No menu items!

Rinku To Tushar – IPL -லில் கிடைத்த முத்துக்கள்!

Rinku To Tushar – IPL -லில் கிடைத்த முத்துக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு சில நட்சத்திர வீரர்கள் கிடைப்பார்கள். தங்களை போஷாக்காக வளர்ப்பதற்காக பிசிசிஐக்கு ஐபிஎல் கிரிக்கெட்  செய்யும் பதிலுதவி இது. ஷிகர் தவன், பும்ரா, சூர்யகுமார் யாதவ், கில், நடராஜன், முகமது சிராஜ், ஹர்ஷ்தீப் சிங் என்று இப்படி  ஐபிஎல்லால் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வீரர்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாதித்துக்கொண்டிருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களைப் பார்ப்போம்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்):

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு யஷஸ்வி ஜெய்ஸ்வால். கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தாலும், முழுமையாக வெளிச்சத்துக்கு வந்தது இந்த ஆண்டுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால், இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள ஜெய்ஸ்வால், மொத்தமாக குவித்துள்ள ரன்கள் 477. அவரது ஸ்டிரைக் ரேட் 160.60. அதிக ரன்களைக் குவித்துள்ள வீரர்கள் பட்டியலில் இப்போதைக்கு 2-வது இடத்தில் இருக்கிறார் ஜெய்ஸ்வால்.

சிறுவயதில் பானி பூரி விற்று கஷ்டப்பட்டு கிரிக்கெட்டில் பயிற்சி பெற்ற ஜெய்ஸ்வாலின் போராட்டங்கள் இந்த ஐபிஎல்லோடு முடிவுக்கு வரும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ரோஹித் சர்மா ஃபார்ம் இழந்துவரும் நிலையில், ஒரு அதிரடி ஓபனராக இந்திய அணியில் சேர இப்போதே துண்டு போட்டு வைத்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.

திலக் வர்மா (மும்பை இந்தியன்ஸ்):

சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பும்ரா வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்தியாவுக்கு லேட்டஸ்டாக கொடுத்திருக்கும் பரிசு திலக் வர்மா. ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்கள் சொதப்பினாலும், இந்த ஐபிஎல்லின் ஆரம்ப கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தனி நபராக தூக்கிப் பிடித்தார் திலக் வர்மா.

பொதுவாக டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் ஆடும் பினிஷர்கள், ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். அந்த வகையில் இந்த ஐபிஎல்லில் சிறப்பு கவனத்தை ஈர்த்திருக்கிறார் திலக் வர்மா. கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி ஆகிய 3 வகைப் போட்டிகளிலும் ஆடும் ஆற்றல் வாய்ந்த வீரராக திலக் வர்மா இருப்பார்” என்று அவரை ஆசிர்வதித்திருந்தார். கடந்த ஐபிஎல்லின் கடைசி காலத்தில் இருந்த வெற்றிகரமான ஃபார்மை இந்த ஆண்டும் தொடரும் திலக் வர்மா, இதுவரை 9 போட்டிகளில் 274 ரன்களைக் குவித்துள்ளார்.

ஜெஸ்வாலோடு ஒப்பிடும்போது இது குறைவான ரன்களாக தோன்றலாம். ஆனால் ஜெஸ்வால் ஆரம்பம் முதல் ஆடும் ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதையும், திலக் வர்மா கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்யும் பினிஷர் என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

துஷார் தேஷ்பாண்டே (சென்னை சூப்பர் கிங்ஸ்):

இந்த ஐபிஎல்லில் ஆரம்பத்தில் இவர்மீது ரசிகர்களுக்கு அதிகமாக ஈர்ப்பு ஏற்படவில்லை. முதல் போட்டியிலேயே இம்பாக்ட் பிளேயராக வந்து  50 ரன்களை விட்டுக்கொடுத்த இவரை பலரும் கிண்டலடித்தார்கள்.  அடுத்த ஆட்டத்திலும் 45 ரன்களை விட்டுக்கொடுக்க எதிரணிக்கு வெற்றிதரும் இம்பாக்ட் பிளேயர் என்றுகூட கூறினார்கள். முதல் 2 போட்டிகளில் நிறைய எக்ஸ்ட்ரா ரன்களையும் கொடுத்தார்.

ஆனால்  ‘இனி நோபால் வீசினால் புதிய கேப்டனின் கீழ் ஆடவேண்டி இருக்கும்’ என்று தோனி எச்சரிக்கை விட்டபின்பு இவரது பந்துவீச்சு முறையில் மாற்றமும், ஒழுங்கும் வந்துவிட்டது. எதிராளியை அசரடிக்கும் வேலம் இல்லாவிட்டாலும், மெதுவாக பந்துவீசி எதிராளியை ஏமாற்றி அவுட் ஆக்கும் லாவகம் இவருக்கு கைவந்தது. அடுத்தடுத்த போட்டிகளில் சரசரவென்று விக்கெட்களை வீழ்த்தினார்.

11 போட்டிகள் ஆடிய நிலையில் அதிக விக்கெட்களை வீழ்த்திய (19 விக்கெட்கள்) மூன்று பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார் துஷார் தேஷ்பாண்டே. இப்படியாக மீடியம் ஃபேஸ் பந்துவீச்சில் முக்கிய இடம்பிடிக்கும் வீரராக முன்னேறி வருகிறார்.

ஜிதேஷ் சர்மா (பஞ்சாப் கிங்ஸ்)

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு இப்போது பஞ்சமாக இருக்கும் விஷயம் விக்கெட் கீப்பர். ரிஷப் பந்த் காயமடைந்து ஓய்வில் இருக்க, அவருக்கு மாற்றாக நம்பியிருந்த கே.எல்.ராகுலும்  காயமடைந்தும், அவுட் ஆஃப் பார்மிலும் இருக்கிறார். சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷனின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.

இதனால் புதிய விக்கெட் கீப்பரை தேர்வுக்குழுவினர் தேடிக்கொண்டிருக்க, நான் இருக்கிறேன் என்று களத்தில் குதித்திருக்கிறார் ஜிதேஷ் சர்மா. பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட்கீப்பரான இவர்  இந்த ஐபிஎல்லில் இதுவரை 239 ரன்களைக் குவித்து, சிறந்த ஃப்னிஷராக இருக்கிறார். கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படுவதால் இந்திய அணியில் இவர் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரிங்கு சிங்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி 5 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டியதன் மூலம் தேர்வுக்குழுவின் ராடருக்குள் வந்திருக்கிறார் ரிங்கு சிங்.

ஏதாவது ஒரு ஆட்டத்தில் இப்படி ஆடுவது பெரிய விஷயமல்ல… தொடர்ந்து ஆடவேண்டும் என்று விமர்சனங்கள் வர, அதையும் செய்து காட்டிவிட்டார். இதுவரை நடந்த போட்டிகளில் மொத்தம் 316 ரன்களைக் குவித்துள்ளார் ரிங்கு சிங்.

கேகேஆஅர் அணியிலேயே இப்போதைக்கு அதிக ரன்களைக் குவித்துள்ள வீரர் இவர்தான் இப்படியே தொடர்ந்தால் இவர் இந்திய அணியின் நீலச் சட்டையை அணிவது நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...