரிவித்தார். அது Deep Fake என்று ஆடியோ, வீடியோ உதாரணங்களுடன் மறுப்பு வீடியோ வெளியிட்டார்.
ஆனால், திமுக தலைமை அது குறித்து பேசாமல் இருந்தது. மே 2 ஆம் தேதி முதல்வர் வெளியிட்ட உங்களில் ஒருவன் வீடியோ பேட்டியில் நிதியமைச்சர் ஆடியோ குறித்து பேசினார்.
அந்த வீடியோவில் ’நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி..?’ என்ற கேள்விக்கு ’இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியா இருக்கு. மேலும் இதுபற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை’ என்று அந்த ஆடியோ சர்ச்சையைக் கடந்து சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சரவை மாற்றப்படும். பிடிஆரை மாற்றுகிறார்கள். நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்துக் கொண்டிருந்த நிலையில் முதல்வரின் இந்த பதில் சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கு அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. முதல்வரின் இந்தப் பதிலுக்கு முன்பாக மே 1ஆம் தேதி முதல்வர் இல்லத்துக்குச் சென்ற பிடிஆர் சில நிமிடங்கள் முதல்வரிடம் பேசியதாக தகவல்கள் வெளிவந்தன. ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்தார் என்று சொல்லப்பட்டது.
மே 2இல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துக் கொண்டார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன நடந்தது என்று அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. ஆனால் முதல்வர் பிடிஆரிடம் பேசவில்லை என்ற செய்தி பரவியது. கூட்டம் முடியும் முன்பே பிடிஆர் கிளம்பிவிட்டார் என்ற செய்தியும் வெளியே வந்தது.
இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மே 7,8,9 தேதிகளில் 1222 இடங்களில் சாதனை விளக்க பொதுக் கூட்டங்களை நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மதுரை சிம்மக்கல்லில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் மாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதில் பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சன் பேசியிருக்கிறார்.
மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது.
வரும் புதன் கிழமை தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது என்கிறது அந்தச் செய்தி. இதில் எத்தனை உண்மை என்பது தெரியவில்லை.
புதன் கிழமை வரப் போகும் அமைச்சரவை மாற்றத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கழற்றி விடப்படுகிறார், அவரது பொறுப்புக்கு தங்கம் தென்னரசு வருகிறார் என்றும் சொல்லுகிறது.
நிதியமைச்சரைத் தவிர வேறு சில மாற்றங்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்றப் பிறகு சாதி ரீதியிலான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டு போக்குவரத்து துறை எஸ்.எஸ்.சிவசங்கரனுக்கு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதுதான் இரண்டாண்டு திமுக ஆட்சியில் அமைச்சரவையில் நடந்த மாற்றங்கள். இதுவரை யாரும் நீக்கப்படவில்லை.
திமுக ஆட்சி வந்ததிலிருந்தே அரசுக்கு தலைவலியாக அமைச்சர்கள்தாம் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் பேச்சுக்கள், உதிர்க்கும் வார்த்தைகள், பொதுவெளியில் அவர்களின் செயல்பாடுகள் பல திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை தருபவையாகவே தொடர்கின்றன. அதற்காக அவர்களை எச்சரிக்கும் விதமாக பதவி மாற்றங்கள், இறக்கங்களை திமுக அரசு செய்யலாம்.
ஆனால் மற்ற அமைச்சர்கள் போல் பிடிஆரை கையாள முடியாது.
மற்ற அமைச்சர்களுக்கு இருக்கும் பிம்பத்துக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது இருக்கும் பிம்பத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
மற்ற அமைச்சர்கள் அரசியல்வாதிகளாக பார்க்கப்படுகிறார்கள்.ஆனால் பிடிஆர் அப்படி பார்க்கப்படவில்லை.
படித்தவர், பல நாடுகளில் பணிபுரிந்தவர், பொருளாதரம் தெரிந்தவர், பொருளாதார அறிஞர்களிடம் அவர்களுக்கு சமமாக பேசக் கூடியவர், புள்ளிவிவரங்களால் எதிராளியை மடக்குபவர், மத்திய அரசுக்கு தீவிர சவாலாக இருப்பவர், திராவிடக் கொள்கைகளை எல்லா மேடைகளிலும் பேசுபவர், சில்லறை அரசியல் செய்யாதவர்…இப்படி பல பிம்பங்கள் இருக்கின்றன.
பிடிஆரை நீக்குவதோ இறக்குவதோ இலாகாவை மாற்றுவதோ தமிழ்நாடு அரசு குறித்து தவறான கருத்தை உருவாக்கும்.
அது மட்டுமில்லாமல் திமுக தலைமையின் குடும்பத்தினரைக் குறித்து பேசியதெல்லாம் உண்மை என்பது போன்ற பிம்பமும் கிடைக்கும்.
அதனால் திமுக தலைமை அவரை மாற்றுவதற்கு தயங்கலாம். தள்ளிப் போடலாம். ஆனால் முன்பு போன்று பிடிஆரால் இனி செயல்பட முடியுமா என்றால்..அது சந்தேகமே.
இப்போது நீக்கமோ மாற்றமோ இல்லாமல் இருக்கலாம். கை குலுக்கிக் கொண்டு அமைதியாக பணிகளைத் தொடரலாம்.